தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (2)

இளஸ்... மனஸ்... (2)

இளஸ்... மனஸ்... (2)


PUBLISHED ON : ஜூலை 05, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 05, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள சகோதரி மெடோஸ்...

எங்கள் பூர்வீகம் திருச்சி அருகே, ஸ்ரீரங்கம்; வைதீக குடும்பம். 60 ஆண்டுகளுக்கு முன், சென்னை வந்து தங்கி விட்டோம். கர்நாடக இசையிலும், ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகம். நீளமான கூந்தல், எங்கள் குடும்ப பெண்களின் தனி அடையாளம்.

எங்கள் அம்மா வழி பாட்டிக்கு, கூந்தல், கெண்டைக்கால் வரை நீண்டிருக்கும்; கிரானைட் நிறத்தில் உயிர்த்திருக்கும். அம்மா வழி பாட்டி மட்டுமல்ல, எங்கம்மா, பெரியம்மா, சின்னம்மா, அவர்களின் வாரிசுகள் என, அனைவருமே நீளமான கூந்தலை ஆராதிப்பவர்கள்.

'நீளக்கூந்தல் குடும்பம்' என்ற பட்டப் பெயரும் உண்டு.

கூந்தல் பராமரிப்புக்கு, தனி அக்கறை எடுத்துக் கொள்வோம். தினமும், தேங்காய் எண்ணெயை எடுத்து, தலையில் இட்டு, சிக்கு இல்லாமல் வாருவோம்.

வாரம் ஒருமுறை, வெந்தயம், சிகைக்காய் துாள், செம்பருத்தி பூ, பச்சைப்பயிறு மாவுக் கலவையை இட்டு, முடியை அலசுவோம். தலைக்கு குளித்து, ஈர கேசத்தை பூ துவாலையால், 'சிட்... சிட்... சிட்...' என, அடித்து உலர்த்துவோம். அந்த அழகே தனி.

தலை கேசத்திலிருந்து ஒரு முடி உதிர்ந்தாலும், கவரிமான் போல் பதைபதைத்துப் போவோம்.

இதையெல்லாம் ஏன், விலாவாரியாக கூறுகிறேன் தெரியுமா...

எனக்கு, ஒன்பது வயதில், 4ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள். வெண்ணெய் பொம்மை போல் இருப்பாள். அவள் பிறந்த ஒரு ஆண்டில், மாதத்திற்கு ஒன்று வீதம், 12 மொட்டைகள் போட்டோம். பிரதமர் வீட்டுக்கு வந்தால், எப்படி விருந்து உபசரிப்போமோ அப்படி ஒரு சிறப்பு கவனிப்பை, அவள் தலை கேசத்தின் மீது வைத்தோம்.

மகள் கூந்தல், தரை வரை புரள வேண்டும் என்பதே விருப்பம். எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்தது. திடீரென்று கடந்த மாதம், என் மகள், வீட்டுக்குள் ஒரு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினாள்.

'நீளமான கூந்தல் வேண்டாம்; என் சிகையை, 'பாப் கட்டிங்' செய்து விடுங்கள்...' என்றாள்.

குடும்பத்தினர் அனைவரும், அவளை சமாதானப்படுத்த முயன்றோம். மூன்று நாட்கள் பள்ளிக்கு செல்லாமல், கொலை பட்டினி கிடந்து, வீம்பு பிடித்தாள். கடைசியில், என் கணவர், அவளை ஒரு அழகு நிலையத்திற்கு அழைத்துச் சென்று, குட்டை கூந்தல் ஆக்கினார். மகளை பார்க்க கண் கூசுகிறது; வனப்பு இழந்து காணப்படுகிறாள்.

அம்மாடி... எனக்கு ஒரு உதவி செய்வாயா... நீ தான் என் மகளுக்கு தகுந்த அறிவுரை கூறி, மீண்டும் நீளக் கூந்தல் வளர்க்க ஆவன செய்ய வேண்டும்.

அன்புள்ள சகோதரிக்கு!

உங்கள் கடிதத்தைக் கண்டதும், வாய் விட்டு சிரித்து விட்டேன். நாட்டில், பெண்களுக்கு எத்தனையோ பிரச்னைகளுக்கு மத்தியில், இப்படி ஒரு பிரச்னையா... கடந்த, 100 ஆண்டுகளில் தமிழ்ப் பெண்களின் ஆடையிலும், புறதோற்றத்திலும், பெரிய மாற்றங்கள் வந்து விட்டன.

ஒரு தமிழ் பெண் எப்படி இருக்க வேண்டும் என, ஆண்கள் வகுத்த எழுதப்படாத சட்டம் ஒன்று, தமிழகத்தில் இருக்கிறது.

நீளமான கூந்தல் வளர்த்திருக்க வேண்டும்; கண்ணுக்கு மை இட்டிருக்க வேண்டும்; மூக்குத்தி, காதணி, கழுத்து சங்கிலி, கை வளையல், கொலுசு மாட்டியிருக்க வேண்டும் என்பதுதான் அந்த சட்டம். இந்த மரபு சார்ந்த கட்டாயங்கள், உடைத்து ஏறியப்பட்டிருக்கின்றன.

நீளமாக கூந்தல் வளர்ப்பது, ஆணாதிக்கத்துக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பது போல.

பெண்ணியம் பேசும் வகுப்பாசிரியை, உங்கள் மகளுக்கு கிடைத்திருக்க கூடும். அவர் சொல்லித்தான், 'பாப் கட்டிங்' செய்ய விரும்பினாளோ என்னவோ. குட்டையாக முடி வைத்துக் கொள்வது குற்றமல்ல. பாப் கட்டிங் செய்வதால் பல நன்மைகள் உண்டு.

நீளக் கூந்தல் வைத்திருப்பது, ஆண்டு முழுக்க ஒரு விருந்தாளியை வீட்டில் வைத்து அறுசுவை விருந்து சமைத்து போடுவது போல் சிரமமானது. குட்டைக் கூந்தல் பெண்களுக்கு, பேன், பொடுகு, தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் வராது.

தினமும், தலைமுடிக்கு செலவழிக்கும் நேரத்தில், உபயோகரமான செயல்களை செய்ய முடியும். நீள கூந்தல் முகம் ஒரு வகை அழகு என்றால், குட்டைக் கூந்தல் முகம் மற்றொரு வகையில் அழகு.

கல்வியும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தான், பெண்களுக்கு அழகு.

சகோதரி... முடி பிரச்னையை, தலையில் வைத்திருக்காதீர்கள். கேசத்தை இன்று கத்தரித்தால், நாளை வளர்ந்து விடும். மகளின் விருப்பம் நாளுக்கு நாள் மாறக் கூடியது. நாளையே கண்ணோட்டம் மாறி, நீளக்கூந்தல் வளர்க்கலாம் என்பாள். அவள் போக்கில் விடுங்கள்.

இப்போதெல்லாம், ஒன்பது வயது சிறுமி, தன்னை, 21 வயது யுவதியாக பாவிக்கிறார். தனி விருப்பு வெறுப்பு வந்து விடுகிறது. உலக ஞானமும், வளர்ந்து இருக்கிறது.

கொள்ளு பாட்டி போல பாட்டி; அம்மாவை போல மகள்-; அக்காளை போல தங்கை என, கார்பன் காப்பிகள் எதற்கு... ஒவ்வொரு பெண்ணும் தனித்துவம் ஆனவள். மகளின் தலையில் காட்டிய அக்கறையை, அவள் ஆரோக்கியத்தில், படிப்பில் காட்டுங்கள்.

கீழ்க்கண்ட வரிகள் அன்பு மகளுக்கு- -

ஹாய் குட்டீஸ்... உன் குட்டை முடி முகத்தை மனக்கண்ணில் பார்க்கிறேன். புரட்சியை கல்வியில் காட்டு. எதிர்காலத்தில், ஒரு விஞ்ஞானியாகவோ, விண்வெளி வீராங்கனையாகவோ, அமைச்சராகவோ, பன்னாட்டு நிறுவன தலைமை அதிகாரியாகவோ உருவாகி துாள் கிளப்பு.

எல்லாவற்றிலும் கலகக்காரியாகாதே. அம்மாவின் அன்புக்கு அடிமையாக இரு; உன் வெற்றி, குடும்பத்தின் வெற்றியாக மாறட்டும்.

வந்தே மாதரம் வாண்டூஸ்!

- டன் கணக்கில் அன்புடன்

மெடோஸ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us