PUBLISHED ON : நவ 21, 2014

முன்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பிலுமோடி, சிறந்த அரசியல்வாதி. அவர் பாராளுமன்றத்தில் நகைச்சுவை ததும்பப் பேசுவார். ஆளுங்கட்சியினரான காங்கிரஸ் கட்சியினரே அவரது பேச்சில் தங்களை மறந்து சிரித்து விடுவர். அவரது உடல் தோற்றமே சிரிப்பைத் தரும்.
ஒருநாள் பாராளுமன்றத்தில் அவர் பேசிக் கொண்டே நடு மையத்துக்கு வந்து அங்குமிங்கும் திரும்பிச் சுழன்று கொண்டே பேசினார். இதைக் கண்டு காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் எழுந்து, 'கனம் சபாநாயகர் அவர்களே... இந்த மன்றத்தின் விதிமுறைகளுக்கு மாறாக எதிர்கட்சி உறுப்பினர் பிலுமோடி அவைத் தலைவரான உங்களுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்று பேசுவது முறையா?' எனக் கேட்டார்.
அதற்கு பிலுமோடியோ, 'எனக்கு முன்புறம், பின்புறம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. நான் உருவத்தில் உருண்டையானவன். அதனால் நான் எந்தத் திசையைத் திரும்பிப் பார்த்தாலும் ஒன்றுதான்' என்று கூறவே, சபாநாயகரும் தன்னையறியாமல் சிரித்து விட்டார்.
