PUBLISHED ON : ஜூன் 13, 2014

நாராயண நம்பூதிரியின் கோபம் தணிந்ததும் தன் மகனிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக வருந்தினார். அவன் தங்கையைத் தேடக் கிளம்பிக் கொண்டிருக்கும் செய்தி அறிந்து, வழிச் செலவுக்காக ஏராளமான பொற்காசுகள் அடங்கிய மூட்டையைத் தம் காரியாதிகாரி மூலம் கொடுத்தனுப்பினார். சகல வசதிகளையும் செய்து கொடுக்கும்படியும் ரகசியமாக உத்தரவிட்டார்.
மகேஷ் மிகச்சிறந்த குதிரை மீது தன் பயணத்தைத் தொடங்கினான். கப்பலில் போனால் கடலில் ஆட்சி நடத்தும் கொள்ளைக் காரர்களின் தொல்லைக்கு ஆளாக வேண்டி இருக்கும். தவிர, நிலத்தில் பயணப் பட்டால் அவர்களுக்கு முன்னால் சூரத் நகருக்குப் போய்விடலாம் என்று தீர்மானித்தான். அவன் தனி மனிதன். மூட்டைகள் இல்லை. குதிரையும் உயர் ஜாதி. ஆகவே, ஆறு நாட்களில் சூரத்தை அடைந்துவிடலாம் என்று உறுதி கொண்டான் மகேஷ்.
நான்காவது நாள் தன்னந்தனியே அடர்ந்த கானகத்தின் வழியே போய்க் கொண்டிருக்கும் போது, திடீரென்று மூன்று குதிரை வீரர்கள் அவனை வழிமறித்தனர். பலம் பொருந்தியவர்களாகவும், வாள், ஈட்டி ஆகிய ஆயுதங்களுடனும் அவர்கள் இருந்தனர்.
''பணிந்துவிடு... போராட நினைக்காதே!'' என்று அம்மூவரும் எச்சரித்தனர்.
மகேஷும் போராடிப் பயனில்லை என்பதை அறிந்து எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
அந்த மூவரும் கீழே இறங்கி மகேஷின் கால்களை அவன் குதிரையின் வயிற்றின் கீழே இணைத்துக் கட்டினர். அவன் கைகளைப் பின்னால் கொண்டு போய் நீண்ட கயிற்றினால் உடலோடு சேர்த்துக் கட்டினர். மகேஷை அவன் குதிரை மீதே வைத்து இப்படிக் கட்டிக் கைதியாக்கிக் கொண்டு கிளம்பினர். ஒருவன் மகேஷின் குதிரையின் கடிவாளத்தையும், இன்னொருவன் அவனைக் கட்டியுள்ள கயிற்றின் முனைகளைப் பிடித்துக் கொண்டும் நடந்தனர்.
மகேஷின் நிலை எப்படி இருக்கும்? தகப்பனாரின் கோபத்தை நினைப்பதா, கொள்ளைக் கப்பல் சூரத்தை அடையும் முன்புதான் போக நினைத்த திட்டத்துக்கு இப்படித் தடை ஏற்பட்டு விட்டதை நினைப்பதா? வேதனையினால் தவித்துக் கொண்டிருந்தான்.
சுல்தான்களின், ஆட்சி வடக்கே நடப்பது பற்றி அறிவான்தான். 'ஆண்டவன் விட்டவழி, இவர்கள் என்னை என்னதான் செய்கின்றனர் பார்ப்போம்' என்று மவுனமாக இருந்தான்.
இரண்டு மைல் பயணத்துக்குப் பிறகு, ஒரு பள்ளத்தாக்கில் நுழைந்தனர். மரங்கள் அடர்ந்த பகுதி வழியே சென்றவர்களின் முன்னால் ஒரு அற்புதமான காட்சி. பச்சை பசேல் என்ற புல் வெளி. ஓர் ஓரத்தில் சலசலத்து ஓடும் பளிங்கு நீரோடை. மரகதக் கம்பளம் விரித்ததுபோன்ற புல்வெளியில் பத்துப் பதினைந்து கூடாரங்கள். ஒட்டகங்களும், குதிரைகளும் மூலையில் கட்டப்பட்டு நின்றன. தந்தி வாத்தியத்தை மீட்டும் இனிய ஓசை. யாரோ இருவர் அதற்கேற்ப பாடிக் கொண்டிருந்தனர். அந்த ரம்மிய மான சூழலைக் கண்ட எவருக்கும் அங்கு ஓய்வெடுக்கும் ஆசை தோன்றாமலிருக்காது.
'கலையழகுமிக்க இந்த இடத்தில் கூடாரமிட்டுள்ளவர்கள் நிச்சயம் கொடுமை புரிபவர்களாக இருக்கமாட்டார்கள்' என்று நினைத்தான் மகேஷ். அதேபோல, அவன் கட்டுகளை அகற்றினர். அவனைக் கைதியாக்கி வந்தவர்கள். அங்குள்ள கூடாரங்களில் பெரியதாகத் தோன்றிய கூடாரத்தினுள் அவனைக் கொண்டு போயினர். அந்தக் கூடாரம் உள்ளே ஒரு பெரிய அரண்மனை போலிருந்தது. தங்க இழைகளால் பூவேலை செய்யப்பட்ட விரிப்புகளும், மஞ்சங்களும், மதுக் கிண்ணங்களும், ஆசனங்களும்... கூடாரத்தினுள்ளேயா இத்தனை கோலாகலம்? என்னும் போது பிரமிப்பூட்டுவதாக இருந்தது.
மிக உயர்ந்த திண்டுகளிட்ட இருக்கையொன்றிலே ஒரு கிழவன் உட்கார்ந்திருந்தான். விகாரமான உருவம், கரிய நிறம். அவன் கழுகுக் கண்கள் அவன் கொடியவன் என்பதைக் கூறின. தன்னை அழைத்து வந்தவர்களை அவன் பார்த்த அந்த அதிகார தோரனை அவன் இந்த உன்னதமான இடத்துக்கு உரியவனல்ல என்பதைச் சொல்லின. அழைத்து வந்தவர்கள் அவனுக்குக் காட்டிய மரியாதையிலிருந்து மகேஷின் ஊகம் உறுதியாயிற்று.
''தலைவர் எங்கே?'' என்று கிழவனை ஒருவன் கேட்டான்.
''வேட்டைக்குப் போயிருக்கிறார். என்னை அவர் இடத்திலிருந்து ஆணையிடச் சொல்லி இருக்கிறார்,'' என்று கண்களைச் சிமிட்டியபடி கூறினான் கிழவன்.
''இது சரியாக படவில்லையே...'' என்றான் ஒருவன்.
''இந்த கைதி கொல்லப்பட வேண்டுமா இல்லையா? உடனே முடிவு செய்தாக வேண்டுமே. தலைவரால்தான் அந்த முடிவு எடுக்க முடியும். உனக்கு என்ன தெரியும்?'' என்றான் இன்னொருவன்.
இது கிழவனை உசுப்பி விட, அந்தக் கழுகுக் கண்ணன் காச்முச்சென்று கத்த, இவர்கள் திருப்பிப் பதில் கூற கூடாரத்துக்குள் ஒரே கூச்சல். சண்டையே ஆரம்பமாயிற்று. அப்போது திடீரென்று கூடாரத்தின் நுழை வாசல் திரைச்சீலை அகன்றது. நெடுந்துயர்ந்த கம்பீரமான, இள வயதினனான, அழகான ஒரு உருவம் உள்ளே நுழைந்தது. பாரசீகத்து இளவரசனைப் போன்று ஆடை, இடையிலே நீண்ட வாள், ஆணையிடும் பார்வை. அவனைக் கண்டதும் பட்டென்று கூச்சல் அடங்கியது. எல்லாரும் தரையில் முழந்தாளிட்டு, தலைதாழ்த்தி வணக்கம் செலுத்தினர்.
''என்னுடைய கூடாரத்திற்குள் கூச்சலும், குழப்பமும் உண்டாக்கியது யார்?'' என்றான் வந்தவன்.
அதற்கு விடை மவுனம்தான். எல்லாரும் கவிழ்ந்து நின்று கொண்டிருந்தனர். சிறிது நேர அமைதிக்குப் பிறகு, மகேஷை கைதியாக்கி வந்தவர்களுள் ஒருவன் நடந்ததை மெல்லிய குரலில் விளக்கினான். அதைக் கேட்ட அந்த வாலிபனின் முகம் கோபத்தினால் சிவந்தது.
''என் இடத்தில் அமர்ந்து உன்னை ஆணையிடும்படி நான் எப்போது கூறினேன் உன்னிடம்?'' என்று கோபமாக கேட்டான் வாலிபன்.
கழுகுக் கண் கருப்புக் கிழவனின் சிறிய உடல் இன்னும் சுருங்கிச் சின்னதாகியது. உடல் நடுங்க மெல்ல மெல்ல நகர்ந்து நுழை வாசலுக்குப் போனவன் ஒரே பாய்ச்சலாக வெளியே பாய்ந்து ஓடியே போனான்.
அமைதி நிலவிய கூடாரத்தில் தன் முன்னே நிற்கும் கைதியைப் பார்த்தான் அந்த வீர வாலிபன். இப்போது அவன் அங்கிருந்த பெரிய விரிப்பிலே உள்ள திண்டிலே அலட்சியமாகச் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான்.
''நீங்கள் குறிப்பிட்டபடி இவனைக் கைதியாக்கி வந்துள்ளோம்,'' என்றான் ஒரு வீரன்.
தலைவன் என்று அழைக்கப்பட்ட அந்த வீர வாலிபன் மகேஷை சில விநாடிகள் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு
''சுலைமான் பாஷா! என்முன் எதற்காகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கிறாய் என்பதை உன் நெஞ்சம் அறிந்திருக்குமே,'' என்றான்.
இதைக் கேட்ட மகேஷ் வியந்துபோனான்.
''ஐயா! நீங்கள் தவறான நபரிடம் பேசுகிறீர்கள். நான் சுலைமான் பாஷா இல்லை. என் பெயர் மகேஷ் நான் நெடுந்தூரப் பயணத்தின் பத்திரத்துக்காக உங்களைப் போன்று உடை உடுத்தி இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் பாஷா நானல்ல,'' என்றான்.
மகேஷின் பேச்சைக் கேட்டு கூடாரத்தில் உள்ளவர்கள் திகைத்துப் போயினர்.
ஆனாலும் தலைவன், ''இப்படியெல்லாம் பேசி நடித்தால் நீ தப்பிவிடமுடியாது. உன்னை நன்கு அறிந்த ஒருவனை அழைத்து உன் வேஷத்தைக் கிழிக்கிறேன் பார்,'' என்று கூறி, கதீஜாவை அழைத்து வரும்படி ஆணையிட்டான். சற்றைக்கெல்லாம் ஒரு வயதான பெண்மணி அங்கு கெண்டு வரப்பட்டாள்.
''இவன் யார் என்று சொல் பார்க்கலாம்,'' என்றான் அந்தப் பெண்ணிடம்.
''இதில் ஐயத்துக்கு இடமேயில்லையே! இது சுலைமான் பாஷாவேதான்!'' என்றாள் அவள்.
''கேடுகெட்டவனே! உன் குள்ளநரித்தனம் எப்படிப் பிசுபிசுத்துப் போயிற்று பார்த்தாயா? என் வாளை உன் ரத்தத்தினால் மாசுபடுத்த விரும்பவில்லை. நாளை காலை நீ என் குதிரையின் வாலில் கட்டப்படுவாய். என்னோடு நீயும் காட்டிலே வேட்டையாடுவாய். சூரியன் மேற்குக் கடலில் மறையும் வரை!'' என்றான்.
இதைக் கேட்ட மகேஷ் அப்படியே உடைந்து போனான்.
- தொடரும்.
