
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, கீழாயூர் அரசு துவக்கப் பள்ளியில், 1989ல், 4ம் வகுப்பு படித்தேன். மாலை நேரத்தில் மைதானத்தில் விளையாடுவது வழக்கம். பக்கத்தில் அரசு விடுதியில் தங்கியிருந்தவர்களும் உடன் விளையாட வருவர்.
சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்காததால், சொறி சிரங்கு தொற்றியது; அரிப்பு தாங்க முடியவில்லை. உடல் முழுதும் அது பரவியது.
சொறிந்தபடியே இருந்ததை கவனித்த வகுப்பாசிரியர் ராஜா, என்னை தனிமைப்படுத்தி, வீட்டிற்கு அழைத்து வந்தார். குப்பமேனி செடியின் இலைகளைப் பறித்து வந்து, அதை பயன்படுத்தும் முறையை கற்றுத் தந்தார்.
மேலும், 'பரவும் வகை நோய் தொற்றினால் உடனே நாமாகவே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். முறையான மருந்துவம் செய்து, நோய் நீங்கியபின் தான் வகுப்புக்கு வர வேண்டும்...' என, அறிவுரைத்து விடுப்பு தந்தார்.
அவர் காட்டிய வழியில் மருந்தை முறையாக பயன்படுத்தியதால் நோய் நீங்கியது. பரவுவதும் தடைபட்டது.
தற்போது, என் வயது, 40; கொரோனா தொற்றால் அபாய சூழ்நிலையில் வாழ்கிறோம். நம்மை பாதுகாத்துக் கொள்ள தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாய தேவையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் அந்த ஆசிரியர் கற்றுத் தந்த அடிப்படையில், அரசின் அறிவுரையை கடைபிடித்து நலமாக வாழ்கிறேன்!
- ரா.அஜ்மல்கான், சிவகங்கை.

