
அது அழகிய காடு. உயர்ந்த மலைகளும், மரங்களும், மிருகங்களும் உண்டு. மலை அடிவாரத்தில் ஒரு குடும்பம் வசித்தது. வேட்டைத் தொழில் செய்து வந்தார் அப்பா. மாமிசம் எடுத்து வந்தால் தான் அன்றாடம் உணவு.
ஒரு நாள், சிங்க குட்டி ஒன்றை வேட்டையாடினார்.
மூன்று குட்டிகளில் ஒன்றை காணவில்லையே என பரிதவித்தது சிங்கம்.
'ஏதோ விலங்கு வேட்டையாடி இருக்கலாம்' என எண்ணி, மலை
உச்சியில் நின்று கடும் கோபத்துடன் கர்ஜித்தது.
'ராஜா... ஏன், இவ்வளவு கோபமாக இருக்கீங்க...' என்றது யானை.
நடந்ததை கூறியது சிங்கம்.
'நம் காட்டில் ஒரு தந்திரக்காரன் இருக்கிறான்... அவன் பெயர் நரி; அவனிடம் கேட்டால், கண்டறியும் வகையில் யோசனை சொல்வான்...'
சினத்தை தணிக்க முயன்றது யானை.
நரியைத் தேடி யானையும், சிங்கமும் புறப்பட்டன.
அவை ஒன்றாக நடப்பது கண்டு பயந்து ஓடின மற்ற விலங்குகள்.
'நரியே... எங்கு இருக்கிறாய்... உன் உதவி வேண்டும்...'
சத்தமிட்டது சிங்கம்.
துள்ளிக் குதித்து, 'உத்தரவிடுங்கள் ராஜா...' என்றபடி வணங்கியது நரி.
விவரத்தைக் கூறியதும், 'கண்டறிந்து வருகிறேன்...' என விடைபெற்றது.
இரவு வந்தது -
குகைக்குள் சென்ற சிங்கம், மனித நடமாட்டத்தை அறிந்து, பொறுமையாக கவனித்தது. வேட்டைக்காரர், இன்னொரு குட்டியையும் கொன்று துாக்கிப் போவதைக் கண்டதும், கோபத்தில் பாய்ந்தது. பரிதாபமாக இறந்தார் வேட்டைக்காரர்.
இரண்டு குட்டிகளை இழந்ததால் கண்ணீர் விட்டது சிங்கம். துாக்கம் வராமல் குகையில் புரண்டது.
காலைக் கதிரவன் உதித்தது. மலையில் ஏறி ஆக்ரோஷமாக கர்ஜித்தது சிங்கம்.
விலங்குகள் ஓடி ஒளிந்தன.
எதிரே வந்த கரடியிடம், 'காட்டில் வாழும் அனைத்து உயிரினமும், உடனே என் முன் வர வேண்டும்...' என உத்தரவு பிறப்பித்தது.
'சிறிது அவகாசம் கொடுங்கள் ராஜா... அழைத்து வருகிறேன்...'
விடைபெற்ற கரடி, யோசித்தது. மரத்தில் அமர்ந்திருந்த குருவியிடம், 'ஓர் உதவி செய்வாயா...' என கேட்டது.
'என்ன வேண்டும்... சொல்...'
'காட்டு உயிரினங்களை அழைக்கிறார் சிங்க ராஜா; காடு முழுவதும் சென்று சொல்ல உரிய நேரமில்லை. உயரத்தில் பறக்கும் நீ அழைத்து வர முடியுமா...'
கரடியின் வேண்டுதலுக்கு உடன்பட்டு பறந்தது குருவி.
உயிரினங்கள் எல்லாம் வந்து, குகை வாசலில் குழுமியிருந்தன.
ஆக்ரோஷமாக வந்து நின்றது சிங்கம்.
'என் குட்டிகளைக் கொன்ற வேட்டைக்காரனை, அடையாளம் தெரிகிறதா... பார்த்து சொல்லுங்கள்...' என்றது சிங்கம்.
வரிசையாக சென்று மனித உடலைப் பார்த்தன.
'மலையின் அடியில் பார்த்து இருக்கிறேன்...'
தயங்கியபடி சொன்னது முயல்.
'சரியாக தெரியுமா...'
அதட்டியது சிங்கம்.
'நன்றாக தெரியும்; விரும்பினால் அந்த குடிசையைக் காட்டுகிறேன்...'
வேட்டைக்காரர் குடும்பம் தங்கியிருந்த குடிசைக்கு சென்றது சிங்கம்.
குட்டியின் தோல் கிடப்பதைக் கண்டதும் வெகுண்டது.
ஒரு பெண்ணும், குழந்தையும் அங்கிருந்ததைக் கண்டு, ஆத்திரத்துடன் பாய்ந்தது. பயத்தில் பெண் இறந்தாள். குழந்தையை கவ்வியபடி, குகைக்கு வந்தது சிங்கம். குட்டியிடம் ஒப்படைத்து, 'உன் சகோதரர்களை கொன்றவனின் குழந்தை இது... இதன் முடிவை, நீ தான் தீர்மானிக்க வேண்டும்...' என்றது.
அதன் ஆத்திரம் சற்று தணிந்திருந்தது.
கோபம் பொங்க சீறிப்பாய முயன்ற சிங்க குட்டியை பார்த்து, கள்ளம் கபடமின்றி சிரித்தது குழந்தை. சற்றும் எதிர்பாராமல் குட்டியின் கன்னத்தை முத்தமிட்டது.
நெகிழ்ந்து, அங்கும், இங்கும் ஓடியது சிங்க குட்டி. செய்வதறியாது திகைத்தது.
மறுபடியும், குழந்தையை உற்று கவனித்தது.
சிரித்தது குழந்தை. இனிமையை ரசித்து மெய் மறந்தது குட்டி.
பின், 'இக்குழந்தை ஏதும் அறியாதது; தந்தை செய்த தவறுக்கு, குழந்தை என்ன செய்யும்... சற்று அவகாசம் கொடுங்கள். சிந்தித்து முடிவு எடுக்கலாம்...' என்றது குட்டி.
'உன் இஷ்டம் போல் செய்...' ஆர்வம் இன்றி கூறியது சிங்கம்.
'பழிக்கு பழி வாங்கும் வகையில், பெற்றோரை கொன்று விட்டீர்கள். இவனை, என் சகோதரன் போல வளர்க்கப் போகிறேன்...'
நெகிழ்ந்து சொன்னது சிங்க குட்டி.
பாசத்தைக் கண்ட சிங்கம், 'இவன் வளர்ந்து, வேட்டைக்காரனாக மாறி விட கூடாது... கவனமாக இரு...' என எச்சரித்தது.
'அப்படி ஏதும் அசம்பாவிதம் நடக்காது... என் உண்மை அன்பு, நல்வழிப்படுத்தி விடும். தவறான வழியில் நடக்க நேர்ந்தால், காட்டை விட்டே வெளியேறுகிறேன்... விரும்பியபடி தண்டனை கொடுங்கள்...' என்றது சிங்க குட்டி.
விலங்குகள் நெகிழ்ந்தன. குட்டியின் கருணை முடிவை ஏற்று, இரவு உணவுக்கு பின், விடைபெற்றன.
நள்ளிரவு நேரம் -
பசியால் அழ துவங்கியது குழந்தை.
அழுகைக்கான காரணத்தை ஆராய்ந்து, பசியைப் போக்கியது சிங்க குட்டி. இந்த செயல் கண்டு வியந்தது சிங்கம்.
நாட்கள் நகர்ந்தன.
கருணை மிக்கவனாக வளர்ந்தான் சிறுவன். இனிய நட்புடன் முதுகில்
சுமந்து காட்டை வலம் வந்தது, வளர்ந்த சிங்க குட்டி.
- தொடரும்...
- பா.குமரேசன்

