PUBLISHED ON : செப் 23, 2016

ஹாய்! ஜெனி ஆன்டி... எப்படி இருக்கீங்க? நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். நல்லா படிப்பேன். ஆனா, எனக்கு, 'ஸ்டேஜ்னாலே' பயம். மைக்க பார்த்தாலே அழுகையா வருது. நான் தனியா இருக்கும்போது, ஸ்கேல மைக் மாதிரி நினைச்சுட்டு நல்லாதான் பேசுவேன்.
ஆனா, ஸ்டேஜ் பார்த்தா வார்த்தையே வரல. இந்த நிலமையில், அடுத்த வாரம் பிரேயர்ல நான் செய்தி வாசிக்கணும். பயமாக இருக்கு; இந்த பயத்தைப் போக்க அட்வைஸ் பண்ணுங்க ஆன்டி ப்ளீஸ்!
ஹாய்... ஹாய்... நல்லா படிக்கிற பெண்ணுக்கு ஸ்டேஜ் பயம் வரலாமா? தன்னம்பிக்கை நிறைய இருக்குமே. நம்மால் முடியாதது ஒன்றுமே இல்லைன்னு கண்ணாடி முன் நின்று வாய்விட்டுச் சொல்லு.
'ஸ்டேஜ்'ல ஏறி கம்பீரமா பேச என்னால் முடியும் என்பதை திரும்ப திரும்ப சொல்லி உன் மூளைக்கு உணர்த்து. நம் உடம்பில் உள்ள எல்லா நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்படுவதால், மூளைதான் தகவல் சேமிக்கும் நிலையம். எனவே, 'நான் நன்றாகப் பேசுவேன் எனக்கு பயமே இல்லை' என்று நீ சொன்ன. அந்தச் செய்தியை உடனே மூளை, 'நீங்கள் பயப்படவேண்டாம்; நன்றாகப் பேசுவோம்' என்று தகவல் கொண்டு செல்லும் நியூரான்களுக்கு அனுப்பும். அப்போது உனக்கு உடல் வியர்ப்பது; படபடப்பு எதுவும் ஏற்படாது.
உதாரணமாக, ஒரு நோயாளி என்னதான் நல்ல மாத்திரை உண்டாலும், தனது உடல்நலம் விரைவில் குணமாகும் என்று நினைத்தால்தான், அவர் குணமடைய வேண்டும் என்ற கட்டளையை நரம்புகளுக்கு மூளை கட்டளையிடும். ஆனால், அந்த நோயாளி, எல்லாம் முடிந்தது; நான் சுகமாக மாட்டேன் என்று நினைத்துக் கொண்டே மாத்திரை சாப்பிட்டாலும், அவர் உடல் சுகமாகாது. காரணம் மூளை, உடல் நரம்புகளுக்கு, 'நீங்கள் சுகமாகமாட்டீர்கள் அவ்ளோதான். நாம சாகப்போகிறோம்' என்று கட்டளை கொடுத்துவிட்ட பிறகு, எத்தனை அற்புதமான மாத்திரையாக இருந்தாலும் அதை உடல் ஏற்காது.
எனவே, உன்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் கண்ணாடி முன்பாக நின்று பேசிப்பார். உங்கள் வீட்டில் உள்ளவர்களை உட்கார வைத்து, அவர்கள் முன்பாக நின்று பேசிப் பழகு; வெட்கப்படாதே.
நிறைய, 'பிராக்டீஸ்' பண்ணு. நீ என்ன டிரஸ்போட்டுக்கொண்டு எப்படி ஸ்கூல் ஸ்டேஜ்ல பேசப்போகிறாய் என்பதை அப்படியே ஒரு விசை கற்பனை பண்ணிக்கொள். நீ நன்றாகப் பேசி கைத்தட்டல் பெறுவதை போல் கற்பனை செய். கற்பனை செய்ததை நனவாக்க உன் ஆழ்மனம் துடிக்கும்.
அது அப்படியே நிறைவேறும். வரும் காலத்தில் பெரிய பேச்சாளர் ஆவாய். கிரேக்க பேச்சாளர் டெமாஸ்தனிஸ்க்கு சின்ன வயதில் திக்குவாய் இருந்தது. 'கூட்டத்தை கலைக்க வேண்டுமா இவனை பேசக் கூப்பிடுங்கள்' என்று சொல்லி மக்கள் கிண்டல் செய்வர். இதனால் வெட்கமடைந்த டெமாஸ்தனிஸ், இரவு நேரங்களில் கடற்கரைக்குச் சென்று பேசிப்பேசி பழகுவார். ஆர்ப்பரிக்கும் அலைகளை மக்கள் கூட்டமாக நினைத்து பேசுவார். இப்படிப் பேசி பேசியே பெரிய பேச்சாளர் ஆனார். அதன்பிறகு, 'கூட்டத்தை கூட்ட வேண்டுமா? கூப்பிடுங்கள் டெமாஸ்தனிஸ்சை' என்று, மக்கள் கூட்டம் சொல்லும் அளவிற்கு ஆயிடிச்சி. ஸோ, பயத்தை தூக்கி எறி; ஸ்டேஜ், 'தெறி'க்கட்டும் உன் பேச்சால்!
வாழ்த்துக்களுடன், ஜெனிபர் பிரேம்.
