PUBLISHED ON : மே 16, 2020

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், தொரட்டி, சரஸ்வதி தொடக்கப் பள்ளியில், 1954ல், 5ம் வகுப்பு படித்த போது, வடிவம் மாறாமல் அழகாக எழுதுவேன்; பாட சம்பந்தமான படங்களை நேர்த்தியாக வரைவேன்.
இதைக் கண்ட வகுப்பாசிரியர், வீரபோகம் பட்டுசாமி, 'வருங்காலத்தில், டிராயிங் மாஸ்டராவாய்...' என்றார். புரியாமல் மகிழ்ச்சி அடைந்தேன். சில நாட்களுக்குப் பின், 'ஐயா, 'டிராயிங் மாஸ்டர்' என்றால் என்ன...' என்று அவரிடம் மெதுவாக கேட்டேன்.
சிரித்தபடியே, 'ஓவியம் கற்றுத்தரும் ஆசிரியர்...' என்றார். அப்போதும், அவர் சொன்னது விளங்கவில்லை.
கண்ணில் படுவதையெல்லாம் படங்களாக வரைந்து பழகி வந்தேன். அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வந்த, தலைவர்கள் காமராஜர், இந்திரா,
எம்.ஜி.ஆர்., கருணாநிதி படங்களை வரைந்து, அவர்களிடமே காட்டி, 'ஆட்டோகிராப்' பெற்றேன்.
எஸ்.எஸ்.எல்.சி., தேறியவுடன், கும்பகோணம், சித்திர கலா சாலையில் ஓவியம் பயின்றேன். தொடர்ந்து, பள்ளியில் ஓவிய ஆசிரியர் பணி கிடைத்தது. என்னிடம் பயின்றவர்கள், கல்லுாரி முதல்வர், சினிமா கலை இயக்குனர் என, பல பொறுப்புகளை வகிக்கின்றனர்.
இப்போது என் வயது, 76; அறியாத பருவத்தில், எனக்குள் இருந்த ஆற்றலை கண்டறிந்து, உற்சாகப்படுத்திய அந்த ஆசிரியரை போற்றி வாழ்கிறேன்.
- வெ.ஜெயராமன், கடலுார்.
