தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/திமிங்கிலம் வரட்டும்!

திமிங்கிலம் வரட்டும்!

திமிங்கிலம் வரட்டும்!


PUBLISHED ON : நவ 20, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெளியூரிலிருந்து புறப்பட்ட ஒரு சரக்குக் கப்பல், இந்தியாவை நோக்கி, பனிப்பாறைகள் சிலவற்றைக் கிழித்தவண்ணம் கம்பீரமாகப் பயணத்தைத் தொடர்ந்தது. கப்பலில் மாலுமிகள், கேப்டன் மற்றும் தேவைப்படும் ஆட்களைத் தவிர, பயணிகள் யாரும் இல்லை. பலவகைப்பட்ட சரக்குகள் மட்டும் கப்பலுக்குள் இருந்தன.

கப்பல் புறப்பட்ட ஐந்தாவது நாளில் பெரும்புயல் வீசத் தொடங்கியது. மாலுமி கப்பலை மிகவும் மெதுவாக, இயக்கியபடியே இருந்தான். வேகமாகச் சென்று கொண்டிருந்த கப்பல் மெதுவாக செல்வதை அறிந்த கேப்டனுக்கு கோபம் வந்து விட்டது.

கேப்டனைப் பொறுத்தவரை அவன் ஒரு முன்கோபி. அது மட்டுமன்றி, தலைக்கனமும் அவனுக்கு உண்டு. 'எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்' என்ற நினைப்பு வேறு.

கப்பல் ஊர்ந்து கொண்டே சென்றதைக் கண்ட கேப்டன், மாலுமி மீது ஆத்திரம் கொண்டவனாய் தனது அறையை விட்டு எழுந்தான். மாலுமி இருந்த இடத்தை நோக்கி நடந்தான்.

''ஏ! மிஸ்டர்! உனக்குக் கப்பல் ஓட்டத் தெரியுமா? கப்பலை ஓட்டுகிறாயா அல்லது நிறுத்தி வைத்து வேடிக்கை காட்டுகிறாயா? இந்தக் கப்பலில் எனது வேலைதான் பிரதானமானது. மற்றவர்களின் வேலையெல்லாம் சில்லரை ஏற்பாடுகள்தான்...'' என்று வார்த்தைகளைப் பலவாறாகப் பொரிந்து தள்ளினார்.

மாலுமி, பதட்டம் கொள்ளாமல், அதேசமயம் தன் கவுரவத்தையும் விட்டுக் கொடுக்காமல், கேப்டனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''மிஸ்டர் கேப்டன், உங்க வேலை இந்தக் கப்பலுக்குக் கேப்டனாக இருக்கிறது மட்டும்தான். உங்களால் கப்பலை இயக்க முடியுமா என்ன? எல்லாரையும் அக்கரை கொண்டு சேர்ப்பது நான்தானே? என்னுடைய வேலை எப்படிச் சில்லரை வேலையாகும்,'' என்று கேட்டார்.

இதனால், இருவருக்கும் வாக்கு வாதம் வளர்ந்தது. இறுதியாக கேப்டனிடம் கப்பலை இயக்க வேண்டிய பொறுப்பை கொடுத்து விட்டு, மாலுமி தன் அறையை நோக்கிச் சென்றுவிட்டார்.

'என்னால், முடியாத வேலை உண்டோ?' என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்ட கேப்டன், கப்பலை இயக்க ஆரம்பித்தான். சிறிது நேரம் கடந்திருக்கும். கேப்டன் இயக்கக் கருவிகளை அப்படியும், இப்படியும் திருப்பிப் பார்த்தான். கப்பல் சென்ற திசையிலேயே பயணம் செய்து கொண்டிருந்தது.

தான் கப்பலை மிக சாமர்த்தியமாக இயக்குவதாக கேப்டன் திருப்தி அடைந்தான்.

ஒருமணி நேரத்துக்கு மேல் ஆகியிருக்கும். கப்பலை வேறு திசையில் திருப்பலாம் என்றெண்ணி கருவிகளை இயக்கினான் கேப்டன். கப்பல் திசை மாறவில்லை. முன்பு நோக்கிய திசையையே அது நோக்கியது.

தொலை தூரத்தில் கப்பலை விடப் பெரிய திமிங்கிலம் ஒன்று தென்பட்டது. திமிங்கிலம் கப்பலை நோக்கி வந்து கொண்டிருந்தது. கேப்டனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நேராக மாலுமி இருக்கும் அறையை நோக்கி ஓடினார். மாலுமி நன்கு தூங்கிக் கொண்டிருந்தார். கேப்டன் அறைக்கதவைத் தட்டிய பின்னர் தான், மாலுமி எழுந்து கதவைத் திறந்தார்.

கேப்டனைப் பார்த்ததும் மாலுமி, ''கேப்டன் அவர்களே! கப்பல் திசை மாற மறுக்கிறதோ?'' என்று ஏளனமாகக் கேட்டார்.

''ஆமாம் மாலுமி. நீண்ட நேரமாகக் கப்பல் ஒரே திசையில்தான் சென்று கொண்டிருக்கிறது. திசையை மாற்ற முடியவில்லை. இதற்கு தாங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்,'' என்று கேட்டார்.

கேப்டனின் முகத்தில் ஒருவித கலக்கம் தென்பட்டது.

''மிஸ்டர் கேப்டன்! நீங்கள் சொல்கிற மாதிரி கப்பல் ஒரே திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கவில்லை. அது மணலில் சிக்கி ஒரு மணி நேரமாக அப்படியே நின்று கொண்டிருக்கிறது. இதைக்கூட உங்களது மூளையால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாம் அனைவரும் இப்போது ஆபத்தில் இருக்கிறோம். நல்ல திமிங்கிலம் வந்தால் தப்பிக்கலாம்,'' என்றார் மாலுமி.

''என்ன திமிங்கிலமா? அது மிகவும் ஆபத்து ஆயிற்றே,'' என்ற பதட்டத்துடன் கூறினார் கேப்டன்.

''பொறுத்திருங்கள். பூலோக வாழ்வா? தேவலோக சஞ்சாரமா? என்பது சிறிது நேரத்தில் தெரிந்து விடும்,'' என்று மிகவும் அமைதியாக, பதட்டம் ஏதுமின்றிக் கூறினார் மாலுமி.

சிறிது நேரம் இருவரும் மவுனமாக இருந்தனர்.

தொலை தூரத்தில் தெரிந்த திமிங்கிலம் கப்பலை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. கப்பலை நெருங்கியதும் அது, தன் பலத்தை ஒன்று திரட்டி, கப்பலை ஒரு தட்டுத் தட்டிவிட்டது. திமிங்கிலம் மோதியதால், மணலில் சிக்கியிருந்த கப்பல் மேலே எழும்பி நகர துவங்கிவிட்டது. கப்பலுக்குள் இருந்தவர்களுக்கு, 'டமால்' என்ற ஒரு சத்தம் மட்டுமே கேட்டது. கப்பல் பழைய நிலைக்கு வந்து விட்டதாக மாலுமி உணர்ந்து கொண்டார்.

இப்போது கேப்டனைப் பார்த்து, ''மிஸ்டர் கேப்டன், என்னுடைய வேலை ஒசத்தியா? உங்கள் வேலை ஒசத்தியா அல்லது அந்தத் திமிங்கிலத்தின் வேலை ஒசத்தியா?'' என்று கேட்டார் மாலுமி.

''அவரவர் வேலை அவரவருக்கு ஒசத்தி,'' என்றார் கேப்டன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us