
அன்புமிக்க பிளாரன்ஸ்...
என் வயது, 28; இல்லத்தரசியாக இருக்கிறேன்; ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு, 7 வயதாகிறது. இருவரின் முகச்சாயலும் வெவ்வேறாக உள்ளன.
நான்கு வயது வரை, இருவரும் ஒல்லியாகத்தான் இருந்தனர். பின், மெதுவாக குண்டாகி, தற்போது பெரும் குண்டர்களாகி விட்டனர்.
கனத்த தொடைகள், பெருத்த தொப்பை, என சக மாணவ, மாணவியரின் கேலி, கிண்டல் தாங்காது தவிக்கின்றனர்.
சரியான துாக்கம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்; மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இருவருமே, தலா, 58 கிலோ எடை இருக்கின்றனர். குண்டு பிரச்னையை தீர்க்க என்ன செய்யலாம்; எடையை குறைத்து, ஒல்லியான உடல் பெற வழி வகை கூறுங்கள் சகோதரி!
அன்புள்ள அம்மா...
இந்த வயதில் குழந்தைகளின் உடல் நிறை குறியீடு, 25க்கு மேல் இருந்தால் குண்டர்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏழு வயதுள்ள குழந்தை சராசரியாக, 115 செ.மீ., உயரம், 22.9 கிலோ எடையுடன் இருக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகள், 35 கிலோ எடை கூடுதலாக இருக்கின்றனர். 7 முதல், 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஒவ்வொரு நாளும், 1,600 கலோரி கிடைக்கும் வகையில், உணவு உட்கொள்ள வேண்டும்.
உங்கள் குழந்தைகள் எவ்வளவு கலோரி உணவு உண்கின்றனர் என்பதை கணக்கிடவும். குழந்தைகள், இரவு 7:00 மணி முதல், 9:00 க்குள் படுக்கைக்கு சென்று, காலை, 6:00 முதல், 8:00 மணிக்குள் எழ வழிவகை செய்ய வேண்டும்.
ஒரு குழந்தை, குண்டாக இருக்க பின்வரும் காரணங்கள் இருக்கலாம்...
* பெற்றோர் குண்டு என்றால், குழந்தைகளும் குண்டாக இருக்க வாய்ப்பிருக்கிறது
* ஹைபோ தைராய்டிசம் மற்றும் மருந்து, மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவு
* பதற்றம், மன அமைதியின்மை, துாக்கமின்மை
* கூடுதல் உணவு, குறைந்த அளவு செயல்பாடு
* ஜங்க் புட் எனப்படும், குப்பை உணவை அதிகம் சாப்பிடுதல்
* உணவின் மீதான கவர்ச்சி அல்லது ஈடுபாடு
* நுாற்றுக்கணக்கான உணவு பொருட்கள் தாராளமாய் கிடைப்பது போன்றவை காரணமாக இருக்கலாம்.
குண்டாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய் இரண்டாம் வகை, இதய நோய், பக்கவாதம், கீல்வாதம், புற்றுநோய், மனநோய் மற்றும் பித்தப்பை கோளாறு போன்றவை ஏற்படலாம்.
குழந்தை நல மருத்துவரிடம், அழைத்துச் சென்று காட்டவும். முழு உடல் பரிசோதனையும், முழு ரத்த பரிசோதனையும் செய்ய பரிந்துரைப்பார்.
ஹைபோதைராய்டு இருந்தால், மருந்து எழுதி தருவார் மருத்துவர்; ஆரோக்கிய உணவு உட்கொள்ள, உணவு அட்டவணை தயாரித்து கொடுப்பார். அதன்படி சாப்பிட வேண்டும்.
தினமும் 1 மணிநேரம், நடக்க வேண்டும்; சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்யலாம்.
தினமும், எட்டு முதல் ஒன்பது மணி நேரம் சரியாக துாங்குகின்றனரா என கண்காணிக்கவும்! வெறும் வயிறு நிறைய சுடுநீர் குடிக்கலாம்; இடைவிடாத முயற்சி செய்தால் மட்டுமே நன்மை பயக்கும்; உடல் எடை குறையும். உங்கள் குழந்தைகள் உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்.
- என்றென்றும் அன்புடன், பிளாரன்ஸ்.

