
சந்தேகத்தை தீர்த்து வைக்க போகும் அம்மாவுக்கு...
என் வயது 17; குண்டாக இருப்பேன்; நன்றாக பாடுவேன்; பல குரலில் பேசுவேன்.
இவற்றை செய்வதால், பார்ப்பவர்கள் முகம் சுழிக்கின்றனர். ஏளனமாக திட்டுகின்றனர். இதனால் கோபம் அடைகிறேன். மன பாரத்தால் அழுகையும் வருகிறது.
இந்த வயதிலேயே, ஏராளமான கஷ்டங்களை பார்த்து விட்டேன்.
பிசினஸ் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறான், அண்ணன். எந்நேரமும் கடன் பற்றி தான் சிந்திப்பர் பெற்றோர். என்னை கவனிப்பார் யாருமில்லை.
பெண்ணாக பிறந்தது பிடிக்கவில்லை. வீட்டின் அருகே, சிறுவர்கள் விளையாடுவதைக் கண்டு, அது போல் முடியவில்லையே என மனதில் அழுவேன்.
ஆண்கள் சுதந்திரமாக இருப்பது கண்டு, ஆண் மகனாக பிறக்கவில்லையே என்று வருந்துவேன். எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை.
அக்கம் பக்கத்து வீட்டில் பேச கூடாது; மாலை, 6:00 மணிக்கு மேல் எங்கும் செல்லக் கூடாது என்று தடைவிதித்துள்ளார் அப்பா.
எல்லா நடத்தையையும் சந்தேகமாகவே பார்க்கும் வாழ்வில், என் சந்தோஷம் வெறும், 20 சதவீதம் மட்டுமே!
வீட்டில், 'டிவி'யும் இல்லை; எல்லாரும் அவர்களது வேலையை பார்ப்பர். என்னை கவனிக்க யாருமில்லை. இதை தாங்க முடியவில்லை.
அப்பாவும், அண்ணனும் சாப்பிட்ட தட்டை எடுக்க மாட்டார்கள். எடுக்க சொன்னால், 'நாங்கள் ஆண்கள். ஏன் இந்த வேலையை செய்ய வேண்டும்...' என்று கேட்டு திட்டுகின்றனர்.
'ஆணும் பெண்ணும் சமம் தானே... பின் ஏன் எல்லாரும் பெண்களை அடிமையாக வைக்கின்றனர்...' என்பார் அம்மா. விடை தான் கிடைக்கவில்லை.
படிப்பு முடிந்தவுடன், இருச்சக்கர வாகனம் வாங்கி, அம்மாவுடன் ஊர் சுற்ற வேண்டும் என விரும்புகிறேன். பின், நல்ல கல்லுாரியில், சுதந்திரமாக படிக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.
படிப்பு சுமாராக தான் வரும். குரல் இசையில் என்னை அடித்துக் கொள்ள ஆட்களே கிடையாது.
இது என் வாழ்க்கை அல்ல... வேதனையுடன் இருக்கும் எனக்கு நல்ல விடை தாருங்கள்!
அன்பு மகளுக்கு...
உடல் குண்டாக உள்ளதை தீர்த்து, கட்டான அமைப்பு பெற சில பயிற்சிகள் செய்யலாம்.
பகலில், துாங்குவதை தவிர்க்கவும். உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும். தினமும், 1 மணி நேரம் நடைபயிற்சி செய்யலாம். இவற்றால் உடல் எடை குறைக்கலாம்.
பாடகியாகவும், 'மிமிக்ரி' கலைஞராகவும் பிரபலமடைய வேண்டுமானால், விடா முயற்சியும், பொறுமையும், சகிப்புணர்வும் அவசியம்.
அவமானங்கள் தான், உன்னை செதுக்கும். வெற்றியின் அஸ்திவாரம் அது; கோபமும், அழுகையும் பலவீனபடுத்தி விடும். எதிராளி முன், தலைகுப்புற விழ வைத்து விடும்; யாராவது திட்டினால், அவமானப் படுத்தினால், சிரித்த முகத்துடன் எதிர் கொள்.
உனக்கான உரிமைகளை, யாரிடமும் கெஞ்சி பெறாதே; மாலை, 6:00 மணிக்கு மேல், முக்கியமான பணி இருந்தால் செல். பேச வேண்டிய கட்டாயம் இருந்தால் பேசு; பெற்றோரை, அன்பால், மிடுக்கால், உண்மையால் வெற்றி கொள்.
ஆண் வைரமுமல்ல; பெண் கரித்துண்டும் அல்ல; இயற்கை, இரண்டு விதமாக படைத்து இருக்கிறது. பட்டை தீட்டிக் கொள்வதில் தான், அது முடிவாகும். அவ்வளவு தான்.
இரவும், பகலும், இருளும், ஒளியும், ஜாடியும், மூடியும், பூட்டும், சாவியும் இணைந்தே இருக்கும். பெண்மைக்குள் ஆண்மை மட்டுமல்ல; இந்த பிரபஞ்சமே அடங்கியிருக்கிறது.
பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல; பலவீனர்களாக்கப்பட்டவர்கள். பெண்களின் மனபலம் அசாத்தியமானது; ஞாபக சக்தியும், மன்னிக்கும் மனப்பான்மையும் எல்லையற்றது.
பெண்களை கண்ணியப்படுத்தும் சமூகமே மேன்மையடையும்! எனவே, நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும் கொள். எல்லாவற்றையும் வெல்லும் வலிமை வரும்.
தடைகளை தகர்த்து ஓடு... உன் குடும்பத்தை, பொருளாதார ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் முன்னேற்றும் வழிகளை காண்பாய்.
அறிவுப்பூர்வமான ஆண் - பெண் நண்பர்களுடன் பழகு!
ஒரே நேரத்தில், பாடலிலும், படிப்பிலும் கவனம் செலுத்து. புலம்புவதை தவிர்க்கவும்!
இருக்கும் பொருட்களை வைத்து, சிறப்பாக சமைப்பது போல, பின்னடைவுகளுக்கு இடையிலும், விவேகமாக வெற்றி பெறும் வழிகளை தேடு! நிச்சயம் வாசல்கள் திறக்கும்.
உனக்கு பெண் என்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது; அதில் சிறப்பாக நடித்து, 'ஆஸ்கர்' போன்ற விருதுகளை குவிக்கப் பார்!
வாழ்த்துகள் சிங்கப்பெண்ணே!
- அன்புடன், பிளாரன்ஸ்.

