
அன்பு பிளாரன்ஸ்...
என் வயது, 32; தையல் ஆசிரியையாக பணிபுரிகிறேன்; கணவர் டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்துகிறார். எங்களுக்கு இரு மகன்கள்; மூத்தவனுக்கு வயது, 8;
அப்பிராணி; எந்த வம்புக்கும் போக மாட்டான். இளையவனுக்கு வயது, 3;
வம்பு செய்யும் சேட்டைக்காரன்; விளையாட ஆரம்பித்தால், வீட்டை தலைகீழாகப் புரட்டி போட்டு விடுவான்.
சதா அண்ணணுடன் முட்டி மோதியபடியே இருப்பான்; அண்ணன் ஏதாவது, இரண்டு வார்த்தை பேசினால் அடித்து துவைத்து விடுவான்.
'நீ... என் அடிமை... என் காலை தொட்டு கும்பிடுடா...' என மிரட்டுவான்.
அவன் சாப்பாட்டை பறித்து, இவன் சாப்பிடுவான்; அண்ணன் படிக்கும் பாடப் புத்தகங்களை கிழித்து போட்டு விடுவான்.
ஒருமுறை, மர பொம்மையால் அண்ணனின் தலையில் அடித்து, ரத்த காயம் ஏற்படுத்தி விட்டான் சின்னவன். இது பெரும் அதிர்ச்சி தந்தது. இது போல் சம்பவம் தொடராமல் இருக்க விரும்புகிறேன். இவனை அடக்க, தக்க வழி சொல்லுங்கள்.
அன்பு அம்மா...
சந்தர்ப்பம் வாய்த்தால், கடவுளை கூட அடக்கி ஆள முயற்சிப்பான் மனிதன். புழுக்கள் கூட, சக புழுக்களை அடிமைபடுத்த பார்க்கின்றன.
மூத்த மகன், மகளாய் இருந்தால், இளைய மகன் சமாளித்து போவான்.
'காட்டுக்கு இரு சிங்கங்களா' என, இளைய மகன் எதிர்ப்பு குரல் எழுப்புகிறான். அண்ணன், நம்மை விட அரையடி உயரம் அதிகமாக இருக்கிறான். பள்ளிக்கு போய், மூன்றாம் வகுப்பு படிக்கிறான்; பள்ளி சீருடையும், பூட்சும் அணிகிறான்.
ஐந்து ஆண்டுகள் சீனியரான அவன், நம்மை அடக்கி ஆள்வதற்கு முன், அவனை அடக்கி ஆள்வோம் என்ற தற்காப்பு முயற்சி தான், இளைய மகனின் அடாவடிகளுக்கு அடிப்படையாக உள்ளது.
இது, 'ப்ரீஸ் கூல் கிட்ஸ்'களின் அடிப்டை மனோபாவம்.
உன் கணவரும், தெரு சிறுவர்களும், வன்முறையாய், உன் இளையமகன் முன் நடக்கின்றனரோ என்னவோ...
அவன் முன், நீங்கள் சண்டைபோட்டு கொள்ள வேண்டாம்; வன்முறை காட்சிகள் அடங்கிய சினிமா, கார்ட்டூன், வீடியோ கேம்களையோ அவனுக்கு காட்டாதீர். இளைய மகன் கண்முன் மூத்தவனுக்கு எந்த சிறப்பு சலுகையும் தராதீர்.
இளைய மகனை, குழந்தைகள் மருத்துவரிடம் அழைத்து சென்று, டிஸ்லெக்சியா, ஏ.டி.ஹெச்.டி., போன்ற நோய்கள் ஏதாவது உள்ளதா என உறுதி செய்யுங்கள்.
'எனக்கு போய் நீ மகனா பிறந்த பாரு... ரெண்டு பசங்கள பெத்ததுக்கு பதில், ரெண்டு மகள்களை பெத்திருக்கலாம்...'
'அப்பனை மாதிரியே வராதேடா...'
' உன்னை விட, பக்கத்து வீட்டு பையன் நுாறு மடங்கு தேவலாம்...'
'சின்ன வயசுல உன்னை விட நான் மோசம்டா...'
'வாலை சுருட்டிக்கிட்டு கம்முன்னு கிட...' போன்ற வாக்கியங்களை, அவன் முன் பேசாமல் இருப்பது நல்லது.
வன்முறையை தடுக்கா விட்டால், அது வாழ்நாள் பிரச்னையாகி விடும். எனவே, தகுந்த அறிவுரைகளை அடிக்கடி வழங்க வேண்டும்.
'நீங்க... ரெண்டு பேரும் ஒரே வயித்துல வளர்ந்த அண்ணன், தம்பிகள்; அவனுக்கு என்ன உரிமைகள் இருக்கிறதோ, அதே உரிமைகள் உனக்கும் இருக்கு... நீ அவனுக்கு அடிமை அல்ல; அவன் உனக்கு அடிமை அல்ல... ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளுதல் சரி அல்ல; நல்ல வார்த்தைகளை பேசு மகனே; நீ நல்ல முறையில் நடந்தால், உன்னை பாராட்டி பரிசுகள் அளிப்பேன்...
'உன்னையும், உன் அண்ணனையும் இரு கண்களாக பாவிக்கிறோம்...' என்பது போன்ற அறிவுரைகளை கூறி, இளைய மகனை அமைதிப்படுத்தவும்.
சுயக்கட்டுப்பாட்டை கற்றுக் கொடுக்கவும்; பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள ஆயத்தப்படுத்தவும். நீதி, நேர்மை, நியாயம், அகிம்சை போன்றவற்றை கற்றுக் கொடுக்கவும்.
இருவருக்கும் ஒரே நேரத்தில் உட்கார வைத்து சாப்பாடு ஊட்டவும்.
இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து, கன்னத்தில் முத்தமிட்டு கொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படுத்தவும்.
அவர்களுக்குள் சமாதானத்தையும், சமத்துவத்தையும் வளர்க்கவும்.
இளைய மகன் பள்ளியில் சேர்ந்து, சகாக்களுடன் பழகினால், அமைதிப்பட வாய்ப்பிருக்கிறது. எதற்கும் தகுந்த ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்யவும்!
- கூடை நிறைய அன்புடன், பிளாரன்ஸ்.

