PUBLISHED ON : பிப் 15, 2013

''ரமேஷ்! உனக்கு நாங்கள் உதவுறோம். அதனால் நீ உண்மையைச் சொல்லு. அந்த பைக் வாங்க உனக்கு ஏது பணம்?'' என்று இன்ஸ்பெக்டர் முன்னால், ரமேஷுக்கு தைரிய மூட்டிக் கேட்டான் கார்த்திக்.
''நான் பணத்தைத் திருடலே... சத்தியம். நான் எழுதிக் கொடுத்துள்ள வாக்குமூலம் உண்மை. ஆனால், எனக்குப் பணம் எப்படிக் கிடைத்தது என்பதை நான் சொல்லமாட்டேன்,'' என்றான் ரமேஷ்.
கார்த்திக்கை இன்ஸ்பெக்டர் தனியாக அழைத்து, ''பையன்தான் குற்றவாளி. சந்தேகமே இல்லை. பைக் மேலே ஆசை. ஆனா அதை வாங்கப் பணமில்லே. அதனாலே முகமூடி அணிந்து ஓட்டல்காரரைத் தாக்கிப் பணத்தை கொள்ளையடிச்சிருக்கான்,'' என்றார்.
கார்த்திக் அதை ஏற்கவில்லை.
''நான் அப்படி நினைக்கலே சார். அந்தப் பையன் ஸ்டேட்மெண்டிலே கையெழுத்துப் போட்டபோது எனக்கு ஒரு தடயம் கிடைத்தது. அதனால், அந்த ஓட்டல்காரரை மறுபடி சந்திக்க விரும்பறேன். அதன் பிறகு பையனைப் பத்தி முடிவெடுக்கலாம்,'' என்றான். அதிகாரியும் சம்மதித்தார்.
ரெஸ்டாரெண்ட் முதலாளியிடம் கார்த்திக், ''நீங்கள் கதவைத் திறக்கும் போது அந்தப் பையன் உங்களை உள்ளே தள்ளி, தன் இடது கையிலிருந்த எதனாலோ உங்களைத் தாக்கினான் இல்லையா!'' என்று அந்தப் பையனின் செயலை நடித்துக் காட்டியபடி கேட்டான்.
''ஆமா சார் அதேதான். மின்னலைப் போலத் தாக்கினான்,'' என்று தன் இடது பக்க நெற்றியிலிருந்த பிளாஸ்திரியைத் தொட்டுத் தடவிக் கொண்டார் ரெஸ்டாரெண்ட் முதலாளி.
''இடது கை இல்லையா? அப்படின்னா அந்தப் பையன் ரமேஷ் குற்றவாளியல்ல. அவனுக்கு இடது கைப்பழக்கமில்லே. எல்லாரையும் போல வலது கைப் பழக்கமுடையவன். அதனால் குற்றவாளி வேறு. அதுவும் தேட வேண்டிய அவசியமில்லே. இங்கேயேதான் இருக்கான்!'' என்றான் கார்த்கிக்.
''நீங்க என்ன சொல்றீங்க?'' எனப் பதறினார் கடைக்காரர்.
''நான் நினைத்தது சரிதான்! இந்த பிளாஸ்திரி! இடது கைப்பழக்க முடையவன் உண்டாக்கிய காயம், தவறான இடத்தில் உள்ளது!'' என்று கூறி அவரது நெற்றியின் இடது பக்கத்திலிருந்த பிளாஸ்திரியைப் பிய்த்து இழுத்தபடியே கூறினான் கார்த்திக்.
''ரமேஷ் வலது கைப் பழக்கமுடையவன். அவன் தாக்கி இருந்தால், உங்களுக்கு வலது பக்கத்தில்தான் காயம் பட்டிருக்க வேண்டும்! ஆகவே, இது ஜோடித்த குற்றச்சாட்டு. உண்மையைக் கூறுங்கள் மிஸ்டர்!'' கடைக்காரர், தான் வசமாகச் சிக்கியதை உணர்ந்து உண்மையைக் கக்கினார்.
''உண்மைதான். எனக்கு கடன் அதிகமாகி விட்டது. கடன்காரர்களுக்கு பதில் கூற ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம். ஆகவே, கொள்ளையடிக்கப்பட்டதாக செய்தியைப் பரப்பினால், சில காலம் கடன்காரர் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று... திருடு போனதாகக் கூறிய பணத்தை, டிராயருக்கு அடியில் கவரில் ஸெல்லோ டேப் கொண்டு இணைத்து வைத்திருக்கிறேன்!'' என்றார்.
அருண், டிராயரின் அடியிலிருந்த கவரை எடுத்து ரூபாய் நோட்டுக்களை வெளியில் எடுத்தான். அதிலும் ஒரு பத்து ரூபாய்த் தாளில், ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டப் பட்டிருந்தது. அதை அருண்,கார்த்திக்கிடம் காட்டியதும், ''இது தற்செயலாக ஏற்பட்ட ஒற்றுமை. இனி, நாம் ரமேஷûக்கு பணம் கிடைத்த விதத்தை அறிய வேண்டும்,'' என்றான் சி.ஐ.டி., கார்த்திக்.
காலேஜ் வாசலில் ரமேஷை மடக்கினர்.
''என் பெற்றோர் முன்னிலையில், எனக்குப் பணம் கிடைத்த விஷயத்தை வெளியிட நான் விரும்பவில்லை. ஏனென்றால், அதிகாலையில் தினமும் நியூஸ் பேப்பர் விநியோகம் செய்தும், மாலை வேளைகளில் சில பையன்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தும், நான் மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிப்பதைத் தடுத்து விடுவர். அவ்வளவு பணம் நான் கையாளக் கூடாதென்று!''
''எப்படியும் அவர்கள் ஒருநாள் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும் ரமேஷ்!'' என்றான் கார்த்திக்.
ரமேஷின் பெற்றோர் உண்மையை அறிந்த போது, நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். கண்களில் நீர்திரண்டு, குரல் கரகரக்க அவன் அப்பா கூறினார்.
''ரமேஷ் நீ சின்னக் குழந்தை இல்ல... பெரியவனாகி விட்டாய் என்பதை நிரூபித்து விட்டாய். உன் தேவையை, உழைத்து சம்பாதித்து சேமித்து, வாங்கியதை நினைத்து, நான் ரொம்பப் பெருமைப்படுகிறேன்,'' என்று அவனை அணைத்துக் கொண்டார்.
''கேஸ் நல்லபடியாக முடிந்தது...'' என்று கார்த்திக்கும், அருணும் விடைபெற்றனர்.
முற்றும்.
