
அன்புள்ள பிளாரன்ஸ் ஆன்டி...
என் வயது, 15; பிரபல பள்ளியில், 10 வகுப்பு படிக்கும் மாணவன். எங்கள் குடும்பம், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தது. வீட்டில் பிரமாதமான சமையல் எல்லாம் கிடையாது. பசிக்கு முறையாக உணவு கிடைக்கும்.
சமீபத்தில், என் அத்தை மகன், எங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்தான். நாங்கள் சூப் செய்து குடிப்பதில்லை என கேள்விப்பட்டு, 'சூப் இல்லா உணவு குப்பையில்...' என, தாறுமாறாக விமர்சித்தான்.
சிரித்தபடியே, 'மாறுவேஷம் போட்ட ரசம் தான் சூப்...' என்று பதிலடி கொடுத்தார் என் அம்மா. சூப்பின் சரித்திரத்தையும், அதை குடிப்பதால் ஏற்படும் சாதக பாதகங்களையும், விளக்கி சொல்லுங்க ஆன்டி...
இப்படிக்கு,
அ.தங்கதுரை.
அன்பு மகனுக்கு...
'சூப்' என்பது, இன்றோ, நேற்றோ, உருவான ரெசிபி அல்ல. ஆசிய நாடான, சீனா, ஜியான்ஜி மாகாண பகுதி, ஜியான்ரென்டாங் குகையில், பழங்காலத்தில் சூப் குடிக்கும் கிண்ணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, கி.மு., 20 ஆயிரத்தில் பயன்பட்டதாக தொல்பொருள் ஆய்வறிஞர்கள் கணித்துள்ளனர்.
கி.மு., 510ல், ரோமானிய சக்கரவர்த்தி சூப் குடித்ததாக வரலாற்று தகவல் உள்ளது. கி.பி., 700ல் மிதக்கும் மேகங்கள் என்ற பெயர் சூட்டி, பன்றி கொழுப்பு மிதக்கும் சூப்பை குடித்துள்ளனர் மக்கள்.
ஐரோப்பியர் சூப்பை சிந்தாமல், சிதறாமல் குடிக்க தேக்கரண்டியை, கி.பி.,1400ல் கண்டுபிடித்தனர். ஐரோப்பிய நாடான பிரான்ஸ் கையேந்தி பவன்களில், 'ரெஸ்டோ ராடிப்' என்ற வகை சூப் கி.பி., 1800ல் தயாரித்து விற்றுள்ளனர்.
கிழக்காசிய நாடான ஜப்பான், கொதிக்கும் நீரில், காய்ந்த நுாடுல்ஸ் போட்டு, சூப் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்தது.
சூப் என்பது, 'சுப்பா' என்ற லத்தீன் மொழி வார்த்தையிலிருந்து தோன்றியது. பிரெஞ்சு மொழியில், 'சூபே' எனவும், ஜெர்மனியில், 'சுப்' எனவும் அழைக்கப்படுகிறது.
இது ஆறு வகைப்படும்...
* மாமிசம், கடல் உணவு, காய்கறிகள் நீருடன் கலந்து செய்யப்படும் திடப்பொருட்கள் வடித்தெடுக்கப்பட்ட தனி திரவ சூப்
* அடர்த்தி அதிகமான கிரீம் சூப்
*காய்கறி சூப், துளியும் மாமிசம் கலக்காதது
* ப்யூரி, உருளைக்கிழங்கால் செய்யப்பட்டது
* வெலோட், முட்டைக்கருக்களும், கிரீம்களும் கலந்தது
* பிஸ்க்யூ, சிப்பி நண்டு, கடல் இறால் கலந்து செய்யப்பட்டது.
பொதுவாக, உணவு உண்பதன் துவக்கமாக சூப் குடிப்பர். பின், பசியைத் துாண்டும் பதார்த்தங்கள்; மூன்றாவதாக பிரதான உணவு; கடைசியாக சாலட் என்பது வழக்கமாக உள்ளது.
சூப்...
* உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்
* நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்
* காய்ச்சலில் இருந்து விடுதலை தரும்
* குறைந்த செலவில், சத்து மிக்கதாக தயாரிக்கக் கூடியது
* குளிரூட்டி பாதுகாக்க எளிதானது.
சூப் தயாரிக்கும் போது, உப்பு அதிகமாகி விடாமல் கவனித்து கொள்ள வேண்டும். அதிக உப்பு, உயர் ரத்த அழுத்த பிரச்னையை தரும்.
பொட்டாஷியம் சத்து அதிகம் இருந்தால், சிறுநீரக நோய்கள் வரும். எனவே, சூப் தயாரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
உன் அம்மாவின், மொபைல் எண்ணை கொடு. நுாற்றுக்கணக்கான, சூப் ரெசிபிகளை, 'வாட்ஸ் ஆப்' தகவலாக அனுப்புகிறேன்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.