PUBLISHED ON : ஜூலை 26, 2019

அன்புள்ள சகோதரி மெடோஸ்...
தனியார் மருத்துவமனையில், செவிலியர் நங்கையாக பணிபுரிகிறேன். கணவர், அரசு பல்கலைக்கழகத்தில், அலுவலக உதவியாளர். எங்களுக்கு, இரு ஆண் குழந்தைகள். மூத்தவனுக்கு, 12 வயது; சி.பி.எஸ்.இ., பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கிறான். இளையவனுக்கு, 10 வயது; மெட்ரிக்குலேஷன் பள்ளியில், 4ம் வகுப்பு படிக்கிறான்.
மூத்தவனால் தான் பிரச்னையே!
காலையில், அவனை யாரும் எழுப்ப தேவையில்லை. அவனே எழுந்து, காலைக் கடன்களை முடித்து, குளித்து, சீருடை அணிந்து, பள்ளிக்கு சென்று விடுவான்.
மாலையில், திரும்பி வந்ததும், யாருடனும் பேசாமல், தனி அறையில் சிறிது நேரம் படித்து, இரவு உணவு சாப்பிட்டு, துாங்கச் சென்று விடுவான்.
உடன்பிறந்த தம்பியோ, பெற்றோரோ... யாரும் அவனை தொட்டு பேச கூடாது. தொட்டால், கையை தட்டி, 'என்னை தொடாதீர்...' என்பான். தெருவிலும் சரி, பள்ளியிலும் சரி, அவனுக்கு நண்பர்களே கிடையாது.
துருவி கேட்டால், 'ஆங்கிலம் பேச தெரியாத முட்டாள்களுடன், நட்பு பாராட்ட விரும்பவில்லை; படிப்பில் பின்தங்கியிருக்கும் வடிகட்டின முட்டாள்களுடன் பேச விரும்பவில்லை; தயிர் சாதம் எடுத்து வருவதால், அவனை பிடிக்கவில்லை; வியர்வை நாற்றம் அடிப்பதால் ஒதுங்கி விட்டேன்...' என்று, விதம் விதமாக பதில் சொல்கிறான்.
அவனுக்கு, ஆயிரம் அறிவுரைகள் கூறி விட்டோம்; எதையும் கேட்பதாய் இல்லை. நீ தான் அவனுக்கு உறைக்கிற மாதிரி, அறிவுரைகள் வழங்கி திருத்தணும்.
அன்புள்ள சகோதரிக்கு...
என் பதிலை, அப்படியே, உங்கள் மகனிடம் வாசிக்க கொடுங்கள்.
டேய்... செல்லம் ஐன்ஸ்டீன் குட்டி!
உன் படிப்பெல்லாம் எப்படி போகிறது... உன் விசித்திரமான நடத்தையை பற்றி, புகார் செய்து விட்டாளே என்று, அம்மா மீது கோபப்படாதே...
காய்ச்சல் வந்தால், மருத்துவரிடம் காட்டுவதில்லையா... அது மாதிரி தான் இதுவும்.
உன்னை, 10 மாதம் சுமந்து, பெற்று, பாலுாட்டி, உன், மல ஜலத்தை சுத்தம் செய்து, நிலவை காட்டி, சோறு ஊட்டி, நெஞ்சில் போட்டு தாலாட்டி துாங்க வைத்த அம்மா, உன்னை தொடக் கூடாதா...
உன்னை, உப்பு மூட்டை துாக்கி, தோளில் அமர்த்தி, திருவிழாவை சுற்றி காட்டி, ஆடைகள் வாங்கி கொடுத்து, லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி, பள்ளியில் படிக்க வைக்கும், அப்பா, தொடக் கூடாதா...
உன் சிறு கார்பன் காப்பி, எச்சில் பாலை குடித்து வளர்ந்த தம்பி, உன்னை தொடக் கூடாதா...
தொடுதல், தட்டிக் கொடுத்தல், தலைமுடியை கோதிவிடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், மடியில் படுத்தல்... இவை எல்லாம், அன்பின் அடையாளங்கள்.
மனித பிறவி எடுக்கும் போது, தெய்வங்களே உறவுகளுடன் அன்னியோன்யமாக நெருங்கி தான் பழகியுள்ளன; சாதாரண சிறுவன் நீ, எம்மாத்திரம்...
பெற்ற தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது; பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் மதிக்காத நீ, எதிர்காலத்தில், எதை சாதித்தாலும் பயனில்லை.
ஜாதி, மதம், நிறம், இனம், பணம், மொழி, கல்வி, பதவி, அதிகாரம், இவை, மனிதரை பிரிக்க முயற்சிக்கலாம்; பிரிவினைகளுக்கு மனிதன் இரையாகி விடக் கூடாது.
'செஸ்' ஆட்டத்தின் போது, ராஜா, ராணி, யானை, குதிரை, போர் வீரர்கள் என்ற அதிகார அடுக்குகள் உண்டு; ஆட்டம் முடிந்தவுடன், எல்லா காய்களும், ஒரே பெட்டியில் தான் பாதுகாக்கப்படும். ஓய்வெடுக்கும் பெட்டியில், ராஜாவுக்கும், போர் வீரனுக்கும் ஒரே மதிப்பு தான்.
வகுப்பறையில், 40 மாணவர்கள் இருந்தால், யாரையும் பிரித்து பார்க்காதே; எல்லாரையும் நண்பர்களாக பார்.
ஆங்கிலம் நன்கு பேச தெரிந்தவனுக்கு, கொம்பும், இறக்கையும் முளைத்து விடுமா... நன்கு படிக்கிறவன் தேவதையாகவும், படிக்காதவன் சாத்தானகவும் மாறி விடுவானா...
உன் உயர்வு மனப்பான்மை, உன்னை தனி மரமாக்கி விடும்.
ஆங்கிலம் பேச தெரியாதவனுடன் ஆங்கிலம் பேசி, அவன் கூச்சத்தை போக்கு. சுமாராக படிப்பவனுக்கு, முனைப்பாக கற்றுக் கொடு.
வியர்வை நாற்றம் அடிக்கும், சக மாணவனிடம், 'நல்ல சோப் உபயோகித்து, தினமும், குளித்து வா...' என, அறிவுரை கூறு. யாருடனும், விழுந்து விழுந்து பழகாதே; விலகியும் ஓடாதே; மத்தியமாய் நடந்து கொள் கன்னுக்குட்டி!
உலகில், 700 கோடி மக்கள் உள்ளனர்; அனைவரும் கண்ணுக்கு தெரியாத இழையால் இணைக்கப்பட்டிருக்கின்றனர்; ஒருவர் ஒத்துழைப்பு இல்லாமல், இன்னொருவர் இல்லை.
அன்பும், மனிதநேயமும், சகிப்புத் தன்மையும், நல்லிணக்கமும் தான், மனித சமுதாயத்தை, இந்த பூமி பந்தில் அமைதியாக வாழ வழி செய்யும்.
உன் உருவத்தை வைத்து, உன்னிடம் இல்லாத, சில பல திறமைகளை வைத்து, உன்னை மற்றவர்கள் உதாசீனப்படுத்தினால் பொறுத்துக் கொள்வாயா...
இந்த உலகத்தில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் யாருமில்லை. எவ்வளவு உயர்ந்தாலும், எளிமையாக இரு; எளிமையே இறைவனுக்கு தித்திப்பானது.
உயர் பதவிக்கு வந்து, மனித குலத்துக்கு சேவை செய் செல்லமே; அன்பு முத்தங்கள்!
- என்றென்றும் அன்புடன், மெடோஸ் ஆன்டி.
