
நந்தனம் என்னும் ஊரில் பெருஞ் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவரிடம் விலை உயர்ந்த மாணிக்கம் இருந்தது. குமரியில் உள்ள தன் மகளுக்கு அந்த மாணிக்கத்தைப் பரிசாகத் தர நினைத்தார். மகளிடம் மாணிக்கத்தைப் பாதுகாப்பாக சேர்க்க வேண்டும். யாரிடம் கொடுத்து அனுப்புவது என்று சிந்தித்தார்.
'தன் தம்பி மகன் மதன் நினைவு அவருக்கு வந்தது. அறிவும், வீரமும் நிறைந்த அவன் இதைப் பொறுப்பாகச் செய்வான்' என்று நினைத்தார்.
மதனை அழைத்த அவர், அவனிடம் மாணிக்கத்தைத் தந்தார்.
''இதை என் மகளிடம் சேர்க்க வேண்டும். வழியில் திருடர்கள் இருப்பர். கவனமாக எடுத்துச் செல்ல வேண்டும்,'' என்று எச்சரித்தார்.
''பெரியப்பா! நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்த மாணிக்கத்தை உங்கள் மகளிடம் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு,'' என்றான் மதன். அங்கிருந்து புறப்பட்டான்.
காட்டு வழியில் அவனை மூன்று திருடர்கள் வழி மறித்தனர்.
''உன்னிடம் மாணிக்கம் இருப்பது எங்களுக்குத் தெரியும். உயிர் பிழைக்க நினைத்தால் அதை எங்களிடம் தந்துவிடு,'' என்று அவர்கள் மிரட்டினர்.
மூவரையும் பார்த்தான் அவன். அவர்களுடன் சண்டையிட்டு வெல்ல முடியாது என்பது அவனுக்குத் தெரிந்தது.
''திருடர்களே! நான் தனி ஆள். நீங்களோ மூன்று பேர். என்னிடம் நீங்கள் கொள்ளை அடிப்பது முறையாகாது. உங்களில் ஒருவ னிடம் மாணிக்கத்தைத் தருகிறேன். அவன் தூக்கில் தொங்கட்டும்,'' என்றான் அவன்.
''உன்னிடம் மாணிக்கம் பெறுபவன் ஏன் தூக்கில் தொங்க வேண்டும்?'' என்று கேட்டான் அவர்களில் ஒருவன்.
''மாணிக்கத்தை என்னிடம் தந்தவர் அரசருக்கு நண்பர். இதைக் கொள்ளை அடித்தவன் யார் என்பது அரசருக்குத் தெரிந்ததும், அவனை அவர் தூக்கில் போடுவார்,'' என்றான் மதன்.
''நீ உயிருடன் இருந்தால்தானே அரசருக்குத் தெரியப் போகிறது,'' என்றான் இன்னொருவன்.
உடனே, பையிலிருந்து மாணிக்கத்தை எடுத்த மதன், அவர்களில் ஒருவனிடம் தந்தான்.
''நீ கோடீஸ்வரனாகி விட்டாய். விலை உயர்ந்த இந்த மாணிக்கம் உனக்குத்தான் எடுத்துக் கொண்டு ஓடு,'' என்று குரல் கொடுத்தான்.
அதை வாங்கிய திருடன், ''மாணிக்கம் எனக்குத்தான். உயிர் போனாலும் யாருக்கும் தர மாட்டேன்,'' என்று அங்கிருந்து ஓடத் தொடங்கினான்.
இரண்டு திருடர்களும் அவனைத் துரத்திச் சென்று பிடித்தனர்.
''எங்களையே ஏமாற்றத் துணிந்தாயா?'' என்று கோபத்துடன் அவனை வெட்டிக் கொன்றனர்.
அவனிடமிருந்த மாணிக் கத்தை எடுத்தான் ஒரு திருடன். இன்னொருவன் அவனிடம் இருந்து பிடுங்கினான்.
''மாணிக்கம் எனக்குத் தான்,'' என்று இருவரும் கடுமையாக சண்டை போட்டனர்.
அவர்களில் ஒருவன் கொல்லப்பட்டான்.
இன்னொரு திருடனிடம் மாணிக்கம் இருந்தது.
அவனிடம் சென்ற மதன், ''மாணிக்கத்தை என்னிடம் தந்துவிடு. இல்லையேல், என்னுடன் சண்டை போடு,'' என்றான்.
அடி எடுத்து வைக்கவும் முடியாமல், தளர்ச்சியாக இருந்தான் அவன். மதனிடம் தன்னால் சண்டை போட முடியாது என்பதை அறிந்த அவன், மாணிக்கத்தை மதனிடம் கொடுத்தான்.
மதன் மாணிக்கத்தை பாதுகாப்பாக எடுத்து கொண்டு, குமரி வந்து சேர்ந்து அவரின் மகளிடம் ஒப்படைத்தான்.
***