தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்.. மனஸ்! (46)

இளஸ்.. மனஸ்! (46)

இளஸ்.. மனஸ்! (46)


PUBLISHED ON : ஜூன் 13, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள பிளாரன்ஸ் ஆன்டிக்கு...

நான், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன்; வகுப்பில், முதல் மதிப்பெண் வாங்குவேன்; மிக அழகாக தமிழ் வாசிப்பேன். தமிழில், நுாறு சதவீதம் மதிப்பெண் வாங்கி தேர்ச்சி பெறுகிறேன்.

என் ஆசை எல்லாம் ஒன்று தான் ஆன்டி.

வருங்காலத்தில், தலைசிறந்த தமிழ் ஆசிரியராக வேண்டும் என்பதே! இதைப் பற்றி, என் தமிழாசிரியரிடம் தெரிவித்த போது, 'வேண்டாம்... அந்த பணிக்கு மதிப்பு கிடையாது...' என்றார்.

சொந்தமாக, கவிதை இயற்ற தெரியும்; எனக்கு தமிழ் மீது பற்று ஏற்பட வைத்தவரே வேண்டாம் என்கிறார்.

'வெளிநாடுகளில், தமிழாசிரியராக பணிபுரியலாம்...' என நண்பர்கள் கூறுகின்றனர்.

என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.

தமிழாசிரியராக வேண்டும் என்றால், பிளஸ் 1ல், எந்த பாட பிரிவு படிக்க வேண்டும்; அதன்பின், என்ன செய்ய வேண்டும் என தெளிவாக கூறுங்களேன்.

அன்பு மருமகனுக்கு...

அழகிய கையெழுத்துடன் கூடிய, உன் கடிதம் கண்டேன்; கடிதத்தில் ஒற்றை மேற்கோள், இரட்டை மேற்கோள் போடாதிருந்தாய். உரை நடை எழுதும் போது, தகுந்த இடங்களில் நிறுத்தற்குறிகளை போட கற்றுக் கொள்.

தாய்மொழி தமிழின் மீது உனக்கிருக்கும் காதல் பாராட்டத்தக்கது.

எந்த பாடப்பிரிவை எடுத்தாலும், லட்சம் பேர் படித்து பட்டம் பெறுகின்றனர்; முனைப்புடன், வெற்றி பெறும் உத்வேகத்துடன், எதிர்நீச்சல் அடிப்பவரே வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.

பொறியியல் படித்தால் வேலை இல்லை என்ற சூழ்நிலையிலும், தகுதியுள்ள மாணவர்கள், வளாக நேர்காணலில் வேலைக்கு சென்றபடி தான் இருக்கின்றனர்.

நீ, 11ம் வகுப்பில் சிறப்பு தமிழ் சார்ந்த பாட பிரிவை படி; இளங்கலை, முதுகலை பட்டங்களை தமிழில் பெறலாம்; பின், 'நெட்' என்ற தேசிய தகுதி தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும்.

முனைவர் பட்டப்படிப்பான, பிஎச்.டி., என்ற ஆய்வை முடித்தால், கல்லுாரியில், தமிழ் விரிவுரையாளர் பணியில் சேரலாம்; முதுகலை பட்டம் படித்த பின், பி.எட்., பட்டம் முடித்தால், பள்ளியில் தமிழாசிரியராக சேரலாம். இதற்கு, தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், தகுதி தேர்வும் எழுதி வெற்றி பெற வேண்டும்.

தமிழ் மொழியில் சிறந்து விளங்க கீழ்க்கண்ட ஆலோசனைகளைக் கடைப்பிடி:

* தமிழ் இலக்கணம் படி; தமிழ் இலக்கணத்துடன், போதிய கற்பனையும் இருந்தால், மரபுக் கவிதை எழுதலாம்; சிறந்த கவிதை தொகுப்புகளைப் படி

* தினமும், 50 பக்கம் தமிழ் இலக்கிய நுால்களை வாசி; வாசிப்பு பழக்கம் அதிகமானால், இலக்கண சுத்தமாய் தமிழ் எழுத, பேச வரும். தமிழின் உன்னதம் உன் மனதில் பதியும்

* தினமும், செய்தித்தாள்களை வாசி; பள்ளியிலிருந்து திரும்பியதும், ஏதேனும் செய்திகளை வாசிப்பதை பழக்கமாக்கிக் கொள்; தமிழை, ழ, ல, ள, ற, ர குழப்பமில்லாமல் உச்சரிக்க பழகு

* தினமும், தமிழில் சில பத்திகளை எழுதி பயிற்சி மேற்கொள்; இயந்திர கதியாய் படிக்காதே... விரும்பிப் படி. மொழியின் இனிமை உன் உணர்வில் வரும்.

தமிழ் படித்தோருக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அவை:

* கல்லுாரியில் விரிவுரையாளர், துறைத்தலைவர், புலத்தலைவர்

* மொழிபெயர்ப்பாளர்

* தமிழ் செய்தி வாசிப்பாளர், செய்திஆசிரியர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

* ரேடியோ வர்ணனையாளர்

* பத்திரிகை ஆசிரியர் குழுவில் பதவிகள்

* மேடை பேச்சாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்

* சீனா, மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளில் தமிழ் விரிவுரையாளர் பணி

* வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் தமிழ் அறிவிப்பாளர் பணிகள்.

இவை தவிர, ஏராளமான பணிகள் உள்ளன.

படிப்பு என்பது துாண்டில் போடுவது போல... அவரவர் பொறுமைக்கும், திறமைக்கும், சாதுர்யத்துக்கும் ஏற்ப மீன்கள் கிட்டும்.

தமிழ் சோறு போடுமா என கேட்டால், 16 வகை கூட்டு, பொரியல், அவியல், மசியல், அப்பளம், பாயசத்துடன் தலை வாழை இலையில் விருந்தே தரும் என்பேன். எனவே, நம்பிக்கையுடன் தமிழை படி மருமகனே!

வாழ்த்துகளுடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us