
அன்புமிக்க அம்மா...
நான், 40 வயது ஆண்; மத்திய அரசு பணியில் இருக்கிறேன். மனைவி இல்லத்தரசி; எங்களுக்கு, 15 வயதில், மகன் இருக்கிறான். அவன், 10ம் வகுப்பு படிக்கிறான்; வேறொரு மதத்தைச் சேர்ந்த சம வயதுள்ள சிறுவனுடன் உயிர் நட்பாய் இருக்கிறான்.
இந்த நட்பு, பல ஆண்டுகளாக தொடர்கிறது. விழித்திருக்கும் நேரமெல்லாம், ஒன்றாக இருக்கின்றனர். ஒரே மாதிரியாக ஆடை அணிகின்றனர்.
பள்ளி நேரம் தவிர்த்து, மீதி நேரங்களில், நண்பனை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து, 'கேரம்' விளையாடுகிறான். ஒரு நாள், 'உங்களை விட, என் நண்பனை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். எங்கள் நட்பை பிரிக்க பார்த்தால், உயிரோடு இருக்க மாட்டேன்...' என்றான்.
எங்கள் மகன் நட்பு விஷயத்தை எப்படி கையாள்வது... நல்ல அறிவுரை தரவும்.
- இப்படிக்கு,
கி.சீனிவாசன்.
அன்புள்ள சகோதரருக்கு...
உங்கள் மகன் கொண்டுள்ள நட்பை அலசி ஆராய்வோம்...
பதின்ம வயதினர், 98 சதவீதத்தினருக்கு, ஒன்று அல்லது இரண்டு நண்பர்கள் இருப்பர்; 78 சதவீதத்தினருக்கு, ஒன்றிலிருந்து ஐந்து நண்பர்கள் இருப்பர்; 20 சதவீதம் பேருக்கு, ஆறுக்கும் மேற்பட்ட நண்பர்கள் இருப்பர்; 2 சதவீத பேருக்கு நண்பர்களே இருப்பதில்லை.
செயல்பாடுகளின் அடிப்படையில், ஆண்களுக்கு இடையே நட்பு அமைகிறது; உணர்வுகள் அடிப்படையில், பெண்களுக்கு இடையே நட்பு அமைகிறது.
தொடர்ந்து, 50 மணி நேரம் ஒருவர் முகத்தை பார்க்க நேர்ந்தால், சம்பிரதாய நட்பு மலரும். 90 மணி நேரம் பார்க்க நேர்ந்தால், நட்பு சற்றே நெருக்கமாகும். கூடுதலாக, 200 மணி நேரம் பார்க்க நேர்ந்தால் உயிர் நட்பு பூக்கும்.
நட்பில், முக பரிட்சயம், நட்பு, நெருங்கிய நட்பு மற்றும் ஆத்ம நட்பு என நான்கு வகை உண்டு!
உண்மையான நட்பு என்பது, பரஸ்பர ஈர்ப்பு, மரியாதை, நம்பிக்கை, உணர்வு ரீதியான, செயல் ரீதியான ஒத்துழைப்பை உடையது.
உண்மையான நண்பர்கள், இதயத்தால் புன்னகைப்பர்; அவர்களுக்குள் போட்டி இருக்காது; நேர்மையை கடைப்பிடிப்பர். உடல் ரீதியாக ஒட்டியே இருப்பர்; ஒருவரை ஒருவர் அவரவர் நிலையிலேயே ஏற்றுக்கொள்வர்.
நல்ல நண்பர்களை பெற்றவர்கள், மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பர். அவர்களிடம் சுயமதிப்பீடு அதிகரித்து காணப்படும்.
உங்கள் மகன் நட்பை வீணாய் ஆராயாதீர்; உள்ளுக்குள் அத்து மீறாதீர். பொறுமை, மரியாதையாக கண்ணியப்படுத்துங்கள். அவன் மதங்களை தாண்டி, மனிதநேயம் போற்றட்டும்.
நண்பனை, வீட்டிற்கு அழைத்து வந்தால், அன்பாய் புன்னகையுங்கள்; விருந்தோம்பல் செய்யுங்கள்; நலம் விசாரியுங்கள்.
பொதுவாக, இளமைக்கால நட்புகள், திருமணத்திற்கு பின், 'டாட்டா' காட்டும்.
உங்கள் மகன் கொண்டுள்ள நட்பு, தடைகளை தாண்டி, ஆயுட்கால பந்தமாய் தொடரட்டும். பெற்றோரை விட, அதிக நேசிப்பை நண்பனிடம் கொட்ட வாய்ப்பே இல்லை.
உணர்வை மிகைப்படுத்தி கூறுகிறான் உங்கள் மகன். அதை பெரிதுப்படுத்தாதீர்; நட்புக்கு குறுக்கே போகாத வரை, உணர்வு ரீதியான மிரட்டல் அவசியப்படாது.
கப்பலுக்கு கலங்கரை விளக்கம் போல் இந்த நட்புக்கு வழி காட்டுங்கள்!
- அன்புடன், பிளாரன்ஸ்

