தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (162)

இளஸ்... மனஸ்... (162)

இளஸ்... மனஸ்... (162)


PUBLISHED ON : செப் 10, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு பிளாரன்ஸ்...

என் வயது, 40; இல்லத்தரசியாக இருக்கிறேன்; இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்; மூத்தவள் வயது, 12; இளையவளுக்கு வயது, 10. வீட்டில் சமைக்கும் உணவை இருவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால், நொறுக்குத் தீனி என்றால் மொசுக்கி தள்ளுவர். குழந்தைகள் நொறுக்கு தீனியை விரும்ப, ஏதேனும் விஞ்ஞான ரீதியான காரணங்கள் இருக்கின்றனவா... வீட்டில் செய்யும் உணவை சாப்பிட வைக்க வழிவகைகள் இருந்தால் சொல்லுங்கள்.

இப்படிக்கு, கே.அம்புஜம்.

அன்பு சகோதரிக்கு...

உண்பது என்பது ஐம்புலன்களும் இயைந்து செய்ய கூடிய செயல். உணவை விரும்பி சாப்பிடுவதில், நாக்கின் பங்கு, 10 சதவீதம் தான். சிறுவர், சிறுமியருக்கு இறைவன் மிக சிறிய வயிற்றை தான் கொடுத்திருக்கிறான். பெரியவர்கள் சாப்பிடுவது போல, ஒரே நேரத்தில், ஒரு புல் மீல்ஸ் சாப்பிட முடியாது.

வளரும் குழந்தைகளுக்கு நாள் முழுக்க பசித்தபடியே இருக்கும். அதனால், அவர்கள் விரும்பியவற்றை கொறித்தபடியே இருப்பர். குழந்தைகளை நொறுக்குத்தீனி கவர்வதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன.

* வாசனை - சுவையும், வாசனையும் சேர்ந்த சுகந்த நறுமணம்

* வாய்நிறைவு - வாய்க்கு திருப்திகரமாக இருப்பது

* உள் சேர்க்கை - அதிக சர்க்கரை, அதிக சோடியம், அதிக கொழுப்பு

* இனிய நினைவுகள் - முந்தின முறை சாப்பிட்டதால் ஏற்பட்ட விருப்ப உணர்வு

* தோற்றம் - கவர்ச்சிகரமான நிறங்களில், அதீத கற்பனையை உருவாக்குதல் என்பனவாகும்.

நொறுக்குத்தீனியை ஒதுக்கி தள்ள என்னென்ன செய்யலாம் என பார்ப்போம்..

* மிலிட்டரி கட்டுப்பாடு இல்லாத இலகுவான உணவு அட்டவணையை குழந்தைகளுக்காக அமைக்க வேண்டும். அதில் நொறுக்கு தீனியும் இருந்தால் நல்லது; உணவு அட்டவணைப்படி என்றால் நொறுக்குத்தீனி குறைவாகவே சாப்பிடுவர்● படிப்பு, விளையாட்டு என, சுறுசுறுப்பாக இருக்க வைத்தல்

* ஆரோக்கிய நொறுக்கு தீனிகளை தயாரித்து, துரித உணவுக்கு மாற்றாக கொடுக்கலாம். இதில் எள் அடை, ரவை பணியாரம், எள் மிட்டாய், கடலை மிட்டாய், அவித்த பயிறுகள், பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, உலர் திராட்சை, அவித்த மரவள்ளிக்கிழங்கு போன்ற உணவுகள் குழந்தைகளை கவரும்

* பழங்களை அதிகம் கொடுக்கலாம்

* சாப்பிடும் போது, 'டிவி' பார்ப்பதை தடுக்கலாம்

* வண்ணமயமான, 'காய்கறி சாலட்' தயாரித்து கொடுக்கலாம்

* நொறுக்கு தீனியை விரும்பி தின்னும் பெற்றோர், குழந்தைகளை, 'தின்னாதே...' என அறிவுரை கூறுவது மடமை. உண்பதில், குழந்தைகளுக்கு அழகிய முன் மாதிரியாக திகழ வேண்டும் பெற்றோர்.

ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனிகளை தவிர்ப்பதால், ஆஸ்துமா, தோல்நோய், நாசியழற்சி, படிப்பில் கவனமின்மை, மலச்சிக்கல், துாக்கமின்மை போன்ற உபாதைகளில் இருந்து தப்பலாம்.

நொறுக்கு தீனி என்பது, போதை பழக்கம் போல, சிறுவர், சிறுமியரை அடிமைப்படுத்தும் கொடிய அரக்கன். அதனிடமிருந்து விடுவிப்போம்!

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us