PUBLISHED ON : நவ 02, 2019

அன்புள்ள மெடோஸ் ஆன்டி...
நீங்க பலருக்கு அறிவுரை சொல்லி, நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கீங்க. அதே மாதிரி, என் பிரச்னைக்கும் ஒரு வழி சொல்லுங்க...
தேனி மாவட்டம், கோம்பை கிராமத்தில், 7ம் வகுப்பு படிக்கும் மாணவி. எந்த பணி செய்தாலும், என் தாய் கண்டிக்கிறார். எதற்காக கண்டிக்கிறார் என்றே புரியவில்லை; என்ன தவறு செய்கிறேன் என்பதும் தெரியவில்லை. விளக்கம் கிடைக்காமல் திகைக்கிறேன்.
ஆன்டி... எனக்கு, அதிகமாக கோபம் வருகிறது; அதை அடக்க முடியவில்லை. இதனால், எல்லாரும் வெறுக்கின்றனர்; என் படிப்பு பாதிக்கப்படுகிறது. இதை எண்ணும் போது, மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
கோபத்தை அடக்கி, படிப்பில் கவனம் செலுத்த, நல்ல வழி காட்டுங்க ஆன்டி... ப்ளீஸ்!
சினத்தின் சீர்கேட்டால் பாதிக்கப்பட்டுள்ள அன்பு மகளே...
பள்ளி மாணவியான நீ, பொறுப்புடன், முன்கோப பிரச்னைக்கு தீர்வு காண விரும்புகிறாய். அதற்காக, முதலில் என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உன்னைப் போல், முன்கோபத்தை கட்டுப்படுத்த விரும்பும் அனைவருக்கும், இந்த பதில், பலன் தருவதாக அமையும்.
பெற்றோர், மிகவும் கஷ்டப்பட்டு, உன்னை படிக்க வைத்து, சமூகத்தில் மதிப்பு மிக்கவளாக உயர்த்த துடிக்கின்றனர். உன்னை நல்லொழுக்கத்துடன் வளர்த்து, ஆளாக்கும் பொறுப்பும் பெற்றோருக்கு உள்ளது.
பிள்ளைகள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி, நல்வழிப்படுத்துவது, மிகப்பெரிய கடமை. அதைத் தான், உன் தாயும் செய்கிறார்; அவரது கண்டிப்பு, உனக்கு எட்டிக்காயாக கசக்கிறது.
கண்டிக்கும் போது, கோபம் வருவதாக கூறுகிறாய்; இதில் இருந்தே, நீ செய்தது தவறு என, புரிகிறது அல்லவா... அம்மா கண்டிப்பது, ஏதோ ஒருவகையில், நலனுக்காகவே என புரிந்து, அதை பொறுத்து, நிதானமாக யோசித்து நல்வழியில் செல்ல பழகிக்கொள்.
கோபம் வரும் போது, அதை அடக்கி, ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால், அம்மா கண்டிப்பதில் உள்ள நியாயம் புரியும்.
'சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்...' என்று அறம் புகட்டுகிறார் வள்ளுவர். கோபம், ஒருவரை அழிப்பதுடன், அவர் சார்ந்த சுற்றத்தாரையும் அழித்து விடும் என்பது தான் இதன் பொருள்.
இந்தக் குறளை, எப்போதும் நினைவில் வைத்துக் கொள்; அன்றாட வாழ்வில், கோபமூட்டக் கூடிய பல சந்தர்ப்பங்கள் வரத்தான் செய்யும்; அத்தனையிலும், நாம் கோபத்தை காட்டுவதில்லையே!
எங்கு செல்லுபடியாகுமோ, அங்கு தான், கோபத்தைக் காட்டுகிறோம்; பொதுவாகவே, கோபம், மனிதர்களின் உடல்நலனை பாதிக்கிறது; ரத்த அழுத்தம், நெஞ்சு வலி, படபடப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சரி, கோபத்தை அடக்க என்ன வழி என்று பார்ப்போம்...
ஒருவரது சொல், செயல் கோபமூட்டும் வகையில் இருந்தால், உடனே, அந்த இடத்தை விட்டு அகன்று, வேறு விஷயங்களில் கவனத்தை திருப்பு. 10 நிமிடத்திற்குப் பின், எதனால் கோபம் வந்தது என, நன்றாக யோசித்து, அதில் நியாயம் இருப்பதாக பட்டால், அம்மா ஏற்கும் வகையில், நிதானமாக உன் கருத்தை தெரியப்படுத்து மகளே...
அப்போது, அந்த பிரச்னைக்கு முடிவு ஏற்படும். அம்மாவுக்கும், தன்னை மாற்றிக் கொள்ள வழி கிடைக்கும்; காரணமற்ற கோபமும் தணியும். இதை, உளவியல் வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
கோபத்தை கட்டுப்படுத்த, தியானம் மிகச் சிறந்த வழி மகளே... மனதை ஒருநிலைப்படுத்த தியானப் பயிற்சியை மேற்கொள்... இளம் வயதிலேயே செய்து வந்தால், வளர்ந்து ஆளாகும் போது, நீ சந்திக்கும் எவ்வளவு பெரிய சவால்களையும் சமாளிக்க முடியும்; கோபம் இருந்த இடமே தெரியாமல் மறைந்து போகும்.
மன அழுத்தத்தை போக்க உதவும், கைக்கு அடக்கமான ஒருவகை பந்து, கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி, கோபம் வரும் நேரங்களில், பயன்படுத்து; நாளடைவில், நல்ல பலன் கிடைக்கும்.
இந்த பயிற்சிகளை மேற்கொண்டால், கோபம் எப்படி இருந்தது என்பதை கண்டுபிடிக்க முடியாமல், நீயே ஆச்சரியப்படுவாய். செல்லத்தின் கோபம் தணிந்து, வாழ்க்கையில் எல்லா நலன்களும் கிடைக்கட்டும்.
-பல்லாயிரம் வாழ்த்துகளுடன், மெடொஸ்.
