PUBLISHED ON : ஜன 18, 2013
ராஜபுதனத்து மன்னர் பீமர், அவரது ராணி ஒரே பிரசவத்தில், ஆறு குழந்தைகளைப் பெற்றாள். இயற்கைக்கு மாறான இந்நிகழ்ச்சி, மன்னரைக் கவலைக்குள்ளாக்கியது. குழந்தைகள் பிறந்த வேளையில், வானத்தில் வால்நட்சத்திரம் வேறு தோன்றியது. இந்நிகழ்ச்சிகளை அபசகுணமாகக் கருதினார் மன்னர். நாட்டுக்குத் தீங்கு நேரப்போகிறதென்றே முடிவுக்கு வந்தார். குழந்தைகளை கொலை செய்ய நினைத்தார். இதை அறிந்த அரண்மனை ஜோதிடர் ஓடோடி வந்தார்.
'குழந்தைகளைக் கொல்ல வேண்டாம். அவர்கள் ஜாதகப்படி ஆறு குழந்தைகளுக்கும் முடிசூட்டிக் கொள்ளும் பாக்கியம் உள்ளது' என்றார். மன்னர் பீமரும் தன்முடிவை, மாற்றிக் கொண்டார். குழந்தைகளை வளர்த்து வந்தார்.
ஜோதிடர் கூறியது, பின்னாட்களில் பலித்தது. 1525ல் மன்னர் பீமர் காலமானதும், முறைப்படி அவரது மகன்கள் கிர்ஸியா, சான்ரா, மொகர், சுந்திரா, சேத்ரா, யோப் அரியணை ஏறினர். ஆனால், ஒவ்வொருவரின் முடிவும் அவர்கள் கையாலேயே, ஏற்பட்டது. கடைசி மகன் யோப் சிங்காசனம் ஏறி முடிசூடிக் கொண்டதும், 1528-இல் தற்கொலை செய்து கொண்டு மாண்டான். காரணம், இந்தியக் கண்டத்தை வெற்றிக் கண்ட மொகலாய வம்சத்தை ஸ்தாபித்த சாஹிருத்தீன் முகம்மதுவிடம், தோல்வி கண்ட அவமானம் தாங்காமல்தான்.
இந்த சாஹிருத்தீன் முகம்மது யார் தெரியுமா? அவர்தான் பாபர்!
