தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தங்கையைத் தேடி (5)

தங்கையைத் தேடி (5)

தங்கையைத் தேடி (5)


PUBLISHED ON : ஜூலை 04, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுல்தான் தன் அடிமைகளை அனுப்பி மரியாதையோடு பாஷாவை அழைத்து வரும்படி உத்தர விட்டிருந்தார். கோட்டைக் குள்ளே நுழைந்ததும் இரண்டு அடிமைகள் சுலைமானுக்குக் கைலாகு கொடுத்துக் குதிரையி லிருந்து இறக்கினர். பாஷாவுடன் வந்திருந்த வீரர்களையும் தக்க மரியாதையுடன் தங்கும் விடுதிக்கு அழைத்துப்போயினர்.

முன்னும், பின்னும் அடிமைகள் அணி வகுத்துச் செல்ல, சுலைமான் பாஷாவை சுல்தானிடம் கூட்டிப் போயினர். சலவைக்கல் பதிக்கப்பட்ட மாடிப்படிகளில் ஏறிப்போவதே ஒரு சுகமாக இருந்தது மகேஷுக்கு. அரண் மனையின், செல்வச் செழிப்பையும், நாகரிகத் தையும் கண்டு பிரமித்துப் போனான்.

சுல்தான் திண்டுகள் பரப்பப்பட்ட பட்டு மெத்தையில் அமர்ந்திருந்தார். ஐம்பது வயதுக்கு மேலிருக்கும். ஆனால், உடலில் வாலிபத்தின் முறுக்குக் குறையவில்லை. பாஷாவை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார்.

கோலாகலமான விருந்து பரிமாறப்பட்டது. கிதார் வாத்திய இசைக்குப் பின், நாட்டியப் பெண்களின் சிருங்கார நடனமும் இருந்தது. சுல்தானிடம், மகேஷ் பேச்சுக் கொடுத்தான்.

''சமீபத்தில் அற்புதமான இரண்டு அழகிகளை அடிமைச் சந்தையில் வாங்கினீர்களாமே!''

''ஆமாம், உங்களுக்கு யார் கூறியது?''

''யார்தான் கூறமாட்டார்கள்? சூரத் நகரில் எல்லாருடைய பேச்சிலும் சுல்தான் வாங்கிய அழகிகளைப் பற்றிய செய்திதானே அடிபடுகிறது!''

''அச்சா! அத்தகைய பாராட்டுக்குத் தகுதியான அழகிகள்தான் அவர்கள்!''

''அவர்களை நான் பார்க்கலாமா?''

''அதுதான் துரதிர்ஷ்டம். அவர்கள் இன்னும் நம் ஜனானாவுக்கு ஏற்றபடி வரவில்லை. புதுசு இல்லையா! யாரையும் அருகே அண்ட விடாமல் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். எத்தனை நாளைக்கு? பட்டினி போட்டால், தானே பணிந்து வரப்போகின்றனர். பாஷாவுக்கு அவர்களைக் காண்பிக்க முடியாததுக்கு வருத்தப்படுகிறேன்,'' என்றார் சுல்தான்.

பொறுத்திருப்போம் என்று மகேஷ் சுல்தானின் வரவேற்பையும், விருந்தையும் பாராட்டிவிட்டு ஓய்வுகொள்ளத் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த மாளிகைக்குப் போனான். தொடர்ந்து பயணித்ததினால் ஏற்பட்ட அலுப்பும், சுல்தானின் சொகுசான மஞ்சமும் விரைவி லேயே அவனை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தியது.

நள்ளிரவு நேரமிருக்கும். அவன் கண்களுக்கு அருகே மிகப்பிரகாசமான ஒளியின் உணர்வை உணர்ந்து திடுக்கிட்டு கண் விழித்தான்.

எழுந்து உட்கார்ந்த மகேஷுக்கு தான் காண்பது கனவா அல்லது நிஜமா என்று புரியவில்லை. கையில் விளக்குடன் விகாரமான சிரிப்போடு குலாம் முகமதுவின் கூடாரத்தில் சந்தித்த அதே குள்ளக்கிழவன் அவன் அருகே நின்றுகொண்டிருந்தான்.

'இவன் எப்படி இங்கு வந்தான்?' என்று தன்னைக் கிள்ளிக் கொண்டான். வலித்தது; கனவில்லை.

''என் படுக்கை அறையில் உனக்கென்ன வேலை?'' என்று ஆத்திரத்தோடு வினவினான் கழுகுக்கண் கிழவனை.

''அலட்டிக் கொல்லாதீர்கள் போலிப் பாஷா அவர்களே! நீ இங்கு எதற்காக மாறுவேஷம் போட்டு வந்திருக்கிறாய் என்பதை நான் அறிவேன். என் கையாலேயே சுலைமான் பாஷாவை நான் தூக்கிலிட்டவன். இல்லாவிட்டால் நானுமே கூட நீ தான் பாஷா என்று நம்பியிருப்பேன். உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன்,'' என்றான் குரூரமான கிழவன்.

''நீ கேள்வி கேட்பது இருக்கட்டும். இங்கு நீ எப்படி வந்தாய் என்பதை முதலில் சொல்,'' என்றான் மகேஷ்.

தன்னை அவன் இனந்தெரிந்து கொண்ட ஆத்திரம் அவன் குரலில் தொனித்தது.

''சொல்லுகிறேன். எனக்கும் குலாம் முகமதுவுக்கும் இனி ஒத்துவராது என்பதை உணர்ந்தேன். ஆகவே, அங்கிருந்து ஓடிவந்து விட்டேன். என்னிடம் நம்பிக்கை கொண்டிருந்த வருக்கு என்மீது வெறுப்பு ஏற்பட்டது உன்னால் தான். அதற்கு ஈடுசெய்ய வேண்டியதும் நீதான். உன் சகோதரியை என் மனைவியாக்கிவை. நீங்கள் மூவரும் இங்கிருந்து பத்திரமாக வெளியேற உதவுகிறேன். இதற்கு நீ உடன்படா விட்டால் என்னுடைய புதிய எஜமான் சுல்தானிடம் இங்கு முகாமிட்டிருக்கும் போலி பாஷாவைப் பற்றிய தகவல்களைத் கூற வேண்டியிருக்கும்!'' என்றான்.

மகேஷுக்கு கோபம் குமுறிக்கொண்டு வந்தது. 'பல நாட்களாகப் படாத பாடெல்லாம் பட்டு வந்த காரியம் கை கூடப்போகும் தருணத்தில் இந்தக் கொடியவன் எல்லா வற்றையும் பாழாக்கி விட்டானே... இவனை இந்த அரக்கனைக் கொன்றாலொழிய நம் காரியம் கைகூடாது' என்று அவன் மீது குபீரென்று பாய்ந்தான்.

அவன் இப்படிச் செயல்படுவான் என்பதை எதிர்பார்த்திருந்தவன் போல அந்தச் சைத்தான் கிழவன் கையிலிருந்த விளக்கைச் சட்டென்று கீழே போட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டான். எங்கும் இருள் சூழ்ந்தது. இருட்டில் வெறும் தரையில் பரிதாபமாகப் போய் விழுந்தான் மகேஷ்.

''கொலை... கொலை திருடன்...'' என்று குரல் எழுப்பினான் கிழவன்.

தன்னைச் சுதாரித்துக் கொண்டு எழுந்த மகேஷ் நிலைமை மோசமாகிப் போவதை உணர்ந்தான். இனி இங்கிருந்தால் அபாயம் என்று தன் உடைமைகளெல்லாம் போனால் போகட்டும் இங்கிருந்து வெளியேறினால் போதும் என்ற முடிவோடு இருட்டில் தட்டுத் தடுமாறி ஜன்னல் பக்கமாகப் போனான். அதன் வழியாகக் குதித்தாலும் கோட்டைச் சுவர் மிக உயரமானது. அதில் எப்படி ஏறி மறுபக்கம் குதிக்க முடியும்? இப்படி யோசித்து கொண்டி ருக்கும்போது பல குரல்கள் மிக அருகே கேட்பதை உணர்ந்தான். இனி தாமதிப்பது அபாயமென்று வாளை உருவிக் கையிலேந்திய படி தன் உடைகளை அள்ளிக் கொண்டு சாளரத்தின் வழியே கீழே குதித்தான். நல்ல உயரம்தான். குதித்ததில் நல்ல வேளை எலும்பு எதுவும் முறியவில்லை.

கோட்டையைச் சூழ்ந்துள்ள மதில் சுவரை நோக்கி மங்கிய வெளிச்சத்தில் ஓடினான். அவ்வளவு உயரமான சுவற்றில் எப்படி ஏறி மறுபக்கம் குதித் தான் என்பது அவனுக்கே வியப்பாக இருந்தது. மறுபக்கம் புல் வெளியாக இருந்ததினால் பிழைத்தான். ஓடினான், ஓடினான் மூச்சு வாங்க ஓடினான். அடர்ந்த கானகத்திற்குள் வரும்வரை ஓடினான். இனி ஓட முடியாது என்ற நிலையில் அப்படியே கீழே விழுந்து மூச்சிறைக்க நெஞ்சு விம்மித் தணியக் கிடந்தான்.

கொஞ்சம் ஆசுவாசப் பட்டதும் இனி என்ன செய்வது என்பதைப் பற்றி சிந்தனையைக் கசக்கினான். கூலிக்கு அமர்த்தியவர்களும், குதிரைகள், ஒட்டகம், பல்லக்கு எல்லாம் பறிபோய் விட்டன. நல்ல வேளையாக பணத்தை இடுப்புக் கச்சையில் வைத்துக் கட்டிக் கொண்டிருந்ததால் அது பிழைத்தது.

அவன் ஆசுவாசப்பட்டு சீராக மூச்சுவர நீண்ட நேரமாயிற்று. கானகத்தின் இருள் இதமாக இருந்தது. அவர்களை எப்படிக் காப்பாற்றலாம் என்று மூளையைக் குழப்பிக் கொண்டிருந்தபோது சின்ன வயதில், பொழுது போக்காகக் கற்றுக்கொண்ட மூலிகை மருந்து தயாரிக்கும் வழிமுறைகளை அறிந்து கொண்டது நினைவுக்கு வந்தது. சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.

அவன் உள்ளத்தில் திட்டம் உருவாகி விட்டது. அவனுக்குப் பச்சிலைகளின் பரிச்சயம் மறக்கவில்லை. இந்தக் காட்டில் அவனுக்குத் தேவையான பச்சிலைகள் இல்லாமல் போகாது. காலையில் அவைகளைத் தேடிச் சேகரித்து ஒரு மருந்து தயாரிக்க வேண்டும். மரணத்தைப் போன்ற உறக்கத்தை தரும் அந்த மருந்து. ஆனால், வேறொரு மூலிகையினால் அந்த மயக்கத்தைப் போக்கி உயிர்ப்பித்து விடலாம்.

மறுநாள் காலையில் மகேஷ் இமயமலையி லிருந்து வரும் ஒரு புகழ் பெற்ற வைத்திய னாகத் தன்னை மாற்றிக் கொள்ளுவதென்ற முடிவோடு விடியலை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

அவன் அதிர்ஷ்டம் அவனுக்குத் தேவையான பச்சிலைகள் அந்தக் காட்டில் சிரமப்படாமலேயே கிடைத்தன. அவைகளைக் கொண்டு மருந்து தயாரித்துக் கொண்டான். அருகிலிருந்த விடுதிக்குப் போய் ஒரு குதிரை யும், இன்னும் சில பொருள்களும் வாங்கிக் கொண்டு தன்னை ஒரு நாடோடி வைத்தியனாக உருமாற்றிக் கொண்டான். பெரிய தாடி மீசை யெல்லாம் அவன் முகத்தை மூடி மறைத்தன. ஒரு கழுதையை வாங்கி அதன் மீது மருந்து மூட்டை முடிச்சுகளையும், பச்சிலை, கிழங்கு, வேர், இத்யாதி பொருள்களையும் ஏற்றிக் கொண்டு, சுல்தானின் கோட்டைக்குப் பயணமானான்.

'சங்கமகா சிங்கபாபா' என்று பெயர் சூட்டிக் கொண்டான். இமயமலை அடிவாரத்திலிருந்து அபூர்வமான பச்சிலை மூலிகைகளுடன் வைத்தியர் வந்திருப்பதாக கோட்டைக் காவலாளி மூலம் சுல்தானுக்குச் சொல்லி அனுப்பினான்.

-தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us