தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கன்னூர் தேவதை! (2)

கன்னூர் தேவதை! (2)

கன்னூர் தேவதை! (2)


PUBLISHED ON : மே 27, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கன்னூன் தேவதையே! நடப்பவைகளைப் பார்த்தால் உன் வாக்கு பலித்துவிடும் போல் அல்லவா இருக்கிறது. முதலில் ஒரு துண்டு வைக்கோல்... அந்த வைக்கோல் துண்டில் ஒரு பொன்வண்டு... அந்த பொன்வண்டு கைமாறி மூன்று ஆரஞ்சுப்பழங்கள். அந்த மூன்று ஆரஞ்சுப் பழங்களும் கைமாறி, இப்போது மூன்று உயர்ரக பட்டு மூட்டைகள். அதிர்ஷ்ட தேவதை என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறாளோ!' என்று வியந்தவண்ணம் சென்று கொண்டிருந்தவளை வழிமறித்தான் ஒரு சமூராய் வீரன்.

''டேய்! எலி மூஞ்சிப் பயலே. கையிலே என்னடா பெரிய மூட்டை. அதை அவழுடா,'' என்றான் படு அட்டகாசமாக.

அவனைக் கண்டு உள்ளுக்குள் நடுங்கிப் போனாலும் எப்படியும் கன்னூன் தேவி தனக்குத் துணை இருப்பாள் என்ற தைரியத்தில், ''மூட்டையில் ஒன்றுமில்லை. சும்மா பட்டுத் துணிதான்,'' என்றான்.

வெடுக்கென்று அவன் கையிலிருந்த மூட்டையைப் பற்றி பிரித்தவன் கண்களில் ஒரே பேராசை. ''ஓ! எத்தனை உயர்ரகத் துணிகள்!'' என்று மனதுக்குள் வியந்தவன், எப்படியாவது இவைகளை தன்னுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணியவன், ''டேய்! அதோ அந்த மரத்தடியில் படுத்துக்கிடக்குது பார் என் குதிரை. அதை நீ எடுத்துக் கொள். அதற்கு பதிலாக இந்த பட்டுத்துணி என்னுடையது,'' என்று சொல்லிக் கொண்டே, அந்த துணிகளை பறித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தான்.

''உன் இறந்து போன அந்த குதிரை எனக்கு வேண்டாம். என் துணிகள்தான் எனக்கு வேண்டும்,'' என்று இவன் அடம்பிடித்தான்.

''மடையா உளறாதே... அந்தக் குதிரை இறந்துவிட்டது என்று யார் சொன்னது. பாவம் வெயிலில் வெகுதூரம் வந்த களைப்பு. அதனால்தான் இப்படி படுத்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது,'' என்று ஒரே போடாக போட்டுவிட்டு துணிகளுடன் மாயமாய் மறைந்துவிட்டான்.

''கன்னூன் தேவதையே! என் அதிர்ஷ்டத்தைப் பார்த்தாயா?'' என்று மனமுடைந்து சொன்னவன், மிகவும் சோர்வாக கண்மூடிப்படுத்திருக்கும் அக்குதிரையின் அருகில் போய் அமர்ந்து அதனை மிக மெதுவாகத் தடவிக் கொடுத்து, ''இதற்கு உயிர் பிச்சை கொடு,'' என்று கண்மூடி நெஞ்சாரப் பிரார்த்தித்தான்.

என்னவொரு ஆச்சர்யம்... அவன் பிரார்த்தனை பலித்துவிட்டது. மெதுவாக கண்களைத் திறந்த அக்குதிரை அவன் முகத்தோடு முகம் வைத்து, அவனை முகர்ந்து, தன் நாவினால் அவனை நக்கிக் கொடுத்து, அவன் மடியில் தலைவைத்து சற்று இளைப்பாறி, ''ஓகே பாஸ்! இப்போது எனக்கு உடல் நன்றாகத் தேறிவிட்டது. வா... புறப்படலாம்,'' என்பதைப் போல் சட்டென்று எழுந்து கனைத்தது.

அவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அதன் கடிவாளத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு மேற்கு நோக்கி நடந்தான். வெகு நேரப் பயணத்திற்குப் பின் ஒரு பெரிய நகரத்தை அடைந்தனர். அங்கே இருந்த ஒரு கோட்டைக்குள் நுழைந்தவன், அங்குள்ள சிப்பந்தி ஒருவனை அணுகி, ''தயை செய்து என் குதிரைக்கு கொஞ்சம் ஆகாரம் கொடுக்க முடியுமா?'' என்றான்.

அக்குதிரையைக் கண்ட சிப்பந்திகளுக்கு ஒரே ஆச்சர்யம். இதைப் போன்ற இத்தனை அழகான, கம்பீரமான உயர்ரக குதிரையை அவர்கள் இதுவரை பார்த்ததே இல்லை.

'எப்படியும் தன் எஜமானரிடம் சொல்லி, என்ன விலையானாலும் சரி, இக்குதிரையை வாங்கிவிட வேண்டும்' என்று தீர்மானித்தவன், மிகவும் சமத்காரமாக அவனிடம் குழைந்தான்.

''வாருங்கள்... வாருங்கள். உங்கள் குதிரைக்கு இல்லாத ஆகாரமா?'' என்று சொல்லி, ஒரு பெரிய வாளி நிறைய அவித்த 'கொள்'ளைக் கொண்டு வந்து வைத்து, பக்கத்தில் நிறைய தண்ணீரையும் வைத்தான்.

மிக செல்லமாக அதனை தட்டிக் கொடுத்து, ''பாவம் மிகவும் களைப்பாக இருக்கிறது. முதலில் இதை சாப்பிடட்டும். இன்னும் கேரட்டும், ஓட்சும் சேர்ந்த கலவையை கொண்டு வருகிறேன்... ஆகாரத்திற்கு இங்கே பஞ்சமே இல்லை. நீங்களும் கை கால்களை கழுவிக் கொண்டு வாருங்கள். உங்களுக்கும் சூடாக ஆகாரம் எடுத்து வருகிறேன்,'' என்று மிகவும் பலமாக அவனை உபசரித்துவிட்டு, அவசர அவசரமாக உள்ளே ஓடிப்போய் தன் எஜமானரிடம், இந்த ராஜ கம்பீரமான அபூர்வ குதிரையை பற்றி சொல்லி, ''எப்படியும் இந்த குதிரையை வாங்கிவிட வேண்டும்,'' என்று வலியுறுத்தினான்.

''அப்பாடி!'' அந்த குதிரையைப் பார்த்த எஜமானர் அப்படியே அதன் கம்பீரத்தைக் கண்டு வியந்தார். 'இதைப்போன்ற ஒரு குதிரையை இந்த தேசத்தில் நான் பார்த்ததே இல்லை. எப்படியும் இதனை வாங்கிவிட வேண்டும்' என்று கணக்குப் போட்டவர், ''நண்பரே! நான் 500 பொற்காசுகள் தருகிறேன். இக்குதிரையை எனக்கு கொடுத்து விடுகிறீர்களா?'' என்றான்.

''என்னது? 500 பொற்காசுகளா?'' இந்நிமிடம் வரை ஐந்து பொற்காசுகளைக் கூட கண்ணால் காணாதவனுக்கு இது எப்பேர்ப்பட்ட அதிர்ச்சி.

அப்படியே பிரமித்து நின்றான் பதில் கூட சொல்லாமல். ''சரி போகட்டும். ஆயிரம் பொற்காசுகள் தரட்டுமா?'' இதற்கும் பதில் இல்லை.

''சரி போகட்டும், மேலும் ஆயிரம் பொற்காசுகள் கூட்டித் தருகிறேன். இப்போது உங்களுக்குத் திருப்திதானே?'' என்றான்.

பிரமிப்பின் உச்சிக்கே போய் பிரமை தட்டிப் போய் நிற்கும் அவனால் எப்படி பதில் பேச முடியும்?

''என்னது இரண்டாயிரம் பொற்காசுகளா?'' அப்படியே மூர்ச்சை போட்டு கீழே சரிந்தான். பதறிப் போன பணக்காரன், ''மகளே! சீக்கிரம் ஒரு பாத்திரம் நிறைய தண்ணீர் எடுத்து வா!'' என்று உத்தரவிட, பாத்திரம் நிறைய தண்ணீரை எடுத்துக் கொண்டு ஓடி வந்த அவரின் மகள், ''அப்பா! அப்பா! இவர் தானப்பா என்னை இன்று மதியம் காப்பாற்றியவர். இவர் மட்டும் தக்க சமயத்தில் எனக்கு உதவி இருக்காவிடில் என்னை உயிரோடு நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. குடிக்கக் கூட ஒரு பொட்டுத் தண்ணீர் இல்லாமல், பசியும் வலியும் வயிற்றைக் கிண்ட, நான் துடிதுடித்துக் கொண்டிருக்கையில், தெய்வமாய் ஓடிவந்து தனக்கென்று வைத்திருந்த ஆரஞ்சுப் பழங்களை மிகப் பரிவோடு எனக்குக் கொடுத்து எனக்கு உயிர் கொடுத்த நல்லவர் இவர்தானப்பா,'' என்றாள்.

உடனே பதறிப் போன அப்பணக்காரர், மூர்ச்சை தெளிந்து எழுந்து உட்கார்ந்திருந்தவரின் கரங்களைப் பற்றி, ''தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். உங்களின் அருமை தெரியாமல், மிகவும் கீழ்த்தரமாக உங்களிடம் குதிரைக்கு விலை பேசியதை நினைத்தால், எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது. நீங்கள் கோடியில் ஒருவர். உங்களைப் போன்ற பெரிய மனம் யாருக்கு வரும்? தயை செய்து என்னை மன்னித்து, என்னுடைய ஒரே மகளான இவளை மணந்து இக்கோட்டைக்கு அதிபதியாக வேண்டும்,'' என்று சொல்லி அவனின் கரங்களை பற்றிக் கொண்டு கண்ணீர் வடித்தார்.

அவரின் பேச்சைக் கேட்டதும், ''கன்னூன் தேவதையே!'' என்று அலறினான் அவன். நன்றியால் நனைந்த நெஞ்சத்துடன் அவரின் கால்களில் விழுந்து வணங்கினான்.

மாமனார் மெச்சிய மருமகனாக, மிகவும் திறம்பட கோட்டையை நிர்வகித்தான்.

அன்று, 'சின்னஞ்சிறு துரும்பு என்று எதையும் எண்ணி தூக்கி எறிந்து விடாதே. அதன் மதிப்பு போகப் போகத்தான் தெரியும்,' என்று கன்னூன் தேவதை கூறிய அறிவுரையை கடைப்பிடித்து, அந்நாட்டிலேயே யாவரும் புகழும்படி எல்லாவிதத்திலும் உயர்ந்து நின்றான்.

இவனை பார்க்கும் போதெல்லாம் அந்நாட்டு ஜனங்கள், ''அதோ போறார் பாரு ஒரு வைக்கோல் மில்லியனேயர்!'' என்று மிகவும் பயபக்தியுடன் கூறுவர்.

(— முற்றும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us