PUBLISHED ON : நவ 04, 2023

மகாராஷ்டிரா மாநிலம், வார்தா அருகே புல்காவ் ஆர்.கே.மேல்நிலைப் பள்ளியில், 1975ல், 11ம் வகுப்பு படித்த போது, உயிரியல் ஆசிரியராக இருந்தார், என்.பி.அவதன்கர். பாடங்கள் மனதில் பதியும் வண்ணம் சிறப்பாக நடத்துவார். அன்றாடம் நடத்தையில் ஒழுக்கம் பேணியதுடன், அனைவரும் பின்பற்ற முறைப்படி வழிகாட்டினார்.
தேர்வு நடத்துவதிலும், வித்தியாசமான நடைமுறைகளை வகுத்து பயிற்சி தந்தார். வாழ்வில் உயர்வதற்கு பின்பற்ற வேண்டிய நற்பண்புகளையும், நெறிமுறைகளையும் அவரிடம் கற்றேன்.
பள்ளிப் படிப்பை சிறப்பாக முடித்து, கல்லுாரியில், இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்றேன். பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். அதை சிறப்பாக நிறைவேற்ற அந்த ஆசிரியரிடம் பெற்ற பயிற்சி பெரிதும் உதவியது.
தற்போது என் வயது, 63; சென்னை, மயிலாப்பூர், பி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியராக பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றேன். என் ஆசானாக திகழும் அந்த ஆசிரியருக்கு, 81 வயதாகிறது; இன்றும் அவருடன் தொடர்பை பலப்படுத்தி, நல்லாசி பெற்று வருகிறேன். நற்பண்புகளுடன் மேன்மையடைய வழிகாட்டியாக விளங்குபவரை நன்றியுடன் போற்றுகிறேன்.
- டி.பத்மநாபன், சென்னை.
தொடர்புக்கு: 94448 49674
