தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பனித்துளியும் பாலும்

பனித்துளியும் பாலும்

பனித்துளியும் பாலும்


PUBLISHED ON : ஜூன் 10, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை என்ற நகரத்தில் நஞ்சன்குண்டு என்ற பெருஞ்செல்வர் இருந்தார். அவர் ஏவும் வேலைகளைச் செய்வதற்கு நிறைய வேலையாட்கள் இருந்தனர். அதனால், அவர் எந்த வேலையும் செய்வது இல்லை. சுவையான உணவு வகைகளை வயிறு முட்ட உண்பார். ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தி வந்தார்.

நாளாக நாளாக அவர் உடல்நிலை கெடத் தொடங்கியது. அவரால் படுக்கையை விட்டே எழுந்திருக்க முடியவில்லை. சாப்பிடவும் முடியவில்லை; உயிர் வாழ்வதே அவருக்குச் சுமையாகத் தோன்றியது.

புகழ் பெற்ற மருத்துவரிடம் சென்ற அவர், ''எவ்வளவு செலவு ஆனாலும் கவலை இல்லை. நீங்கள் என்ன செய்யச் சொன்னாலும் செய்கிறேன். என்னை எப்படியாவது பழைய நிலைக்குக் கொண்டு வாருங்கள்!'' என்றார்.

அவர் உடல்நிலையைச் சோதித்தார் மருத்துவர். அவர் என்னென்ன உண்கிறார். எப்படி வாழ்கிறார் என்பதையும் விசாரித்து அறிந்தார்.

''நான் சொல்கிறபடி செய்யுங்கள். ஒரே வாரத்தில் உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் தெரியும்,'' என்றார் மருத்துவர்.

''என்ன செய்ய வேண்டும்?'' என்று ஆர்வத்துடன் கேட்டார் அவர்.

''கதிரவன் தோன்றுவதற்கு முன் அதிகாலையில் எழுந்திருங்கள். உங்கள் வீட்டுத் தோட்டத்திற்குச் செல்லுங்கள். அங்கே இலைகளின் மேல் பனித்துளிகள் படிந்திருக்கும். அவற்றில் ஐந்து சொட்டு திரட்டுங்கள். அதை ஒரு குவளை பாலில் விட்டுக் கலக்கிக் குடியுங்கள். ஒரு வாரம் கழித்து என்னை வந்து பாருங்கள்,'' என்றார் மருத்துவர்.

ஒருவாரம் சென்றது. மீண்டும் மருத்துவரைச் சந்தித்தார் அவர். ''நீங்கள் சொன்னது போலவே செய்தேன். என் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் மோசமாகி விட்டது,'' என்றார்.

''உங்கள் உடல்நிலை தேறி இருக்க வேண்டுமே. ஐந்து சொட்டுப் பனித்துளியை நீங்கள் எப்படி திரட்டினீர்கள்?'' என்று கேட்டார் மருத்துவர்.

''என் வேலையாட்கள் கொண்டு வந்து தந்தனர்!'' என்றார் அவர்.

''நீங்களே அதிகாலையில் எழுந்து, ஐந்து சொட்டுப் பனித்துளியைத் திரட்ட வேண்டும். அப்போதுதான் அந்த மருந்து வேலை செய்யும். இல்லையேல் வேலை செய்யாது. ஒருமாதம் சென்று மீண்டும் வந்து என்னைப் பாருங்கள்!'' என்றார் மருத்துவர்.

ஒருமாதம் சென்றது. மருத்துவரிடம் வந்த அவர், ''நீங்கள் சொன்னது போலவே செய்தேன். என் உடல்நிலை தேறி உள்ளது. இப்போது என்னால் ஓடவும் முடிகிறது. பனித்துளிக்கும் பாலுக்கும் இவ்வளவு ஆற்றலா? என்னால் நம்ப முடியவில்லையே!'' என்று வியப்புடன் கேட்டார்.

''உங்கள் உடல்நிலை தேறியது பனித்துளியாலும், பாலினாலும் அல்ல. நீங்கள் அதிகாலையில் எழுந்தீர்கள். ஐந்து சொட்டுப் பனித்துளியை எடுப்பதற்காகப் பலமுறை குனிந்து குனிந்து எழுந்தீர்கள். நல்ல உடற்பயிற்சி செய்தீர்கள். அந்த உடல்பயிற்சிதான் உங்கள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியது!'' என்றார் மருத்துவர்.

''இனி நான் நாள்தோறும் உடற்பயிற்சி செய்வேன். என் உடல்நிலையை நன்றாக வைத்துக் கொள்வேன். அதிகம் சாப்பிட மாட்டேன்!'' என்றார் பணக்காரர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us