
''சரி நயினா... சத்தியமா என் பறவைகளை கொல்ல மாட்டாய் அல்லவா... அதற்கு பதிலாக நான், நாள் ஒன்றுக்கு உனக்கு இருபது வாளை... வஞ்சிர மீன்களை என் கடைசி மூச்சு உள்ள வரை கொடுப்பேன். இது சத்தியம்!'' என்றான்.
''ஓ! இந்த ஆற்றில் உனக்கு வாளை மீனும், வஞ்சிர மீனும் கெடச்சுருமா... அதையும் பார்த்துட்டா போச்சுடா...'' சொல்லியபடியே இடத்தை காலி பண்ணினான் செந்தில்.
மறுநாள் மதியம் வீட்டிற்கு வந்த செந்திலுக்கு ஒரே ஆச்சரியம். மகன் சொன்னபடியே மிகவும், அபூர்வ வகை மீன்களில் இருபதை கொண்டு வந்து, ''இந்தா! நயினா நா சொன்ன வாக்குப்படி இருபது மீன்கள் தினமும் இதே போல கொண்டாந்து குடுத்துடுவேன்,'' என்றான்.
''ஏண்டா! இத்தனை உயர்ரக மீன்களை நம்ம ஊர் ஆற்றிலேயா புடுச்சே?'' என்றான்.
''அதைப்பத்தி உனக்கு என்ன கவலை. நா புடுச்சேனோ, என் பறவைகள் அவை கொத்தி வந்து தந்ததோ... நீ நல்லபடியா அதுங்க வழிக்கு வராமே இருந்தாலே போதும்.'' பேசிவிட்டு வெளியேறிவிட்டான் பாரி.
'ஜிவ்ஜிவ்வென்று அருவியில் இருந்தும் கொட்டும் நீரோடு கலந்து வரும் மிக உயர்ரக மீன்களை கொத்திவந்து கொடுக்கும் வேலையை செய்வது ஜில்லுவும்... ஜிட்டுவும் அல்லவா? என்னே ஒரு பாசம்... மனிதர்களிடையே கூட காணமுடியாத இந்த ஆழமான பாசத்தை எதனோடு ஒப்பிடுவது?'
நாட்கள் நகர்ந்தன. மகனும் தான் சொன்ன வாக்கை காப்பாற்றி வந்தான். அம்மா கொடுக்கும் உணவை எடுத்துக்கொண்டு அருவிக்கரை போவான். ஜில்லும்மா... ஜிட்டு இருவருக்கும் குரல் கொடுக்க விதவித மீன்களை அலகில் கொத்தி வந்துவிடுவர்.
பிறகு, அம்மா அனுப்பி வைக்கும் ஆகாரத்தை மூவருமாக பகிர்ந்து சாப்பிட்டு விட்டு பிரியா விடை பெறுவர். அன்று இரவெல்லாம் ஒரே மழை. விடியும் நேரத்தில் மழையின் வேகமும் கூடி, வெள்ளம் பெருக ஆரம்பித்து விட்டது. மீன் பிடிக்க புறப்படும் மகனை, ''வாணாம்டா ராசா... இந்த பேய் மழையில் நீ வெளியே போக வாணாம். நாளைக்கு போகலாம்டா,'' என்றாள் அம்மா.
''இல்லேம்மா... இந்த மழை என்னம்மா பெரிய மழை. நா போயி அவங்களையும் பார்த்துட்டு மீனோடு வருகிறேன்,'' என்றான்.
ஒரே பிடிவாதமாக செந்தில் வாய் திறக்கவே இல்லை. அவன் புறப்பட்டு விட்டான். பெருமழை... பெருவெள்ளமாக ஊருக்குள் புகுந்து கோரதாண்டவமாட ஆரம்பிக்க, ''அய்யய்யோ! புள்ளை என் பேச்சை கேட்காமல் போயிட்டான... ஐய்யோ புள்ளை இந்த வெள்ளத்திலே எங்கே சிக்கிட்டானோ,'' என்று புருஷனை திட்டிவிட்டு புள்ளையைத் தேடி அம்மா புறப்பட்டாள். வேறு வழியின்றி செந்திலும் புறப்பட்டான்.
ஊருக்குள் வெள்ளம் புகுந்து விட்டதால் மக்கள் அனைவரும் சற்று மேடான பகுதியில் அடைக்கலம் புகுந்தனர்.
மகன் வெள்ளத்தில் திணருவதைக் கண்ட சிவகாமி, ''அதோ அதோ என் மவன்... போய் தூக்கிட்டு வாங்களேன்...'' என்று கணவனின் கைகளைப் பற்றியபடி அலற, அந்த அலறலையும், வெள்ளத்தின் பேரிரைச்சலையும் மீறி, 'ஜில்லும்மா... ஜிட்டும்மா' என்ற பாரியின் மரண ஓலம்... இரண்டு பெரிய பறவைகள் ஜிவ்வென்று வெள்ளத்தில் முங்கி... படுவேகமாக தன்னோடு பாரியையும் அழைத்துச் செல்லும் வெள்ளத்தைக் கிழித்தவாறு உள்ளே முங்கி தன் நீண்ட அலகால் மிக பிரயாசையுடன் அவனை தன் நெஞ்சோடு அணைத்து வெளியே தூக்க... உடனே, மற்றொரு பறவையும் பாரியின் கால் பாகத்தை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொள்ள இரண்டு பறவைகளுமாக சேர்ந்து சிறிது நேரம் அவ்விடத்தையே சுற்றி சுற்றி வட்டமடித்தது.
இவனை எங்கு கொண்டு செல்வது என்று யோசித்து முத்துமாரி அம்மன் கோவில் வரை பாரியை சுமந்து சென்று, கோவில் வாயில் முகப்பில் மிக மெதுவாக அவனை படுக்க வைத்துவிட்டு, ''பூசாரி அய்யா! சீக்கிரம் வாருங்களேன்'' என்று மிக பயங்கரமாக தீனமான குரல் எழுப்ப, கூட்டம் திக்பிரமை பிடித்து நின்று கொண்டிருந்தது.
வெளியே ஓடி வந்த பூசாரி முதலில் திகைத்து பின், சட்டென்று சுதாரித்து, ''ஏண்டீ... ஜில்லும்மா... உன் மவனுக்கு உயிர் பிச்சை கேட்டு, இங்கே அம்மா கிட்டே கொண்டாந்துட்டியாடீ. அம்மா நிச்சயமாக உனக்கு உதவுவா!'' என்று வாஞ்சையுடன் சொல்லியபடியே பாரியை திருப்பிப்போட்டு வயிற்றை அழுத்த, குடம் குடமாக தண்ணீர் வெளியே வர ஆரம்பித்தது.
இதனை வேடிக்கை பார்க்க கூட்டம் பாரியை நெருங்க முயற்சிக்க, ஊஹும் ஜில்லும்மாவும், ஜிட்டும்மாவும் யாரையுமே அவன் அருகில் வர அனுமதிக்கவில்லை. தண்ணீர் முற்றிலும் வெளியே வந்துவிட மெதுவாக அவன் கண்களைத் திறந்தான். பூசாரிக்கே மகிழ்ச்சி தாங்கவில்லை.
''ஜில்லும்மா! உன் மவன் பிழைச்சுட்டான்... ஜிட்டுப்பைய்யா உன் அண்ணன் பிழைச்சுட்டான்'' என்று கூறியபடியே அவன் உடலை நன்றாக துடைத்து, ''எழுந்து உட்காருடா ராசா!'' என்றதும் எழுந்து உட்கார்ந்தான் பாரி.
அவனை ஒட்டி அவன் அணைப்பில் ஜில்லுவும்... ஜிட்டுவும்.
கூட்டத்தைப் பார்த்து, ''நீங்க அனைவரும் உங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள இங்கே அடைக்கலம் அடைந்தீர்கள். ஆறறிவு படைத்த உங்களுக்கு உங்கள் உயிர் மட்டுமே முக்கியமாகப் பட்டது.
''ஆனால், இப்பறவைகள் இரண்டும் தங்களின் உயிரை துச்சமாக மதித்து தங்களை காப்பாற்றி மறுவாழ்வு கொடுத்தவனை, எப்படியும் காப்பாற்றி விடவேண்டும் என்ற மிக தூய்மையான நினைவில் இங்கே முத்துமாரியிடம் கொண்டு வந்து ஒப்படைத்து விட்டிருக்கிறது பார்த்தீர்களா? தன்னலமற்ற தூய அன்பை செலுத்துவதில் இப்பறவைக்கு இணை இவைகள்தான்,'' என்றார் பூசாரி,
கண்களில் நீர் மல்க... ''தாயே! உன்னைக் கொன்று கறி சமைத்து சாப்பிட ஆசைப்பட்டேன். ஆனால், நீ அதனை மறந்து இந்த கொலைகாரனாகிய என்னை முழுமையாக மன்னித்து, உன் உயிரை பணயம் வைத்து, என் மகனை மீட்டு விட்டாய். நான் கூனி குறுகிப் போனேன்.'' என்றான் செந்தில்
தன் கையிலிருந்த வில்லையும், அம்பையும் இரண்டாக முறித்து வீசி எறிந்து விட்டு, தரையில் விழுந்து, ''என்னை மன்னித்துவிடு என்னை மன்னித்து விடு...'' என்று கதறியபடியே கை கூப்பி வணங்கினான்.
பாரியின் அணைப்பில் இருந்த ஜில்லும்மாவும்... ஜிட்டுப்பயலும் செந்திலின் கதறலை எல்லாம் லட்சியம் செய்யாமல் பூசாரி ஊட்டிய பொங்கலை மிக ஆனந்தமாக தின்றன என்று சொல்லவும் வேண்டுமா?
- முற்றும்