தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஒற்றுமையுடன் வாழ்!

ஒற்றுமையுடன் வாழ்!

ஒற்றுமையுடன் வாழ்!


PUBLISHED ON : அக் 25, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடவுள், மண்ணுலகில் உலவிய காலம் அது. சூரியக் கடவுள், வசந்தமங்கையை விரும்பி, மணந்தார்; அவர்களுக்கு, இரண்டு பிள்ளைகள்.

மூத்தவன் பெயர், மின்னல். கடல் நீரிலே முக்குளித்து, விதம் விதமான மீன்களை வாரி வரும், வல்லமை பெற்றவன். அவனிடம், ஒரு அற்புத துாண்டில் இருந்தது; அதை, கடலில் வீசினால், சிக்காத மீனே கிடையாது.

இளையவன் இடியோசை. அவனிடம் வில்லும், அம்பும் இருந்தன. காட்டிலும், மலையிலும் வேட்டையாடுவான்; அவன் அம்புக்கு அகப்படாத மிருகங்களே இல்லை.

ஒரு நாள் -

'ஒரு மாறுதலுக்காக, நம்மிடம் உள்ள திறமைகளை மாற்றிக் கொள்ளலாம்...' என்றான் இளையவன். மூத்தவனும், அதற்கு இணங்கினான்.

மின்னலிடம் மாயத் துாண்டில் முள்ளை வாங்கி, மீன் பிடித்து மகிழ, கடலுக்குச் சென்றான் இடியோசை. நாளெல்லாம் முயன்றும், சிறு மீன் கூட கிடைக்கவில்லை; மாயத் துாண்டிலும் தொலைந்து விட்டது.

இடியோசையின் வில்லையும், அம்பையும் எடுத்து சென்று, காடு, மலை எல்லாம் வேட்டையாடினான். குட்டி அணில் கூட அகப்படவில்லை; சோர்வோடு, வில் அம்புடன், வீடு திரும்பினான் மின்னல்.

'தம்பி... உன் அதிர்ஷ்டம் உன்னுடையது; என் அதிர்ஷ்டம் என்னுடையது; உன் வில் அம்பினால், எனக்குப் பயன் ஏதும் இல்லை. நான், கடலை நம்பி வாழ்பவன்; காடும், மலையும், உனக்குத் தான் வாழ்வளிக்கும். அதனால், இனி அவரவர் வழியில் வாழுவோம்; இதோ, உன் வில்லும், அம்பும்... எடுத்துக்கொள்; என் துாண்டிலைக் கொடு...' என்றான்.

தம்பிக்கு நடுக்கமாக இருந்தது.

'அண்ணா... உன் துாண்டிலால் எந்த பயனுமில்லை; அதைக் கொண்டு, ஒரு சின்ன மீனைக் கூடப் பிடிக்க முடியவில்லை; அது, கடலில் எங்கோ தொலைந்து போய் விட்டது...' என்றான்.

'எப்படியானாலும், அது என் அதிர்ஷ்ட துாண்டில் முள்; அதை எனக்கு கொடுத்து விடு...' என்றான் மின்னல். தம்பி கூறிய விளக்கத்தை ஏற்பதாக இல்லை.

வற்புறுத்தலை தாங்க முடியாத தம்பி, வாளை எடுத்தான்; அதன் ஒரு பகுதியை நெருப்பிலிட்டு, உலோக குழம்பாக தயாரித்தான். அதிலிருந்து, சில துாண்டில் முட்கள் தயாரித்தான். அவற்றை, மின்னலிடம் கொடுக்க முன்வந்தான்.

'இதெல்லாம் எனக்கு வேண்டாம்; என் துாண்டில் முள் தான் வேண்டும்...' என்று, அடம் பிடித்தான் மின்னல்.

பாவம் இடியோசை... தொலைந்து போன துாண்டில் முள்ளுக்கு எங்கு போவான். செய்வதறியாமல் கடற்கரையில் அழுது கொண்டிருந்தான். கடல் அலைகளுக்கு நடுவிலிருந்து எழுந்த தேவதை, 'ஏன் அழுகிறாய்...' என்று கேட்டாள்; காரணத்தை கூறினான்.

அவன் வேதனையைப் போக்க, மந்திர சக்தியால், ஒரு படகு தயாரித்தாள். அதில், இடியோசையை உட்கார வைத்து, 'இது கடலில் மிதந்து, மீன்களின் அரண்மனைக்கு போகும். அந்த அரண்மனை வாசலில் உள்ள மர கிளையில் அமர்ந்திரு. கடல் அரசனின் மகளைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்; அவள் உதவியால், உன் கவலை தீரும்...' என்று கூறி, படகை கடலில் விட்டாள்.

அது, கடல் அரசர் அரண்மனைக்கு வந்தது. அங்கு, மரக்கிளையில் அமர்ந்தான் இடியோசை. அந்த பக்கம் வந்த இளவரசியின் தோழியரிடம், தாகத்துக்கு தண்ணீர் கேட்டான். பவளத்தாலான குடுவையில் நீர் கொடுத்தனர். குடித்தபின், வைடூரியக் கல் பதித்த, ரத்தின ஹாரத்தை, அந்த குடுவையினுள் போட்டு திரும்பக் கொடுத்தான்.

அதை எடுத்து சென்ற தோழியர், இளவரசி முத்துநாயகியிடம் காட்டினர். பவளப் பாத்திரத்தில் சூரியனைப் போல் ஜொலித்த வைடூரிய மணி ஹாரத்தை கண்ட இளவரசி, 'இது என்ன... எப்படி இங்கு வந்தது...' என்று கேட்டாள். தோழியர் உண்மையை கூறினர்.

மரக்கிளையில் அமர்ந்திருந்த இளவரசனை, சந்தித்த இளவரசி, 'அரண்மனை வாசலில், அழகான இளைஞன் வந்திருக்கிறான்...' என்று தந்தை கடல் அரசரிடம் கூறினாள்.

அவனை அழைத்து வர உத்தரவிட்டார்.

இடியோசயைச் சந்தித்த கடல் அரசர், அவன் சூரியக்கடவுளின் இளைய மகன் என்பதைப் புரிந்து கொண்டார். ரத்தினக் கம்பளங்களையும், பட்டு விரிப்புகளையும் பரப்பி வரவேற்றார். அபூர்வ கடல் உணவுகள் தயாரித்து, மிகப்பெரிய விருந்து கொடுத்தார். விருந்தின் முடிவில், இடியோசை அங்கு வந்ததற்கான காரணத்தை வினவினார்.

தன் கதை முழுவதையும் கூறி, 'மந்திரத் துாண்டில் முள் கிடைக்காவிட்டால், திரும்பிப் போக முடியாது...' என்றான். உடனே, கடல் வாழ் உயிரினங்களை அழைத்த கடல் அரசர், துாண்டில் முள் குறித்து விசாரித்தார்.

மீன்கள் ஒரே குரலில், 'செந்தீ மீன், தொண்டையில் ஏதோ கோளாறு என, சில நாட்களாக கூறி கொண்டிருக்கிறது. ஆகாரத்தை விழுங்க முடியாமல் அவதிப்படுகிறது. ஒருவேளை அதன் தொண்டைக்குள், துாண்டில் முள் சிக்கியிருக்கலாம்...' என்றன.

உடனே, செந்தீ மீனை அருகே அழைத்து, தொண்டையில் சிக்கியிருந்த துாண்டில் முள்ளை எடுத்தார். அதை சுத்தம் செய்து, இடியோசையிடம் ஒப்படைத்தார். அவன் மகிழ்ச்சியில், கடல் அரசருக்கு நன்றி சொன்னான்.

பின், முதலை மன்னனை அழைத்த கடல் அரசர், கடலுக்கு மேலே பூமியில் இடியோசையை சேர்க்க கேட்டுக் கொண்டார்.

தலை மீது, அவனை அமர்த்திய முதலை மன்னன், பத்திரமாக நீந்தி, பூமியில் கொண்டு சேர்த்தது.

மின்னலை சந்தித்த இடியோசை, துாண்டிலை ஒப்படைத்து, அவன் கோபத்தை தணித்தான். இருவரும், மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ்ந்தனர்.

செல்லங்களே... முயற்சி செய்தால் எந்த பணியையும் முடிக்கலாம். வாழ்க்கையில் உயரலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us