தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வைரத்தை காணோம்!

வைரத்தை காணோம்!

வைரத்தை காணோம்!


PUBLISHED ON : ஜன 23, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 23, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மங்களபுரி செல்வம் கொழிக்கும் நாடு. பல்கலையும், பல வளமும் பொருந்திய மங்களபுரியின் மன்னர் மன்மத வர்மர், குடிமக்களின் இதயத்திலே இடம் கொண்டவர். மக்களின் மகிழ்ச்சியே தமது வாழ்வாகக் கருதுபவர்.

மங்களபுரி பிரஜைகளில் ஒருவர் ரத்தின சிம்மர். அவர் ஒரு வைர வியாபாரி. அறுபது வயதான அவர் சுற்றாத தேசமில்லை. யாருடனும் அன்போடு பழகும் குணம். சாந்தம் தவழும் அவர் முகத்திலே சதா சிரிப்புதான் மலர்ந்திருக்கும். தம்முடைய சிறிய வீட்டில் அமைதியாக வாழ்க்கை நடத்தி வந்தார்.

மதியூகிகள் என்று பலராலும் பாராட்டப்பட்ட கண்ணன், மாதவன் என்ற இரு பையன்கள் அதே ஊரில் வசித்து வந்தனர். களையான முகம்; கண்களிலே ஒரு கவர்ச்சி. சதா துருதுருவென்றிருக்கும் இவ்விருவரிடமும் வைர வியாபாரி ரத்தின சிம்மருக்கு அளவு கடந்த அன்பு. கிழவர் ரத்தின சிம்மருக்குக் குழந்தைகளோ, குடும்பமோ கிடையாது. ஆகவே, கண்ணனும், மாதவனும் அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்து அளவளாவுவர். கிழவர் தம் வியாபாரத்துக்காகப் பல நாடுகளைச் சுற்றியபோது அவர் கண்ட, கேட்ட அதிசயங்களையெல்லாம் கதை கதையாகச் சொல்வார்.

ஒருநாள் இப்படிக் கண்ணனும், மாதவனும் கிழவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, ''உங்களுக்கு இப்போது நான் ஒரு அதிசயமான பொருளைக் காண்பிக்கப் போகிறேன்,'' என்று சொல்லி மாடிக்குப் போனார்.

ஆவலோடு உட்கார்ந்திருந்த கண்ணன், மாதவன் முன்னால், சிறிது நேரத்தில் வேலைப் பாடமைந்த ஒரு பேழையோடு வந்தார். அதைத் திறந்ததும் அதனுள்ளிருந்து வெளிப்பட்ட ஒளி இருவரின் கண்களையும் கூச வைத்தது. அவர்கள் வியப்பினால் திகைத்துப் போயினர். அப்படி அந்தப் பெட்டிக்குள் இருந்தது என்ன தெரியுமா? ஒரு பெரிய வைரம். நடுப்பகலில் ஜொலிக்கும் சூரியனைப் போலப் பளபளத்துக் கொண்டிருந்தது. நன்றாக வளர்ந்த ஒரு எலுமிச்சம் பழம் அளவு இருந்தது அந்த வைரம்.

''இதன் மதிப்பு என்ன தெரியுமா?'' என்று கேட்டார் கிழவர்.

''இத்தகைய வைரத்தை நாங்கள் பார்த்ததே இல்லையே,'' என்றனர் கண்ணனும், மாதவனும்.

''யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். இதற்குப் பொருள் கொடுத்து வாங்கும் அரசர்கள் இந்தப் பூலோகத்தில் கிடையாது,'' என்று கிழவர் அதன் பெருமையை விளக்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உள்ளே வரும் காலடி ஓசை கேட்டது. மூவரும் திரும்பிப் பார்த்தனர்.

''ஓ கஜபதி ராயரா, வாருங்கள்,'' என்று வரவேற்றார் ரத்தின சிம்மர்.

பெயருக்கேற்ற பெருத்த உடலோடு கூடிய ஓர் உருவம் உள்ளே வந்தது. வழுக்கைத் தலை; வட்டமான முகம்; குட்டையான உடல். கண்ணனுக்கும், மாதவனுக்கும் கூட அவரைத் தெரியும். அந்தத் தெருக்கோடியில்தான் அவர் வீடு.

''அது என்ன பேழையில்?'' என்று கேட்ட கஜபதிராயருக்கு வைரத்தைக் காண்பிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது கிழவருக்கு. வைரத்தின் அழகிலே மயங்கிய கஜபதி, ''ரத்தின சிம்மரே! இதுபோன்ற விலை மதிப்பற்ற வைரத்தை இப்படிப் பாதுகாப்பில்லாமல் வைத்திருப்பது ஆபத்தில்லையா?'' என்றார்.

ரத்தின சிம்மர் லேசாகச் சிரித்துவிட்டு, ''இது என்னிடம் பத்திரமாகவே இருக்கிறது. என் படுக்கை அறையில் தலையணைக்கு அடியிலே இந்த பேழை இருக்கும். வேறு எங்கு சென்றாலும், கூடவே எடுத்துச் செல்வேன். இப்படி ஒரு வைரம் என்னிடம் இருப்பது உங்கள் மூவருக்குத் தான் தெரியும். இதைப் பிறரிடம் சொல்லாதீர்கள்,'' என்று கேட்டுக் கொண்டார் கிழவர்.

அதன்படியே, ரகசியத்தைக் காப்பதாக மூவரும் வாக்களித்தனர்.

கஜபதி, வீட்டுக்குக் கிளம்பினார்.

சிறிது நேரத்தில் கண்ணனும், மாதவனும் கிழவரிடம் விடை பெற்று வீட்டுக்குக் கிளம்பினர். கஜபதியின் வீட்டைக் கடந்துதான் அவர்கள் செல்ல வேண்டும். ஒரு கொழுத்த பூனையை வருடியபடி தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார் கஜபதி. அவர் அன்போடு வளர்க்கும் பூனை அது.

விடிந்தால் தீபாவளி. மங்களபுரி கோலாகலத்தில் மூழ்கிக் கிடந்தது. தீபாவளிச் சந்தையில் தினுசு தினுசான ஆடை, அணிகலன்கள் குவிக்கப்பட்டிருந்தன.

வானத்திலே சீறிச் சென்று ஒளி பொருந்திய வண்ணம் பூக்களைக் கொட்டும் வாணங்கள் விற்கும் கடை ஒரு பக்கம். விதவிதமான வாணங்கள் செய்வதிலே மங்களபுரித் தொழிலாளிகள் பிரசித்தி பெற்றவர்கள்.

சந்தைக்குச் சென்று வேடிக்கை பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர் கண்ணனும், மாதவனும். மறுநாள் அதிகாலையில் எழுந்திருந்து, பண்டிகையை வரவேற்க, நகர மக்கள் சீக்கிரமே படுத்து விட்டனர்.

ரத்தின சிம்மரின் வீட்டு வாசலில் நாலைந்து பேர் நின்று கொண்டிருப்பதைத் தூரத்திலேயே கண்ட கண்ணனும், மாதவனும் கிழவருக்கு ஏதாவது உடல் நலமில்லையோ என்ற கவலையுடன் விரைவாக வீட்டை அணுகினர். அங்கு கூடியிருந்தவர்களின் பேச்சிலிருந்து அவருக்கு ஏதோ ஆபத்து என்பதை அறிந்து தவிப்புடன் உள்ளே ஓடினர்.

அங்கே கண்ட காட்சி என்ன தெரியுமா? ரத்தின சிம்மர் ஒரு நாற்காலியிலே உட்கார்ந்திருந்தார். வைத்தியர் ஒருவர் தலையைச் சுற்றிக் கட்டுப்போட்டுக் கொண்டிருந்தார். கஜபதியும், அரண்மனையைச் சேர்ந்த வீரன் ஒருவனும் நின்று கொண்டிருந்தனர். அவன் இரவுப் பாராக்காரனாகத்தான் இருக்க வேண்டும் என்று யூகித்தான் கண்ணன்.

வைத்தியரின் கட்டுக்கும் மீறிக் கிழவரின் தலைக்காயத்திலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

ரத்தின சிம்மர் இவர்களைக் கண்டதும், ''கண்ணன், என் விலை மதிப்பற்ற வைரம் பறிபோய்விட்டது,'' என்றார். அவர் குரல் நடுங்கிற்று.

''திருடுப் போய்விட்டதா? எப்படி?'' என்றான் மாதவன்.

கஜபதி பதில் சொன்னார்.

''என் பேரனுக்கு எல்லா வெடிகளும் வாங்கிக் கொடுத்தேன். ஆகாசவாணம் வேண்டும் என்று அழுதான். வாணக் கடைக்குப் போவதற்காக வந்து கொண்டிருந்த போது ரத்தின சிம்மரின் வீட்டுக் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு உள்ளே நுழைந்தேன். கீழே யாருமில்லை.

''எட்டு மணிக்கெல்லாம் படுக்கும் பழக்கமுடையவராயிற்றே இவர் என்று மாடிப்படி ஏறும்போது, மேலேயிருந்து தடதடவென்று இறங்கி வந்த யாரோ ஒருவன் என் மீது மோதி, என்னை கீழே தள்ளிவிட்டு வெளியே ஓடி இருளில் மறைந்து விட்டான். நான் தவிப்போடு மேலே ஏறி வந்து பார்த்தேன். ரத்தின சிம்மர் படுக்கையில் மூர்ச்சையாகிக் கிடந்தார். தலையிலிருந்து ரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. அருகிலே பேழை திறந்து கிடந்தது. அதில் வைரத்தைக் காணோம்,'' என்றார் கஜபதி.

''அதேபோலத்தான் நானும் விளக்கு எரிகிறதே, வீடு திறந்து கிடக்கிறதே என்று உள்ளே புகுந்தேன். அப்போது இவர் படபடப்புடன் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்,'' என்றார் வீரனைப் போல் முறுக்கு மீசையுடன் முண்டாசும் இடைவாளும் அணிந்திருந்த அந்த மனிதர்.

''வைத்தியரை அழைக்கத்தான் நான் அப்படி வந்து கொண்டிருந்தேன். எதிர்ப்பட்ட இவர் என்னை வெளியே போக விடாமல் தடுத்து விட்டார்,'' என்றார் கஜபதி.

''ஆமாம், இந்தப் பெரிய சரீரத்தைத் தூக்கிக் கொண்டு இவர் எப்படி ஓடி, எப்போது வைத்தியருடன் வருவது? ஆகவே, வீதியில் போன ஒருவரிடம் சொல்லி வைத்தியரை அழைத்து வரச் செய்தேன்,'' என்றார் வீரர்.

''விலை மதிப்பற்ற பொருள்களை இப்படி வைத்திருப்பது எப்போதுமே ஆபத்துதான். மங்களபுரி மக்கள் நல்லவர்களானாலும் இம்மாதிரிப் பொருள்கள் யார் மனதையும் கெடுத்து விடும். அது சரி, உங்களிடம் வைரம் இருக்கும் விஷயம் மூன்றே பேருக்குத்தான் தெரியும் என்று சொன்னீர்களே அந்த மூன்று பேர் யார் என்று சொல்ல முடியுமா?'' என்று, ரத்தின சிம்மரைப் பார்த்து கேட்டார் வீரர்.

''இதோ இந்த இரு பையன்களும், என் நண்பரான இவரும்தான் அந்த மூவர் என்று கிழவர், கண்ணன், மாதவன், கஜபதி மூவரையும் காண்பித்தார்.

கண்ணனும், மாதவனும் திடுக்கிட்டனர், அரசாங்க அதிகாரியான அந்த வீரன் தங்கள் மீது சந்தேகம் கொள்வானோ என்று.

உடனே கஜபதி முகம் சிவக்க, ''இம்மாதிரி சந்தேகம் கிளம்பும் என்று எனக்குத் தெரியும். வீரரே, நீ வந்தபோது இந்த வீட்டில் நான்தான் இருந்தேன். ஆகவே, என்னை இப்போதே சோதனை போட்டு கொள்ளலாம்,'' என்றார்.

கஜபதியின் வார்த்தைகள் ரத்தின சிம்மருக்கு என்னவோ போலிருந்தன.

''நண்பரே, இது என்ன இப்படி..?'' என்றார்.

ஆனால், கஜபதி பிடிவாதமாகத் தம்மைச் சோதித்துக் கொள்ளும்படி வற்புறுத்தவே, வீரரும் அவருடன் அடுத்த அறைக்குச் சென்றார்.

-தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us