PUBLISHED ON : மே 27, 2023

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1994ல், 10ம் வகுப்பு படித்தபோது வகுப்பு ஆசிரியராக இருந்தார் பிரான்சிஸ். முத்துக்கள் கோர்த்தது போல் என் கையெழுத்து அழகாக இருக்கும். அதை பாராட்டுவார்.
தமிழில் வாக்கியங்கள் அமைத்தெழுத பயிற்சி தருவார். சொந்தமாக கற்பனை செய்து வாக்கியங்கள் எழுதுவேன். அதை பார்த்ததும், 'உனக்கு எழுதும் திறமை நிறைய இருக்கிறது. கூடுதலாக பயிற்சி செய்தால் வாழ்வில் உயரலாம்...' என வாழ்த்தினார்.
அதை மனதில் ஏற்று புத்தகங்கள் வாசிக்கத் துவங்கினேன். குடும்ப சூழல் காரணமாக, 10ம் வகுப்புக்கு பின் படிப்பைத் தொடர இயலவில்லை; இருப்பினும் வாசிப்பை தொடந்தேன். பத்திரிகைகளுக்கு துணுக்கு, கதை, கவிதைகள் எழுதி பயிற்சி பெற்றேன்.
அந்த பயிற்சியால், தினமலர் நாளிதழ் கோவையில் நடத்திய போட்டியில் வென்று இசை அமைப்பாளர் இளையராஜா கையால் பரிசு பெற்றேன். அது நிறைவு தந்தது.
தற்போது, என் வயது, 43; ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணி செய்கிறேன். என் திறனை அடையாளம் கண்டு ஊக்குவித்த ஆசிரியரை நன்றியோடு நினைவில் கொண்டுள்ளேன்.
- எம்.மகாலிங்கம், திருப்பூர்.
தொடர்புக்கு: 88258 75868
