
அன்புள்ள சகோதரிக்கு...
என் வயது, 55; பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றுகிறேன். இங்குள்ள, '2கே கிட்ஸ்' பற்றி, எனக்கு இருக்கும் மனக்குறை இது... அவர்கள், புரோட்டா, நுாடுல்ஸ் சாப்பிடுகின்றனர்; பப்ஜி, ப்ளூவேல் ஆடுகின்றனர்; பிடித்த சொல், மொக்கை.
பிடித்த ஒரே பொருள் கைபேசி; அவர்களின் குறிக்கோள், படிக்காமல் தேர்ச்சி பெற்று, கஷ்டப்படாமல், வேலை கிடைக்க வேண்டும். ஆசிரியர்கள், மூத்தோர் எல்லாம் புழு பூச்சி மாதிரி; வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் அரசியல் பற்றி, துளி புரிதல் கிடையாது; ஒரு வரி கூட வாசிப்பதில்லை; அலைபாயும் மனம்.
மொத்தத்தில், காதுகளே இல்லாத தலைமுறையிடம், நாம் பழைய சொற்களோடு தோற்று வருகிறோம் என வேதனைப்படுகிறேன். உன் கருத்து என்ன...
இப்படிக்கு,
ஆர்.மரியதெரசா.
அன்பு சகோதரிக்கு...
நீங்கள் குறிப்பிட்டுள்ள, '2கே கிட்ஸ்' என்பதை தமிழில், 'ஈராயிரம் குழலிகள்' என கூறுவர். தமிழகத்தில், 20 வயதுக்கு உட்பட்ட யுவன், யுவதிகள், 1.25 கோடி பேர் இருக்கின்றனர்.
ஆசிரியர்களுக்கு அர்பணிப்பு உணர்வு இல்லை என்ற குற்றச்சாட்டை அடுக்கினால் ஒப்புக்கொள்வீரா... வாழ்வில், எந்த விஷயத்திலும், இருண்ட பக்கத்தை உருப்பெருக்கி பெரிதுப்படுத்தாதீர். எதையும், அவநம்பிக்கையுடன் பார்க்காதீர்; பிறரை குற்றம் சாட்டும் முன், உங்களின் முதுகு அழுக்கை களையுங்கள்.
புரோட்டா, நுாடுல்ஸ் சாப்பிடும், ஈராயிரம் குழலிகள் தங்களின், பதின்ம வயதுக்கு பின், பாரம்பரிய உணவுகளுக்கு தாவி விடுவர். அலைபேசி மூலம், நீங்கள் கெட்ட விஷயங்களை பார்க்காதீர்; அவர்கள் கைகளுக்கு, அலைபேசி கிடைக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.
படிப்பில் தேர்ச்சி பெறுவதும், தகுதியான வேலையில் அமர்வதும், கடின உழைப்பின் மூலம், வேலையை தக்க வைத்து கொள்வதும், எவ்வளவு பிரம்மபிரயத்தன விஷயங்கள் என்பதை அடிப்பட்டு, மிதிபட்டு தெரிந்து கொள்வர்.
உங்கள் குழந்தைகளின் முன், மற்றவர்களுக்கு மரியாதை தாருங்கள். அவர்களும் தருவர்; வாசிப்பு பழக்கத்தை, ஆறு வயதிலிருந்தே இயல்பாய் ஏற்படுத்த வேண்டும்.
எல்லா விஷயங்களுக்கும், கச்சா பொருள் எழுத்து தான். இன்னும், ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், எழுத்தும், வாசிப்பும் இருக்கவே செய்யும்.
அலைபாயும் மனம், 'ஹார்மோன்' செய்யும் சதி. பதின்ம வயது முடிந்ததும், மனம் நிலை பெற்று நங்கூரமிடும்.
ஈராயிரம் குழலிகளை காதுகள் இல்லாத தலைமுறை என கூறாதீர்; அவர்களுக்கு, நுாற்றுக்கணக்கான காதுகள் உள்ளன.
அவர்கள், விஞ்ஞானம், தொழில்நுட்பத்தின் அதிநவீன குழந்தைகள்; அவர்களுடன், தகவல் தொடர்பை, நாம் தான் மேம்படுத்த வேண்டும்; அதிகாரமும், அறிவுரையும் செல்லுபடி ஆகாது.
'வழ... வழா... கொழ... கொழா...' என இல்லாமல், திருக்குறள் அளவுக்கு, ஆலோசனைகள் போதும்; ஈராயிரம் குழலிகள், சாதிக்க பிறந்தோர்; சாதிப்பர்!
- அள்ளக்குறையா அன்புடன்,
பிளாரன்ஸ்.