PUBLISHED ON : ஜூன் 13, 2020

மலர்விழிக்கு, படிப்பது என்றால் வேப்பங்காய் தின்பது மாதிரி கசக்கும். பள்ளி கிளம்பும் போது தான் வயிறு வலிக்கும்; காய்ச்சல் வருவது போல் இருக்கும். 'இன்னிக்கு ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக்கிறேனே...' என்று தினமும் கெஞ்சுவாள்.
கண்டிப்பு நிறைந்தவர் அம்மா. எப்படி நடித்து கொஞ்சினாலும் விடுப்பு எடுக்க அனுமதிக்க மாட்டார்.
அன்று காலை, வழக்கம் போல முகத்தை துாக்கியபடி பள்ளி கிளம்பினாள் மலர்.
வழியில், தோழி ரேவதியை கண்டாள். உடனே, 'இரண்டு நாளா பள்ளி பக்கமே காணோமே... உடம்பு சரியில்லையா... ' என்று விசாரித்தாள்.
'நன்றாக இருக்கிறேன்; வேண்டுமென்று தான் பள்ளிக்கு மட்டம் போட்டேன்...'
'அது எப்படி முடியும். உன் குடும்பத்தில் கண்டிக்க மாட்டாங்களா...'
'பள்ளிக்கு போகவில்லை என, அவங்களுக்கு தெரிந்தால் தானே...' என்று பெருமையடித்தாள்.
அசந்துபோன மலர், 'அப்போ பள்ளிகூடத்துக்கு போகாம என்ன செய்ற...' என்றாள்.
'தினமும் காலையில் பள்ளிக்கு போற மாதிரி விட்டிலிருந்து கிளம்புவேன்; அப்படியே சினிமா தியேட்டருக்கு போயிடுவேன். அப்புறம் ஆத்தங்கரையில் வந்து உக்காருவேன். அங்கே வருபவர்களை வேடிக்கை பார்ப்பேன். மாந்தோப்புல மாங்காய் பறித்து சாப்பிடுவேன். பள்ளி விடும் நேரத்தில், சரியாக வீட்டுக்கு சென்று விடுவேன்...' என்றாள் ரேவதி.
'உங்க அப்பா, அம்மாவுக்கு இது தெரியாதா...'
விழுந்து விழுந்து சிரித்த ரேவதி, 'ஒரு வாரமா இப்படித்தான் செய்றேன்; யாரும் கண்டு பிடிக்கல...' என்றாள்.
மனதில் தீய எண்ணம் சூழ, 'நானும் உன்னோட வரட்டுமா...' என்றாள் மலர்.
'ஓ... வரலாம்... ஆனா, இந்த விஷயம், நம்ம இரண்டு பேருக்கும் மட்டும் தான் தெரிந்திருக்க வேண்டும்... மிகவும் ரகசியம்...' என்றாள்.
ஒப்புக் கொண்டாள் மலர். இருவரும் ஊர் சுற்றினர்.
மறுநாள் -
பிடிவாதம், அடம் இன்றி புறப்பட்டாள் மலர். இதைக்கண்ட அம்மாவுக்கு ஆச்சரியம். மகளுக்கு நல்ல புத்தி வந்து விட்டதாக எண்ணி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சி இரண்டு நாள் கூட நீடிக்கவில்லை. தொலைபேசியில் அழைத்தார் வகுப்பு ஆசிரியை. மலர்விழி பள்ளிக்கு வராதது குறித்து விசாரித்தார்.
கவலையால் குழம்பி, தவிப்புடன் பலவாறாக அலசி ஒரு முடிவுக்கு வந்தார் அம்மா.
அடுத்தநாள் காலை, துள்ளி குதித்து ஓடிய மலர்விழியை பின் தொடர்ந்து கண்காணித்தார். சினிமா தியேட்டர், மாந்தோப்பு என, ரேவதியுடன் சுற்றித் திரிவதைக் கண்டார்.
எதையும் அறியாதவர் போல அமைதியாக திரும்பி வீட்டில் காத்திருந்தார் அம்மா.
வழக்கம் போல் மாலை வீடு திரும்பினாள் மலர். எதுவும் பேசவில்லை அம்மா. இரவு படுக்கைக்கு செல்லும் முன், 'நாளை முதல் பள்ளி போக வேண்டாம்; வீட்டில் பணிகளை கவனித்தால் போதும்...' என்றார்.
மகிழ்ச்சியில், 'நல்ல அம்மா...' என்று கட்டிக் கொண்டாள் மலர்.
அதிகாலை குளிர் வாட்டியது. போர்வைக்குள் சுருண்டு சுகமாக துாங்கினாள் மலர். அம்மாவின் குரல் உசுப்பியது.
'பள்ளிக்கூடத்துக்கு தான் போக வேண்டாமே; ஏன், அதிகாலையிலே எழுப்புறீங்க...' என சிணுங்கினாள்.
'எழுந்திரு... துாங்கினது போதும்...' என்று கடுகடுத்தார் அம்மா.
எரிச்சலுடன் எழுந்தவள், கடிகாரத்தை பார்த்தாள்; அதிகாலை, 4:00 மணி ஆகியிருந்தது. எச்சில் பாத்திரங்களைக் காட்டி, 'வீட்டில் வேலை செய்த பெண்ணை நிறுத்திவிட்டேன். இனி வரமாட்டாள். நீ தான் எல்லா வேலைகளையும் செய்யணும்...' என்று கடுமையாக பணித்தார்.
உள்ளங்கை எரிய பாத்திரங்களை தேய்த்தாள் மலர். அவற்றை துடைத்து முறையாக அடுக்கி வைக்க உத்தரவிட்டார் அம்மா. மனம் கனக்க செய்து முடித்தாள். டம்ளரில் காப்பியை கொடுத்தார். குடித்து முடித்து ஓய்வெடுக்க போனாள் மலர். பின்னால் வந்த அம்மா, 'படுக்கையை தட்டி, போர்வையை மடித்து வை; வீடு முழுவதும் பெருக்கி, கிருமி நாசினி போட்டு சுத்தமாக துடை...' என்று கட்டளையிட்டார்.
'என்னம்மா... இப்படி செய்றீங்களே... எனக்கு ஓய்வு வேண்டாமா...' என்று அழுதாள் மலர்.
'உனக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவது என் கடமை. பள்ளிக்கு போக பிடிக்கவில்லை என்பதால், வீட்டு வேலைகள் செய்ய பயிற்சி அளிக்கிறேன்... முறையாக கற்றுக் கொள்...'
'இதை கற்று என்ன செய்வதாம்...'
'ஒன்றை நினைவில் கொள்; பள்ளிக்குப் போகாமல் ஊர் சுற்றி பொழுதை போக்குவது அற்ப சந்தோஷம் தரும். அது நிலையானதல்ல... என்னை ஏமாற்றுவதாக நினைத்து, உன்னையே ஏமாற்றிக் கொண்டாய்... இப்போதாவது நேரத்தை முறையாக செலவிட பழகு...' என்று அறிவுரைத்தார் அம்மா.
'என்னை மன்னித்து விடுங்க; இனி, ஒழுங்காக பள்ளி சென்று படிக்கிறேன்...' என்று கதறிய மலரை, அன்புடன் அணைத்து கொண்டார் அம்மா.
ஆண்டுகள் ஓடின.
சிறந்த மருத்துவராக புகழ் பெற்றாள் மலர்விழி. கொரோனா நோய் சிகிச்சையில் தீவிரமாக செயல்பட்டு முன்னிலை வகித்து பாராட்டு பெற்றாள்.
குழந்தைகளே... சிறப்பான எதிர்காலத்தை அமைக்க கல்வியும், ஒழுக்கமும் தான் உதவும். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை நினைவில் பதியுங்கள்.
உமா ஸ்ரீதரன்
