PUBLISHED ON : பிப் 03, 2017

டியர் ஜெனி ஆன்டி... +2 படிக்கிறேன். உங்களது பதில்களை மிகவும் ரசித்துப் படிப்பேன். என் வகுப்பு தோழிகளுடன் அதைப் பற்றி, 'டிஸ்கஸ்' செய்வோம். அப்போது தான் தோழியர் சொன்னார்கள், 'உன்னோட பரு மூஞ்சிக்கு எத்தனையோ கிரீம் தடவுற... ஒன்றும் போக மாட்டுது... எதுக்கும் ஜெனி ஆன்டிகிட்ட கேளு... அவங்க சுலபமாக வழி சொல்லுவாங்க... எதுக்கு இப்படி கிரீம் கிரீமா வாங்கி காச கரியாக்குற...' என்றனர்.
இதுவும் நல்ல ஐடியா என்பதால், உடனே உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன் ஆன்டி... என் முகம் முழுவதும் பொரி பொரியா பரு வந்துடுது... கொஞ்சம் போகும்... அப்புறம் வந்துடும்.
எத்தனையோ, 'கிரீம்ஸ் யூஸ்' பண்ணிட்டேன். இந்த பரு தொல்லை போன பாடில்லை. மழமழன்னு எனக்கு முகம் வேணும் ஆன்டி... இதுக்கு நீங்க தான் பதில் சொல்லணும்.
ஹ...ஹ...ஹா... முக்கால் வாசி, 'டீன்ஏஜ்' பெண்கள் சந்திக்கும் பிரச்சனை இதுதான் மகளே... கவலைப்படாதே ரொம்ப சுலபமான வழிகளை சொல்லி தர்றேன். முதலில், இந்த பருக்கள் எப்படி வருதுன்னு தெரிஞ்சுக்கோ...
நம் சருமத்தின் அடியில் உள்ள, 'செபேஷியஸ்' சுரப்பிகள், 'சீபம்' என்கிற எண்ணெயை, அதிகப்படியாக சுரப்பது தான் பரு தோன்றுவதற்கான காரணம். வயதுக்கு வரும் நேரத்தில் மற்றும் மாத விடாய் காலங்களில், உடலில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகளின் காரணமாகவே பரு அதிகம் தோன்றுகிறது.
சில நேரங்களில் டென்ஷன் அதிகமானாலும் பரு தோன்றும். சிலருக்கு முதுகு, தோள் பட்டைகள், மார்பகங்களில் கூட வரும்.
இதற்கு சருமத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அடிக்கடி சோப் போடாமல் முகத்தை சுத்தமான தண்ணீரினால் கழுவ வேண்டும். சாக்லேட், கோக் போன்ற உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்களை குறைத்து கொள்ள வேண்டும்.
உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்வதும், பி -காம்ப்ளக்ஸ் சத்துள்ள உணவை உட்கொண்டால், நம்மிடம் பரு வரவே வராது.
சரி... பருவை போக்குவதற்கான சில வழிகளை பார்ப்போமா?
* நல்லெண்ணையுடன் முட்டையின் வெள்ளை கருவை கலந்து பருக்களின் மேல் தடவினால், பருக்கள் மறையும்
* முகப் பருவின் மீது சுக்கை அரைத்து விழுதாக தடவி வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்
* புதினா இலைகளை அரைத்து தடவினாலும், பருக்கள் இருந்த அடையாளமே தெரியாது
* ஒரு ஸ்பூன் தயிருடன் சிறிது மஞ்சள் தூளை நன்றாக குழைத்து பரு உள்ள இடங்களில் தடவி, சில நிமிடங்கள் சென்றதும் தூய்மையான நீரில் கழுவினால் முகப் பரு போயிந்தே...
* கிராம்பை தண்ணீரில் உரசி முகப் பருவில் போட்டாலும் முகப்பரு மறையும்
* காரட் சாறும், தேனும் கலந்து முகத்தில் தடவி வந்தால், முகப்பரு மறையும்; கவர்ச்சியும் கூடும்.
போதுமா டிப்ஸ்... இந்த எளிய முறைகளை செய்து பார். வழவழா முகம் கிடைக்கும்... முக்கியமா, 'டென்ஷன்' ஆகாதே... இரவில் சரியான தூக்கம், சரிவிகித உணவு, காற்றோட்டமான இடத்தில் வசிப்பது இப்படி இருந்தால் பருக்கள் உன் பக்கம் திரும்ப வரவே வராது. மழமழ முகம் கிடைத்தவுடன் ஒரு போட்டோ எடுத்து, 'ஆன்டி'க்கு அனுப்பு!
அன்புடன்,
ஜெனிபர் பிரேம்.
