PUBLISHED ON : அக் 07, 2023

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், கரிவலம் வந்தநல்லுார் ஊராட்சி ஒன்றிய பள்ளியில், 1976ல், 5ம் வகுப்பு படித்தபோது, குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியால், காலை, மாலை மட்டுமே உணவு கிடைக்கும். மதிய உணவுக்கு வழி இருக்காது.
வீட்டில் சேட்டை செய்யும் போது, 'பிறருக்கு உதவியாக இருக்கணும்; தொந்தரவு தரக் கூடாது...' என அறிவுரை சொல்வார் அம்மா. அது மனதில் பதிந்திருந்தது.
ஒருநாள் மதிய உணவு இடைவேளையில் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது ரோந்து வந்த தலைமை ஆசிரியர் ராமசுப்பு என்னை அழைத்து மிகுந்த கனிவுடன், 'சாப்பிட்டாயா...' என கேட்டார். அம்மாவின் அறிவுரை நினைவுக்கு வர, 'சாப்பிட்டேன்...' என பொய் கூறினேன்.
உடன் இருந்த என் தங்கை உண்மையை சொல்லி விட்டாள். நிலைமையை புரிந்து, பழங்கள் வாங்கி சாப்பிட தந்தார். தொடர்ந்து, பார்க்கும் போதெல்லாம் அன்போடு விசாரித்து உதவினார். என் வயது, 58; இல்லத்தரசியாக இருக்கிறேன். குடும்பத்தில் முக்கிய நிகழ்வுகளுக்கு அந்த தலைமை ஆசிரியரை அழைத்து சிறப்பு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
ஒரு விஜயதசமி பண்டிகை அன்று என் மகனுக்கு கல்வி பயிற்சியை துவங்கி வைத்தார். எங்கள் புதுமனை புகுவிழாவில் சிறப்பு விருந்தினராக கவுரவப்படுத்தி ஆசி பெற்றோம்.
- பா.மீனாட்சி, தென்காசி.
