
அரசூர் என்னும் ஊரில் ஜெகன் என்ற தச்சன் இருந்தான். தச்சு வேலையில் திறமைசாலியான ஜெகன் ஒரு பெரிய கட்டிலைச் செய்தான். அந்தக் கட்டிலின் நான்கு புறமும் நான்கு மரச் சிப்பாய்களை நிறுத்தி வைத்தான். இதில் ஒரு அதிசயம் என்னவென்றால், அந்த நான்கு மரச்சிப்பாய் பொம்மைகளும் பேசவும், நடக்கவும் சக்தி படைத்தவை.
ஒரு சமயம், முனிவர் ஒருவரிடம் தான் கற்ற மந்திர சக்தியை பயன்படுத்தி அந்த பொம்மைகளுக்கு சக்தி கொடுத்தான். அந்த அதிசயக் கட்டிலைத் தன்தலை மீது தூக்கி வைத்தபடி நடந்தான்.
''அதிசய கட்டில் வாங்கலையா? வாங்குவோர் வளமடைவர்; பயன்பெறுவர்,'' என்று கூறியபடி வீதிகளில் நடந்தான்.
அவன் கட்டிலை விற்கவே, அப்படிக் கூறுவதாக எல்லாரும் நினைத்தனர். அந்தக் கட்டிலின் மாயப் பொம்மைகள் பற்றி யாருக்குமே தெரியாது.
அந்த நாட்டு அரசர் காதிலும் இவன் கூவியது விழுந்தது. உடனே இவனை அழைத்து வரச் சொன்னார். கட்டிலைப் பற்றி எதுவுமே அவர் விசாரிக்கவில்லை. அவருக்கு கட்டிலின் வேலைப்பாடு மிகவும் பிடித்து இருந்தது.
''உடனே, கட்டில் தனக்கு வேண்டும். கட்டிலின் விலை என்ன?'' எனக் கேட்டார் அரசர்.
''அரசே! கட்டிலை முதலில் தாங்கள் பயன்படுத்திப் பாருங்கள். அதன் பின்பு தாங்கள் விரும்பியதைத் தாருங்கள்,'' என்று கூறி கட்டிலை அவரது படுக்கை அறையில் வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றான் ஜெகன்.
வீட்டிற்கு சென்றவுடன், ''கட்டிலை விற்று எவ்வளவு பணம் கொண்டு வந்தீர்கள்?'' என்று கேட்டாள் ஜெகனின் மனைவி.
நடந்தவைகளை விளக்கினான் ஜெகன்.
''அரசரிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்காமல் இப்படி வெறும் கையுடன் வந்திருக்கிறீர்கள்! ஒருவேளை அரசர் கட்டிலைப் பயன்படுத்தி விட்டு இது பிடிக்கவில்லை என்று கூறினால் என்ன செய்வது?'' எனக் கேட்டாள்.
''பொறுத்திருந்து அனைத்தையும் பார்,'' என்றான்.
கட்டிலை வாங்கிய அரசன் அன்றிரவு படுத்துறங்கச் சென்றார். வெகு நேரமாகியும் அரசருக்குத் தூக்கமே வரவில்லை. எனவே, கட்டிலில் படுத்து கண்களை மூடியபடி, எதையோ சிந்தித்துக் கொண்டு இருந்தார் அரசர்.
அப்போது கட்டில் லேசாகக் குலுங்குவது போல இருந்தது. கட்டிலின் நான்கு பக்கத்தில் வடக்குப் பக்கம் இருந்த சிப்பாய் பொம்மை மெல்ல கட்டிலை விட்டு இறங்கியது. இதை அரசர் கவனித்து திடுக்கிட்டாலும் எதுவும் பேசாமல் கவனித்தார்.
''என்ன முதலாவது சிப்பாயே! எங்கு செல்கிறாய்?'' என்று மற்ற சிப்பாய்கள் கேட்டன.
''சகோதரர்களே! நான் இன்று போய் அரசனுக்கு நன்மை செய்து விட்டு வருகிறேன்,'' என்று கூறியது.
அரசர் அதற்கும் எதுவும் பேசவில்லை. பின், சிப்பாய் பொம்மை வேகமாக இறங்கி வெளியில் சென்றது. இரண்டு மணிநேரத்தில் மீண்டும் திரும்பி வந்தது.
''வெளியில் சென்ற நீ அரசருக்கு என்ன நன்மை செய்தாய்?'' என்று கேட்டன மற்ற சிப்பாய்கள்.
''நான் வெளியில் சென்றபோது நம் அரசனின் வெகுகால எதிரியான பக்கத்து நாட்டு அரசன் கஜபதி மாறுவேடத்தில் நம் அரசரைக் கொல்ல திட்டமிட்டு வந்தான். கோட்டை வாசலை அவன் தாண்ட முனைந்தபோது பொம்மை போல காணப்பட்ட என்னை அவன் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், அடுத்த நொடி நான் அவனை வெட்டிக் கொன்று விட்டேன்,'' என்றது முதல் சிப்பாய் பொம்மை.
அதைக் கேட்ட அரசனுக்கு வியப்பு தாளவில்லை. உடனே தன் படுக்கையை விட்டெழுந்தான். கோட்டை வாசலில் சென்று பார்த்தான். அங்கு நிஜத்திலேயே அரசனின் எதிரியான கஜபதி அரசன் இறந்து கிடந்தான். மன்னன் இதனால் பெரிதும் மகிழ்ந்தான்.
மறுநாள்-
ஜெகனின் வீட்டிற்கு ஐம்பது தட்டு நிறைய பொன்னும், பணமும் அனுப்பி வைத்தார். இதே போல இரண்டாம் நாள் இரவும் அந்த மாயக்கட்டிலில் படுத்தார். அன்று கட்டிலின் தெற்கு மூலையில் நின்றிருந்த மரச் சிப்பாய் பொம்மை தன் இடத்தை விட்டு இறங்கியது.
''சகோதரர்களே! இன்று நான் வெளியில் சென்று அரசனுக்கு நன்மை செய்து விட்டுத் திரும்புகிறேன்,'' என்று கூறிச் சென்றது. அது திரும்பும் வரையில் அரசனும் காத்திருந்தார். இந்த சிப்பாய் பொம்மை சில நிமிடங்களிலேயே திரும்பி வந்தது.
''என்ன அதற்குள் திரும்பி விட்டாய்?'' என்று கேட்டன மற்ற சிப்பாய்கள்.
''நான் வெளியில் சென்ற போது அரசரின் காலணிகளை இந்த அறைக்கு வெளியில் கண்டேன். அந்த காலணியில் ஒரு பாம்பு சுருண்டு படுத்திருந்தது.
''நாளை தூக்க கலக்கத்தில் அரசர் எழுந்து சென்று காலணிகளை அணிய நேர்ந்திருந்தால், அவர் கதி என்னவாகி இருக்கும்? நிச்சயம் பாம்பு தீண்டி அவர் இறந்து விடுவாரே. அதனால், நான் அந்தப் பாம்பை இப்போது தான் வெட்டிக் கொன்று விட்டு வருகிறேன்,'' என்றது.
உடனே, அரசர் விருட்டென எழுந்து தன் காலணிகளைக் கழற்றிய இடத்திற்கு ஓடினார். அதன் அருகில் ஒரு பாம்பு இறந்து கிடப்பதைக் கண்டார். மறுநாள், மேலும் ஐம்பது தட்டுகளில் வைரமும், பணமும் ஜெகனுக்கு தந்து அனுப்பினார்.
மூன்றாம் நாள்-
அரசர் கட்டிலில் படுத்திருந்தார். அன்று மேற்கு மூலையில் நின்றிருந்த சிப்பாய் அரசருக்கு நன்மை செய்யப் புறப்பட்டது.
அது நடு இரவில் திரும்பி வந்தது.
''சகோதரர்களே! இன்று இந்த ஊரை அழிக்கப் புறப்பட்டு வந்த வடக்கு மலையிலுள்ள பிசாசை நான் கொன்று நாட்டைக் காப்பாற்றினேன். பிசாசின் உடலை துண்டு துண்டாகக் கீறி இவ்வூரிலுள்ள ஆற்றில் வீசியுள்ளேன்,'' என்று கூறியது.
மறுநாளும் அரசர் ஜெகனுக்கு தன் மகிழ்ச்சியின் அடையாளமாக, ஐம்பது தட்டுக்கள் நிறைய பவளமும், பணமும் அனுப்பி வைத்தார். நான்காம் நாள் இரவும் அரசர் அதே கட்டிலில் படுத்துறங்கினார். அக்கட்டிலின் கிழக்கு மூலையிலிருந்த மரச்சிப்பாய் எழுந்து வெளியே சென்றது.
விடியும் வேலையில் திரும்பி வந்தது. மற்ற மூன்று சிப்பாய்களும் திரும்பி வந்த சிப்பாயிடம், ''ஏன் இவ்வளவு நேரம்? உன்னால் அரசர் பெற்ற நன்மை என்ன?'' என்று கேட்டன.
உடனே, நான்காவது சிப்பாய், சகோதரர்களே! நான் நேற்றிரவு அரண்மனையின் கருவூலத்தில் நான்கு திருடர்கள் நுழைவதைக் கண்டேன். அவர்களுடன் சண்டையிட்டு அந்நால்வரையும் கொன்று விட்டு கருவூலத்திலுள்ள பொக்கிஷத்தைக் காப்பாற்றினேன்,'' என்றது.
உடனே, அரசர் எழுந்து சென்று கருவூலத்தைப் பார்த்தார். அங்கு நான்கு திருடர்கள் இறந்து கிடப்பதையும், அருகில் கருவூல பணம் மூட்டை மூட்டையாகக் கட்டி கிடப்பதையும் கண்டார்.
மிகுந்த மகிழ்வுடன் மேலும் ஐம்பது தட்டுக்களில் முத்துக்களையும், பணத்தையும் வைத்து ஜெகனுக்கு அனுப்பினார். அத்துடன் ஜெகனையும் வரவழைத்தார். அவனது மாயக் கட்டிலால் தனக்குக் கிடைத்த லாபங்களைக் கூறி மகிழ்ந்தார். அதோடு இம்மாயக் கட்டிலை செய்த ஜெகனை, தன் அரண்மனைவியிலேயே ஆஸ்தான தச்சனாக நியமித்தார்.
வீடு திரும்பிய ஜெகன், தன் மனைவியிடம், ''அன்றே நான் ஒரு பரிசை அரசனிடம் பெற்று இருந்தால் இப்படி தட்டுத் தட்டாகப் பொன்னும், பணமும் எனக்கு கிடைத்து இருக்குமா? அதோடு அரண்மனையின் ஆஸ்தான தச்சன் பதவி கிடைத்திருக்குமா? அரசர் ஒவ்வொரு நாளும் மகிழ்ந்த போது எனக்கொரு பரிசை அனுப்பினார் அல்லவா? அது தெரிந்துதான் முன்பே, 'பின்னால் தாருங்கள்' என்று கூறிவிட்டு வந்தேன்,'' என்றான்.
கணவனின் புத்திசாலித் தனத்தை கண்டு மகிழ்ந்தாள் ஜெகனின் மனைவி.