PUBLISHED ON : ஜன 31, 2014

குளவிகளின் கூட்டைப் பார்த்திருப்பீர்கள். மண்ணினால் உருவாக்கப்பட்ட அது, எவ்வளவு உறுதியானது என்பதையும் சோதித்துப் பாருங்கள். மண்ணைக் குழைத்துக் கூடு கட்டும் குளவி என்று ஒரு வகை குளவி உள்ளது. இவை அமைக்கும் கூடு அற்புதமாக இருக்கும். ஈரக் களிமண்ணை உருட்டி எடுத்துப் போய், அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, கால்களால் அழுத்தி, குழாய் போலவோ, குடம் போலவோ உருவாக்கும். இப்படி உருவாக்கிய (மண்) கூட்டினுள் பிறக்கப் போகும் தன் குழந்தைகளுக்கு, 'சுடச்சுட' உணவையும் சேகரித்து வைத்து, முட்டையிட்டு, வீட்டின் நுழைவாசலைக் கச்சிதமாக மண் உருண்டைகளைக் கொண்டு மூடிவிடும். இதே முறையில்தான் உஷ்ணப் பிரதேசங்களில் ஆசியா, ஆப்பிரிக்காவில் வாழும் மக்கள் தங்கள் குடியிருப்புக்களை (குடிசைகள்) குளவிகளைப் போல அமைத்துக் கொள்கின்றனர்.
களிமண்ணோடு, மண்ணையும் கலந்து கால்களினால் குழைத்து, உருவாக்கிய மண்ணினால், குடிசை வீட்டின் சுவர்களை எழுப்புகின்றனர். ஒரு அடுக்கு உருவாக்கிக் காய்ந்ததும், அதன் மீது மற்றொரு அடுக்கு மண் பூச்சைப் பூசுகின்றனர். இப்படி உருவாக்கிய மண் சுவர்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேல் பாழாகாமல் பாதுகாப்பளிக்கிறது. இப்படி மண் சுவர் எழுப்பிக் குடிசை அமைக்கும் முறையை மனிதன் குளவிகளிடமிருந்தே கற்றுக் கொண்டான் தெரியுமா?
