தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (10)

இளஸ்... மனஸ்... (10)

இளஸ்... மனஸ்... (10)


PUBLISHED ON : ஆக 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள மெடோஸ் ஆன்டிக்கு...

தொடர்ந்து, 'இளஸ்... மனஸ்...' பகுதியை படித்து வருகிறேன். எனக்கான பதில் கிடைக்கும் என்று நம்பி, என் அக்காவுக்காக, இக்கடிதத்தை எழுதுகிறேன்.

கல்லுாரியில், இளங்கலை, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி நான்; அக்கா தையல் கலை பயிற்சி முடித்து, வீட்டில் துணி தைக்கிறாள்; அவளுக்கு, காது கேட்காது; ஓரளவு தான் தெளிவாக பேசுவாள். அது, எனக்கும், அம்மாவிற்கும் மட்டும் தான் புரியும்.

பல நாட்களாக, மிக வருத்தமாக இருக்கிறாள் அக்கா. கேட்டதற்கு, 'என்னுடன் யாரும் பேசுவது இல்லை; எனக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை; என்னை ஒரு பொருட்டாக கருதுவதில்லை; யாராவது ஒருவர் உதவியுடன் தான் எப்போதும் செயல்பட முடிகிறது...' என, புலம்புகிறாள்.

எட்டாம் வகுப்பு வரை படித்த அவள், மிக அழகாக இருப்பாள். கைவினை பொருட்களை செய்யும் திறன்மிக்கவள். அவளது திறமை எதுவும் பெற்றோருக்கு புரியவில்லை.

எல்லாவற்றிற்கும் அப்பாவை சார்ந்திருப்பதால், அவர் மறுக்கும் எதையும் செய்ய முடியாது. அக்கா பேசுவது ஒன்றும் புரியவில்லை என்கிறார் அப்பா.

எனக்கு தெரிந்த ஊனமுற்றோர் பள்ளியை அணுகி, 'அக்காவுக்கு, 'ஸ்பீச்தெரபி' தர முடியுமா...' என்று கேட்டேன். காது கேளாதோர் பள்ளியில் சேர்க்க பரிந்துரைத்தனர்.

அப்பாவிடம் கேட்டதற்கு, 'பள்ளி துாரமாக உள்ளது; பாதுகாப்பாக சென்று வர முடியாது...' என்றார். அவரது அலட்சியம், அக்காவிற்கு வேதனையை அதிகரித்துள்ளது.

முதலில், எனக்கு திருமணம் முடிக்க முயற்சிக்கிறார் அப்பா. இதுவும், அக்காவிற்கு மிகுந்த மன உளைச்சலை தந்துள்ளது. என்னை பெண் பார்க்க வந்தால், கோபத்துடன் அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்கிறாள்.

'அக்காவிற்கு முதலில் திருமணம் செய்யுங்கள்...' என்றேன்; பெற்றோர் என் மீது எரிந்து விழுகின்றனர்.

தினமும், 'டிவி' நிகழ்ச்சிகளைப் பார்த்து, 'அதில் என்ன பேசுகின்றனர்' என்று கேட்கிறாள். அவளது குருட்டுத்தனமான கேள்விகள், எரிச்சலை தருகிறது; தினமும், ஏதாவது குறை கூறி புலம்பியபடியே இருக்கிறாள்.

மாதவிலக்கு நேரங்களில், வயிற்று வலியால் துடிப்பாள்; சாப்பிட்டவற்றை வாந்தி எடுப்பாள். இதனால், எதையும் சாப்பிட மறுப்பாள். சத்தான பொருட்கள் வாங்கி கொடுத்தாலும் தவிர்ப்பாள். உடல் இளைத்துள்ளதால், 21 வயதான அவள் உடல் எடை, 36 கிலோ தான் உள்ளது.

அவளது பிரச்னைக்கு தீர்வு கூறுங்கள் ஆன்டி

அன்பு மகளே...

உன் கடிதம் கண் கலங்க வைத்தது. நல்ல அழகும், கைவினைப் பொருட்கள் செய்யும் திறனும், தந்த இறைவன், உன் அக்காவுக்கு, செவித்திறனையும், பேசும் ஆற்றலையும் அளிக்க தவறியது ஏனோ...

அக்காவுக்கு உறுதுணையாக, பாடுபட்டு வரும் உன் சேவையை, பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இத்தகைய மாற்றுத்திறன் உள்ளோரிடம் பழகி, அவர்களிடம் உள்ள ஆற்றலை வெளிக்கொணர, நிறைய சகிப்பும், பொறுமையும் வேண்டும். அது உனக்கு இருக்கிறது; அதுவே, உன் பலம்.

அதன் மூலம், எதார்த்த வாழ்க்கையை அக்காவுக்கு புரிய வைத்து, அவள் திறமைகளை எடுத்துக் கூறி, பாராட்டி சந்தோஷப்படுத்து. அதனால், தாழ்வு மனப்பான்மை அகலும்; சக மனிதர்களை போல வாழும் எண்ணம் மேம்படும்.

அக்காவிற்கு, சுய சம்பாத்திய வழிகளை விளக்கி கூறி, தயார் செய்யும் கைவினைப் பொருட்களை, அக்கம் பக்கத்தில் விற்பனை செய்ய முயற்சிக்கலாம். அதில் முன்னேற்றம் ஏற்பட்டால், வங்கிக் கடன் பெற்று, சிறிய முதலீட்டில், கைவினைப் பொருட்கள் தயாரிக்கும், சிறு தொழிலில் தீவிரமாக இறங்கி, அவள் கவனத்தை திசை திருப்பலாம்.

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருந்தால், எந்த துறையிலும் சாதிக்கலாம். சுயமாக சம்பாதித்து, சொந்தக்காலில் நிற்கும் போது, உன் அக்காவுக்கு, உடற்குறைகள் பெரிதாக தோன்றாது. அது, 'பாசிட்டிவ்' எண்ணத்தை மேலோங்க வைக்கும். மனநிலையை மாற்றும்; பரந்த மனப்பான்மை உருவாகும்.

பொருளாதார தேவைகளை, தானே சமாளிக்கும் நிலையை உருவாக்கி தந்தால், மாபெரும் வெற்றியாக அமையும். இப்போதுள்ள பிரச்னைகள் தீரும்!

உன் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்!

- அன்புடன், மெடோஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us