தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தங்கையைத் தேடி! (6)

தங்கையைத் தேடி! (6)

தங்கையைத் தேடி! (6)


PUBLISHED ON : ஜூலை 11, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 11, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜோசியர், வைத்தியர், நகைவியாபாரி இவர்களுக்கு எப்போதுமே ஒரு ராசி. உடனே அனுமதி கிடைத்துவிடும். மகேஷ் எதிர்பார்த்த படியே சுல்தானைச் சந்திக்க வரும்படி அழைப்புக் கிடைத்தது.

இமயமலை வைத்தியரை வரவேற்று உபசரித்த சுல்தான், தன் ஜனானாவிலுள்ள பெண் அடிமைகளுக்கெல்லாம் வைத்தியப் பரிசோதனை செய்து, ஆரோக்கியத்துக்கு நல்ல மருந்தாகத் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

மகேஷின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தன் அருமைத் தங்கையைக் காணும் வாய்ப்பு நெருங்கி வருவதை எண்ணிப் பூரித்துப் போனான். ஆனா<லும், தன் மகிழ்ச்சியைக் கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டு, சுல்தானின் விருப்பப்படியே செய்வதாகக் கூறினான். சுல்தான் ஹக்கீமான மகேஷை தன் ஜனானாவுக்குக் கூட்டிப் போனார்.

''சங்கமாஜியா தங்க மாஜியா அது என்னவோ உன் பெயர் என் வாயில் நுழையவில்லை. அதோ சுவரில் ஒரு சிறு பலகணி போன்ற துவாரமிருக்கிறதில்லையா அதன் வழியே பெண் அடிமைகள் ஒவ்வொருவராகக் கையை நீட்டுவர். அந்தக் கையின் நாடித் துடிப்பைப் பார்த்து, அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா இல்லையா என்பதை அறிந்து அதற்குத் தக்கபடி மருந்து தர வேண்டும்,'' என்றார்.

அடிமைகளைப் பார்க்க அனுமதி கிடையாது என்பதை அறிந்த மகேஷுக்கு கொஞ்சம் வேதனையாகத் தானிருந்தது. ஆனால், வேறு வழியில்லை. சுல்தான் ஒரு நீண்ட பட்டியலை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பெயராகக் கூப்பிட்டார். உடனே ஒரு கை, சுவரிலுள்ள துவாரத்தின் வழியே நீளும். உடனே வைத்தியர் மகேஷ் அவள் நாடியைப் பிடித்துப் பார்த்து குறித்துக் கொண்டான். எட்டுப் பத்துப் பெண்களின் கைகளை நாடிப் பார்த்த மகேஷ் அவர்கள் எல்லாரும் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறினான்.

இதைக் கேட்ட சுல்தான் மகிழ்ச்சி அடைந்தார்.

அடுத்ததாக, ''வினோதினி,'' என கூப்பிட்டார் சுல்தான்.

மகேஷின் நெஞ்சுத் துடிப்பு அதிகமாயிற்று. துவாரத்தின் வழியே ஒரு அழகிய கை நீண்டது. தன் நடுங்கும் கைகளால் அந்த சந்தனக் கரத்தைப் பற்றினான். அருமைத் தங்கையை கண்டது போன்ற களிப்பில் புளகாங்கித மடைந்த மகேஷ், அடுத்த செய்ய வேண்டியதை அவசரமாகத் திட்டமிடலானான்.

தன் தங்கை வினோதினியைக் காண நேர்ந்தால், அவளிடம் நேரில் பேச முடியாத நிலை இருக்குமானால், அவளுக்குத் தன் வரவை அறிவிக்க ஒரு கடிதம் எழுதித் தயாராக வைத்திருந்தான். அந்தக் கடிதத்தை அவள் கைகளுக்கு இடையே சட்டென்று சமயம் பார்த்துக் கொண்டு சொருகினான். பிறகு சுல்தானிடம், ''இந்தப் பெண் ஆரோக்கியமாக இல்லை. ஏதோ நோய் வாய்ப்பட்டிருக்கிறாள். இவளைக் கவனித்துத் தக்க மருந்து தரவேண்டும்,'' என்றான்.

சுல்தானுக்கு வைத்தியரின் திறமையில் அபாரமான மதிப்பு ஏற்பட்டு விட்டது. அவனை 'ஓஹோ' என்று பாராட்டினார். மகேஷின் கடிதத்திலிருந்த வாசகம் இது தான்.

'வினோதினி நான் உன்னைக் காப்பாற்ற வந்திருக்கிறேன். நான் அனுப்பும் மருந்தை மறுக்காமல் சாப்பிடு. இரண்டு நாள் இறந்தது போலிருப்பாய். உன்னை மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவர என்னிடம் மாற்று மருந்துள்ளது. ஆகவே, கவலைப்படாதே உன் சம்மதத்தை 'இந்த வைத்தியர் பிரயோசனமில்லை' என்று எழுதி அனுப்புவதன் மூலம் தெரிவி. நான் புரிந்து கொள்ளுவேன்' என்று எழுதியிருந்தான்.

மகேஷ் சுல்தானிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே ஜனானாவிலிருந்து அவன் கடிதத்துக்குப் பதில் வந்து விட்டது. அந்தச் சாளரத் துவாரத்திலிருந்து ஒரு கடிதம் வந்து விழுந்தது. அதை எடுத்துப் படித்தார் சுல்தான். இந்த வைத்தியர் பிரயோசன மில்லை என்று எழுதப்பட்டிருந்தது.

அதை மகேஷிடம் கொடுத்துக்கொண்டே, ''அவர்களுக்கு என்ன தெரியும்? அசடுகள்! வைத்தியரே நீங்கள் அவளுக்குச் சிகிச்சை அளியுங்கள். மருந்து கொடுத்தனுப்புங்கள் நான் சாப்பிடச் செய்கிறேன்,'' என்றார்.

மகேஷுக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி. தன் மூட்டையைப் பிரித்து மருந்து தயாரிக்கலானான். அப்போது சுல்தான், ''ஹக்கீம் அவர்களே! அந்தப் பெண் வினோதினிக்கு என்ன நோய்?'' என்றார்.

''ஒருவகைக் கொடிய நோய். ஆனால், நோயாளிக்குத் தான் நோய்வாய்பட்டிருப்ப தாகத் தெரியாது. லேசான காய்ச்சல் இருக்கும். ஆனால், அது மெது மெதுவாகவே அவர் களைக் கொன்றுவிடும்,'' என்றான்.

சுல்தான் பதறிப்போனார்.

''ஓய் ஹக்கீம்! உடனே நல்ல மருந்தாகக் கொடு. அந்த அடிமைப் பெண்ணைப் பெரும் பொருள் கொடுத்து வாங்கி இருக்கிறேன். செத்துத் தொலைத்தால் எனக்கு ஏக நஷ்ட மாகும் என்றார். இதற்குள் மகேஷ், இதற் காகவே தயாரித்து வைத்திருந்த தூக்க மருந்தை சுல்தானிடம் கொடுத்து, ''இதை அந்தப் பெண்ணைச் சாப்பிடச் சொல்லுங்கள்,'' என்றான்.

சுல்தான் உடனே ஒரு அடிமைப் பையனை அழைத்து அவனிடம் மருந்தைக் கொடுத்து, ''அந்தப் பெண் வினோதினியிடம் இதைக் கொடுத்து அவள் சாப்பிடுவதை இருந்து பார்த்துவிட்டு என்னிடம் வந்து சொல்ல வேண்டும்,'' என்று கட்டளையிட்டு அனுப்பினார்.

அதன்பிறகு மகேஷ், ''இந்த மருந்துக்குப் பிறகு வேறு சில கஷாயங்களும் சாப்பிட வேண்டும். அதைத் தயாரிக்க சில பச்சிலைகளைப் புத்தம் புதியதாகச் சேகரித்து வர வேண்டும். கோட்டைக்கு வெளியிலுள்ள ஏரிக்கரையை அடுத்த காட்டில் அவை கிடைக்கலாம். போய்க் கொண்டு வர அனுமதியளிக்க வேண்டுமென்று,'' கேட்டுக்கொண்டான்.

சுல்தானும் எப்படியாவது நல்ல மருந்தாகத் தயாரித்து அவளைக் குணப்படுத்துமாறு கூறி அனுமதித்தார்.

கோட்டைக்கு வெளியே ஏரிக்கரையை அடைந்த மகேஷ் தன் தாடி மீசைகளையும், வைத்தியர் உடைகளையும் ஏரியில் வீசிவிட்டு கானகத்திலுள்ள அடர்ந்த புதர்களில் மறைந்து இருட்டுவதற்காக காத்திருந்தான். இருட்டி யதும் இடுகாட்டை நோக்கிக் கிளம்பினான்.

இமயமலைச் சாரலிலிருந்து வந்த ஹக்கீமான மகேஷ் கோட்டையை விட்டு வெளியேறிய சிறிது நேரத்துக்கெல்லாம் ஜனானாவிலிருந்து பரபரப்பான செய்தி சுல்தானிடம் வந்தது.

''அழகியான அடிமை வினோதினி மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கிறாள். வைத்தியர் கொடுத்த மருந்தைச் சாப்பிட்டதின் விளைவு இது!'' என்றனர்.

சுல்தான் உடனே பதறிப்போய் தன் ஆட்களை அனுப்பி ஏரிக்கரைக்கு பச்சிலை தேடப் போயிருக்கும் வைத்தியரைக் கையோடு அழைத்து வரும்படி ஆணையிட்டார்.

வைத்தியரைத் தேடிப் போனவர்கள் வெறும் கையுடன் தொங்கிய தலையுடன் திரும்பினர்.

''அவர் உடைகள் ஏரியில் மிதக்கின்றன. உடைமைகள் ஏரிக்கரையிலிருக்கின்றன. ஆகவே, அவர் ஏரியில் தவறி விழுந்து மூழ்கி இறந்திருக்க வேண்டும்!'' என்று கூறினர்.

சுல்தானுக்குக் கோபமான கோபம், வேதனையான வேதனை. அந்த வைத்தியரை சபித்தபடி தாடியைப் பிய்த்துக் கொண்டு கத்தினார். ஆனால், பலன் ஏதுமில்லை. வினோதினியின் மூச்சு அடங்கிவிட்டதாகப் பணிப் பெண்கள் வந்து கூறினர்.

இனி செய்வதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் அவளை நல்லடக்கம் செய்ய சவப் பெட்டி தயாரிக்கும்படி கட்டளையிட்டார். அவள் உடலைத் தாமதிக்காமல் இடுகாட்டுக்குக் கொண்டு போய் அடக்கம் செய்யும் படியும் ஆணை பிறப்பித்தார். சுல்தானின் பணியாட்கள் அதன்படியே வினோதினியின் உடலைச் சவப்பெட்டியில் வைத்துக் கொண்டு போய் இடுகாட்டில் இறக்கினர். அப்போது இரவு வேளை நல்ல இருட்டும் கூட. அங்கு முன்பே இருந்த ஒரு சவப்பெட்டியிலிருந்து முனகலும், பெரு மூச்சும் கேட்கவே, காவலர்கள் பீதியடைந்துபோய் செத்த பிணம் உயிர்பெற்று எழுந்து வருவதாக எண்ணி, வினோதினியின் சவப் பெட்டியை அப்படியே போட்டு விட்டு ஓட்ட மெடுத்தனர்.

இன்னொரு சவப்பெட்டிக்குள் இருந்து அப்படி பீதி கொள்ளும் ஒலி உண்டாக்கியது மகேஷ்தான். சுல்தானின் வேலை ஆட்கள் ஓடியதும் மகேஷ் சவப்பெட்டியிலிருந்து வெளிப்பட்டு, தன்னுடன் கொண்டு வந்திருந்த ஒரு விளக்கை ஏற்றினான். பிறகு வினோதியின் சவப்பெட்டியின் அருகில் போய் அதைத் திறந்து தன் அருமை தங்கையின் முகத்தைப் பார்க்க விளக்கை அருகே கொண்டு போனான்.

அதில் இருந்த உருவத்தை கண்டவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. தவித்துத் தடுமாறிப் போனான்.

-தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us