தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/படிக்க மாட்டேன்!

படிக்க மாட்டேன்!

படிக்க மாட்டேன்!


PUBLISHED ON : மே 24, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செல்வம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தான். புத்தகப் பையை எரிச்சலுடன் மேசையின் மேல் எறிந்தான்.

நாற்காலியில் அமர்ந்து இருந்த தந்தையைப் பார்த்தான்.

''அப்பா! ஆசிரியர் நடத்துகிற எந்த பாடமும் எனக்குப் புரியவில்லை. படிக்கவும் கடினமாக உள்ளது. எனக்குப் படிக்கவே பிடிக்க வில்லை. நாளையில் இருந்து பள்ளிக்கூடம் போக மாட்டேன். என்னை வற்புறுத்த வேண்டாம்,'' என்றான்.

''மகனே! அப்படி சொல்லக் கூடாது. நன்றாக படித்தால்தான், எதிர்காலத்தில் சிறப்பாக வாழ முடியும்,'' என்றார்.

''படிக்காதவர்கள் எல்லாம் வாழாமலா இருக்கின்றனர்?'' என்றான் செல்வம்.

''மகனே! கடினமாக இருக்கிறது என்பதற்காக ஒன்றை வெறுக்கக் கூடாது,'' என்றார்.

''நீங்கள் என்ன சொன்னாலும், நாளை நான், பள்ளிக்கூடம் போக மாட்டேன்!'' என்றான் பிடிவாதமாக.

''அதை நாளை பேசிக் கொள்ளலாம். பழம் வாங்க கடைத் தெருவிற்குப் போகிறேன். நீயும் வருகிறாயா?''

''நானும் வருகிறேன். எனக்குப் பிடித்த பழங்களை வாங்கித் தர வேண்டும்!''

இருவரும் கடைத் தெருவிற்கு வந்தனர். அங்கே பழக்கடை ஒன்றின் வெளியே நிறைய பலாப் பழங்கள் வைக்கப் பட்டு இருந்தன.

''அப்பா! பலாப்பழம் வாங்குங்கள்,'' என்றான் செல்வம்.

''இங்கே வாழைப்பழங்கள் உள்ளன. எளிதாக உரித்து சாப்பிடலாம். திராட்சைப் பழம் உள்ளது. அப்படியே சாப்பிடலாம். ஆரஞ்சுப் பழம் உள்ளது. சாறு பிழிந்து சாப்பிடலாம். அதை எல்லாம், விட்டுவிட்டு, பலாப்பழம் கேட்கிறாயே... அதை எளிதாக சாப்பிட முடியாது.

''அதன் வெளியே உள்ள முள் தோலை முதலில் அறுக்க வேண்டும். அப்படி அறுக்கும் போது, உள்ளே உள்ள பிசின் கையில் ஒட்டிக் கொள்ளும். அப்படி ஒட்டிக் கொள்ளாமல் இருக்க கையில் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பழத்தை அறுத்த பிறகு உள்ளே உள்ள சக்கைகளை எடுக்க வேண்டும். பிறகே பலாச் சுளை கிடைக்கும்.

''அப்போதும், அதை அப்படியே சாப்பிட முடியாது. உள்ளே உள்ள கொட்டையை எடுத்துவிட்டுச் சாப்பிட வேண்டும். இவ்வளவு கடுமையாக முயற்சி செய்து பலாச்சுளை சாப்பிட வேண்டுமா?'' என்றார்.

''அப்பா! இனிப்பான பலாச் சுளையை சாப்பிட எவ்வளவு துன்பமும் படலாமே!'' என்றான் செல்வம்.

''மகனே வாழ்க்கைக்கு உயர்வையும், சிறப்பையும் தருவது கல்வி. படிப்பதற்கு கடினமாக உள்ளது என்பதற்காக கல்வியை இகழ்ந்தாயே... இனிப்பான பலாச் சுளையைச் சாப்பிட எவ்வளவு துன்பமும் படலாம் என்கிறாயே!''

''அப்பா! எனக்கு அறிவு வந்து விட்டது. இனி படிப்பை என்றும் இகழ மாட்டேன். ஆர்வத்துடன் படிப்பேன்!''

''மகனே! கல்வியின் வேர்கள் கசப் பானவை. அதன் கனிகள் மிக இனிப் பானவை. துன்பப்படாமல் வளர்ச்சியோ, மகிழ்ச்சியோ இல்லை. உனக்கு பிடித்தமான பலாப் பழத்தையே வாங்குகிறேன். வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிடலாம்!''

''நன்றி! அப்பா!''

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us