PUBLISHED ON : ஜூன் 27, 2014

''நண்பரே! இனி நீங்கள் பயணம் செய்யலாம். நான் விடைபெறுகிறேன். இதோ போகும் இந்த பாதையில் போனீர்களானால் நாளை மாலைக்குள் சூரத் துறை முகத்துக்குப் போய் விடலாம்.
''நண்பனே! இறைவனின் அருளினால் தான் என்னுடைய நட்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. கொள்ளைக்காரனான இந்த குலாம் முகமதுவின் இருப்பிடத்தை அறிந்தவர்கள் இதுவரை யாரும் உயிரோடு திரும்பியதில்லை. ஆகவே, என்னைப் பற்றிய தகவல்களை யாரிடமும் கூறமாட்டாய் என்று நினைக்கிறேன். மரணத்தின் நுழைவாசல்வரை போன உன்னை இறைவன்தான் காப்பாற்றி, என் நண்பனாக்கி இருக் கிறார். என் நட்பின் அடையாளமாக, என் நினைவாக இந்த வாளை ஏற்றுக்கொள். உனக்கு ஆபத்துக் காலத்தில் உதவி தேவையானால், இந்த வாளை என்னிடம் அனுப்பு. உன்னைக் காப்பாற்ற ஓடோடி வருவேன்,'' என்று கூறி அழகிய வாள் ஒன்றை அளித்தான் குலாம்முகமது. பிறகு தன் குதிரையின் சேணத்தினடியில் முடித்து வைத்திருந்த ஒரு பொன்முடியை எடுத்து மகேஷிடம் நீட்டினான்.
''இதிலுள்ள பொற்காசுகள் நீ போகும் அந்நிய நாட்டில் தேவைப்படும். இதையும் ஏற்றுக்கொள்,'' என்று கொடுத்தான்.
மகேஷ் வாளை மட்டும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, ''உங்கள் உதாரண குணத்துக்கும், பெருந்தன்மைக்கும் என் பாராட்டுக்கள். உங்கள் நட்பு மட்டுமே எனக்குப் போதுமானது... இந்தப் பொன்முடிப்பு வேண்டாம்,'' என்று மறுத்தான்.
ஆனால், குலாம் முகமது, மகேஷின் பேச்சை லட்சியம் செய்யவில்லை. பொன்முடிப்பை அவன் கையில் திணிக்க, அது தரையில் விழுந்தது. ஆனால், அவனோ தன் குதிரையைத் தட்டி விரட்டியபடி மின்னலெனக் கிளம்பி மறைந்து விட்டான். திகைத்துப் போய் நின்ற மகேஷ், வேறு வழியின்றிக் குதிரையிலிருந்து இறங்கி அந்தப் பொன்முடிப்பை எடுத்துக் கொண்டான். கொள்ளைக்காரனானாலும் நல்ல இதயமும், உதாரகுணமும் கொண்ட குலாமை நினைத்து வியந்தபடியே முடிப்பை அவிழ்த்துப் பார்த்தான். அவனுடைய வியப்புக்கு எல்லையே இல்லை. அதில் ஏராளமாக பொற்காசுகள் இருந்தன. குலாம் கூறியதுபோல இது இறைவனின் திருவருள் என்று அவரை துதித்தபடியே தன் பயணத்தை துரிதப்படுத்தினான்.
ஆறாவது நாளில் மகேஷின் பயணம் தடைப்பட்டது இல்லையா? அதன் பிறகு ஒருநாள் பயணப்பட்டு சூரத் நகரை அடைந்தான். ஒரு சத்திரத்தைத் தேடிப்போய் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொண்டான். சத்திரத்துக்காரரிடம் அங்கு கூடும் புகழ் பெற்ற அடிமைச் சந்தையைப் பற்றி விசாரித்தான். அவர் கூறிய பதில் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
''அடிமைச் சந்தை முடிந்து இரண்டு நாட்களாகிவிட்டன!'' என்றார்.
''சந்தையில் ஏதாவது விசேஷமுண்டா?'' என்று கேட்டான் மகேஷ்.
''விசேஷமில்லாமலா? இந்தச் சந்தையில் தான் இத்தனை காலமாக இல்லாத விசேஷமிருந்தது. இரண்டு அழகிகளை மேடையிலேற்றி விலைக்கு நிறுத்தினர். தெற்கே இருந்து வந்தவர்களாம். அடடா! என்ன அழகு! என்ன ஒயில்! என்ன மேனி! சந்தையிலிருந்த அத்தனை கண்களும் அவ்விரு அழகிகளை பார்த்துப் பரவசப்பட்டன. அவர்களை வாங்குவதற்கு பலத்த போட்டா போட்டிகள். இதைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களை விற்க வந்த வியாபாரிகள் விலையை ஏகமாக உயர்த்திவிட்டனர். சந்தைக்கு வந்திருந்த சாதாரணமானவர்களால் அவர்களை வாங்க முடியவில்லை!''
''அப்படியானால் அவர்களை யாரும் வாங்கவில்லையா?'' என்று ஆவலுடன் கேட்டான் மகேஷ்.
''அதெப்படி? சந்தைக்கு வந்த பொருள் விற்காமல் போகுமா? ஒரு கிழட்டு சுல்தான் அந்த அழகிகளைத் தட்டிக் கொண்டு போய் விட்டார். தம் அந்தப்புரத்தை அலங்கரிக்க!''
''ராஜாவா?''
''அவர் ராஜா கூட இல்லையாம். ஆனால், பெரும் செல்வச்சீமான். ராஜ பரம்பரையில் வந்தவராம். மூதாதையரின் கோட்டையில் வசிக்கிறார்,'' என்றார் சத்திரத்துக்காரர்.
மகேஷ் அவரிடம் அந்த அழகிகளைப் பற்றி மேலும் விசாரித்து அவ்விருவரும் வினோதினியும், அம்பிகாவும் தான் என்பதை உறுதிசெய்து கொண்டான். அவன் நெஞ்சம் தவித்தது. தன் அருமைச் சகோதரியும், அம்பிகாவும் சுல்தானின் அடிமையாகப் போனதை எண்ணிக் கண்ணீர் வடித்தான். அந்த சுல்தானின் கோட்டை எங்கிருக்கிறது என்பதை விசாரித்தான். சூரத்திலிருந்து அறுபது மைல்களுக்கு அப்பால் அவருடைய கோட்டை இருப்பதாகக் கூறினார் சத்திரக்காரர்.
உடனே குதிரை மீதேறி அந்தக் கோட்டையை அடையத் துடித்தது மகேஷின் மனம். ஆனால், 'தான் மகேஷாக போனால், சுல்தானைச் சந்திக்கவே முடியாது. ஏராளமான பொருளைக் கொட்டிப் பெண்களை வாங்கியவன் சுலபத்தில் அதை இழக்க மாட்டான். ஆகவே, திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். அவசரப்படக்கூடாது' என்ற முடிவோடு அன்றிரவைச் சத்திரத்தில் தங்கி இளைப்பாறத் தீர்மானித்தான். ஆனால், தூக்கம் வந்தால்தானே! இரவு முழுவதும் 'என்ன செய்யலாம்? எப்படிச் சுல்தானின் கோட்டைக்குப் போகலாம்?' என்று மூளையைக் கசக்கிக் கொண்டிருந்த மகேஷுக்கு, சட்டென்று ஒரு யோசனை தோன்றியது.
சுலைமான் பாஷா என்று என்னை நினைத்துக் கைது செய்து கொண்டு போனதைப் போலவே, நான் சுலைமான் பாஷாவாக நடித்தால் என்ன? உருவ ஒற்றுமை இருக்கிறது. நிறம் மட்டும் கொஞ்சம் மாறுபடும். அவனைப் போல தாடி, தலைப்பாகை, உடை அணிந்து வேஷம் மாறும்போது நிறத்தையும் சாயம்பூசி மாற்றிக் கொள்ளலாம். சுலைமான், குலாமிடம் சிறைப்பட்டிருக்கிறான். உயிர் பிழைப்பானோ மாட்டானோ அவன் சிறைப்பட்டது யாருக்கும் தெரியாது. அவனும் ஒரு பகுதியின் பாஷா-ராஜா, இந்த சுல்தானும் ராஜாமாதிரிதான். அந்த ராஜா இந்த ராஜாவைச் சந்திக்க வருவது போல நான் கோட்டைக்குள் நுழையலாம்.
மகேஷின் உற்சாக மிகுதியால் எழுந்து உட்கார்ந்து கொண்டான். அதன் பிறகு தூக்கமா வரும்? சுலைமான் பாஷாவாக மாறி சுல்தானின் கோட்டைக்குள் போவதற்கான திட்டங்களை வகுக்கலாயிற்று அவன் மனம். ராஜா என்றால் பரிவாரங்களோடு, ஆர்ப்பாட்டமாகத்தான் போக வேண்டும். ஆள்படைகளையும், குதிரை பல்லக்கு ஆகியவற்றையும் தயாரித்தாக வேண்டும். குலாம் முகமது கொடுத்த பொற்காசுகள் இதற்குப் பயன்படுவதற்காகத்தான் போலிருக்கிறது. 'ஆண்டவா உன் கருணையே கருணை!' என்று கண்களில் நீர்திரள இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டான்.
பொழுது விடியுமுன்பே மகேஷ் கிளம்பி விட்டான். பத்துக் குதிரைகளையும், சில ஒட்டகங்களையும் வாங்கினான். விலையுயர்ந்த ஆடையணிகலன்களையும் வாங்கிக் கொண்டான். வீரர்களைப் போலத் தோற்றம் கொண்ட பதினைந்து வாலிபர்களை வாடகைக்கு அமர்த்திக் கொண்டான். தன்னோடு வரவேண்டும் என்று திட்டமிட்டு, பிறகு சத்திரத்தில் தன் அறைக்குள் கதவைத் தாளிட்டு கொண்டு தன்னை, சுலைமான் பாஷாவாக மாற்றிக் கொள்ளும் வேஷம் போடும் காரியத்தில் இறங்கினான். மகேஷ் நல்ல சிவப்பு சற்றே கருமைப்படர்ந்த கோதுமைநிறம். ஆகவே, உடைகள் மறைக்காத பகுதிகளில், தன் நினைவிலிருந்தபடி பாஷாவின் உடல் நிறத்துக்குச் சாயம்பூசிக் கொண்டான்.
எல்லாம் தயாரானதும் சுல்தானின் கோட்டையை நோக்கிக் கிளம்பினான் போலி சுலைமான் பாஷா. ஒரேநாள் பயணம்தான். குதிரை வீரர்களும் ஒட்டகங்களும் புடை சூழ பாஷா கோட்டையை அடுத்திருந்த தோப்பில் முகாமிட்டான். சுல்தானுக்குச் செய்தி அனுப்பினான்.
'ஒரு இரவு தங்குவதற்கு சுல்தான் தனது அரண்மனையில் இடமளிப்பாரா?' என்று கேட்டு.
சிறிது நேரத்தில் நான்கு அடிமைகள் சுல்தானின் கோட்டையிலிருந்து வந்தனர். பாஷாவின் முன் தலை தாழ்த்தி வணங்கியவர்கள் சுலைமான் பாஷா ஏறி இருந்த குதிரையின் கடிவாளத்தைப் பற்றியபடி கோட்டையை நோக்கி நடக்கலாயினர்.
- தொடரும்.
