PUBLISHED ON : மார் 03, 2017

பள்ளி நாட்களில், எல்லா குறும்புகளையும் விரும்பி செய்வேன். டீச்சரின் கொண்டையில் பந்தை அடிப்பது; 'பாத்ரூம்' கதவை தட்டிவிட்டு ஓடுவது; விளக்கை அணைப்பது உட்பட செய்யாத சேட்டை கிடையாது.
என்னை திருத்த முயன்ற எல்லா ஆசிரியைகளும், தோல்வியை தான் தழுவினர். குறிப்பாக, லக் ஷ்மி டீச்சர். ஆனால், நான் படிப்பில் சோடை போனதில்லை; நல்ல மதிப்பெண் வாங்கி விடுவேன்.
படித்து முடித்து, வேலையில் சேர்ந்து, மணம் முடித்து, குழந்தையும் பிறந்தாகி விட்டது. திடீரென்று ஒருநாள், லக் ஷ்மி டீச்சரை சந்திக்க நேர்ந்தது. வீட்டுக்கு வர சொல்லி அழைத்தேன்; மறுநாளே வந்தார்.
மனைவியிடமும், மகனிடமும், நான் செய்த குறும்புகளை சொல்லி கலாய்ப்பார் என நினைத்தேன். ஆனால், அவரோ, என்னை பற்றிய நல்ல விஷயங்களை மட்டுமே சொல்லிவிட்டு கிளம்பினார்.
மறுநாள், இது பற்றி அவரிடம் கேட்டேன். அதற்கு, 'நீ இப்போது, குடும்பத் தலைவன்; பொறுப்பான கணவன்; மதிப்பான தந்தை. இப்போது, உன் குறும்புத் தனங்களை சொன்னால், உன் மகனுக்கு அது தான் மனதில் நிற்கும். அவன் ஏதாவது தவறு செய்தால், உன்னால் கண்டிக்க முடியாது. கண்டித்தால் கூட, 'நீயும் இப்படியெல்லாம் செய்தாயே' என கேட்பான். அதனால் தான் சொல்லவில்லை. நல்ல தந்தையாக இருக்க வாழ்த்துக்கள்!' என்று சொல்லி முடித்த போது, என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் செய்த தவறு, முதன் முறையாக புரிந்தது.
நடைபாதை என்று கூட பாராமல், சட்டென அவரின் கால்களில் விழுந்து வணங்கினேன்.
- ர.சுதர்சன், சென்னை.
