
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில், 2018ல், 6ம் வகுப்பு படித்த போது நிகழ்ந்த சம்பவம்!
வகுப்பு ஆசிரியை விஜயலட்சுமி அன்பும், கண்டிப்பும் கலந்தவர். பள்ளியில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இறைவணக்க கூட்டத்தில், பொது அறிவு சம்பந்தமாக கேள்விகள் கேட்பர். ஒவ்வொரு வகுப்பிற்கும், தனித்தனியே பரிசுகள் வழங்குவர்.
அன்று எங்கள் வகுப்பிற்கான கேள்வி வந்த போது விடை கூறுவதில் குழப்பம் ஏற்பட்டது.
பதற்றத்தில், பக்கத்தில் நின்ற நண்பனிடம் விளக்கம் கேட்டேன். அருகில் இருந்த அந்த ஆசிரியை அதை கவனித்து, 'சரியோ, தவறோ... மேடைக்கு சென்று பதிலை சொல்...' என்று அறிவுறுத்தினார்.
அதன்படி தாமதிக்காமல் பதிலளித்தேன். அது சரியாக இருந்ததால் பரிசு கிடைத்தது. மேடையை விட்டு இறங்கியதும் அழைத்த ஆசிரியை, 'தயக்கம், தடைக்கல்லாக இருக்க கூடாது. எடுக்கும் முடிவு சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம். ஆனால், தயங்க கூடாது. எப்போதும் முயற்சித்தபடியே இருக்க வேண்டும்...' என அறிவுரை வழங்கினார்.
என் வயது, 15; பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறேன். பொது அறிவை புகட்டிய நிகழ்வின் நினைவு மகிழ்ச்சியை தருகிறது. அந்த ஆசிரியை அளித்த அறிவுரை கல்வெட்டு போல மனதில் பதிந்து நம்பிக்கை ஊட்டுகிறது.
- ம.ராகுல், விழுப்புரம்.