PUBLISHED ON : ஜூலை 18, 2014

காரணம் அதில் கிடத்தப்பட்டிருந்தது அவன் தங்கை வினோதினி அல்ல... வேறு யாரோ ஒரு அடிமை அழகி!
மகேஷுக்கு எப்படி இருக்கும். 'படாத பாடெல்லாம் பட்டு, இவ்வளவு திட்டமிட்டுக் கடைசியில் எல்லாம் பாழாகி விட்டதே' என்று வருந்தினான். ஆத்திரப்பட்டான்.
அழுகையாக வந்தது. ஒருவிதமாக சமாதானமடைந்ததும் மேற்கொண்டு செய்ய வேண்டியதைச் சிந்திக்கலானான். தன் கடிதத் துக்கு பதில் வந்ததும் வினோதினி என்றுதான் சுல்தான் கூறினார். அப்படி இருந்தும் இந்தப் பெண் எப்படி என் மருந்தைச் சாப்பிட்டு சவப்பெட்டியில் வந்தாள். ஒரு வேளை அந்தக் கிழவனின் வேலையாயிருக்குமோ? எதற்கும் இந்தப் பெண்ணை உயிர்ப்பித்து உண்மையை அறியலாம் என்று மயக்கத்தி லிருந்து விடுபடும் மருந்தை அந்தப் பெண்ணின் வாயில் ஊற்றிக் காத்திருந்தான்.
சவப்பெட்டியில் நினைவின்றிக் கிடந்த பெண்ணின் உடல் சிறிது நேரத் தில் அசைந்தது. பிறகு கால்களை அசைத்தும், மேற் கொண்டு சில சிகிச்சைகளுக்குப் பிறகு அவள் எழுந்து உட்கார்ந்தாள். மெல்ல, மெல்ல நடந்தவைகள் அவள் நினைவுக்கு வரவே, தன்னையே பார்த்துக்கொண்டு உட்கார்ந் திருக்கும் மனிதனின் கால்களில் விழுந்தாள். நன்றிப் பெருக்கில் அவள் கண்கள் நனைந்தன.
''உங்களுக்கு நான் எப்படி நன்றியைத் தெரிவிப்பதென்றே தெரியவில்லை. சுல்தானின் அடிமை சிறையிலிருந்து என்னை மீட்டதற்கு நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்,'' என்றாள்.
''அது சரி, என் சகோதரிக்கல்லவா நான் கடிதம் அனுப்பினேன். நீ எப்படி வந்தாய்?'' என்று கேட்டான் மகேஷ்.
''என் பெயர் வினோதினி. தெய்வம்போல் என்னைக் காப்பாற்றி வந்திருப்பதாக நான் நினைத்தேன்,'' என்றாள் அந்தப் பெண்.
மகேஷ் தன் சோகக் கதையைக் கூறினான். அப்போது அந்தப் பெண் மகிழ்ச்சியோடு குதித்தாள்.
''ஓ... புதிகாக வாங்கி வந்த அந்த இரண்டு பெண்களைப் பற்றித்தான் நீங்கள் குறிப்பிடு கிறீர்களா? ஒப்பற்ற அழகிகளான அவ்விரு வரையும் அந்த சுல்தான் கிழம், தன் மனைவி யாக்கிக் கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. அவருக்குப் பிடித்த விசேஷமான அடிமை களின் பெயரை மாற்றி வருவது வழக்கம். உங்கள் தங்கையின் பெயரும், அவள் தோழியின் பெயரும் இப்போது வினோதினி, அம்பிகா இல்லை. பாத்திமாவும், நூர்ம ஹாலுமாகும். சாதாரண அடிமையான என் நிஜப் பெயர் மாற்றப்படவில்லை. அவர் வினோதினி என்றதும் நீங்கள் உங்கள் சகோதரியாக நினைத்து விட்டீர்கள். என்னையும் இந்தக் கிழம் பெரும் பொருள் கொடுத்துத்தான் அப்போது வாங்கியது,'' என்று விஷயத்தை விளக்கினாள் அந்தப் பெண்.
இதைக் கேட்டதும் இடிந்துபோனான் மகேஷ். தன் தங்கையையும், அம்பிகாவை யும் மீட்பதற்கான நம்பிக்கை போய்விட்டது அவனிடம். அவனுடைய துக்கத்தைக் கண்ட அந்தப் பெண் வினோதினி அவனைச் சமாதானப்படுத்தி, ''அவர்களை மீட்பதற்கு ஒரு வழி இருக்கிறது. கவலைப்படாதீர்கள்,'' என்றாள்.
மகேஷ் ஆனந்தத்தினால் துள்ளிக் குதித்தான்.
''என்ன வழி? சீக்கிரம் சொல்,'' என்று தவித்தான் மகேஷ்.
''என்னை ஐந்து மாதங்களுக்கு முன்புதான் அடிமையாக்கிக் கொண்டு வந்தார் சுல்தான். அங்குபோன அன்றைக்கே எப்படியாவது அங்கிருந்து தப்பிவிட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன். என்னென்னவோ வழிகளையெல்லாம் கையாண்டேன். அதில் என்ன கஷ்டங்கள் இருந்தாலும் ஏற்று எப்படியாவது வெளியேறத் துடித்தேன். கோட்டையின் முற்றத்திலேயே ஒரு நீருற்று இருப்பதைப் பார்த்திருப்பீர்களே? அதன் நடுவிலுள்ள சிங்கங்களின் வாயிலிருந்து நீர் பீச்சி அடிக்கிறதில்லையா? அதற்கு தண்ணீர் எங்கே இருந்து வருகிறது என்பதில் என் கவனம் சென்றது.
''கோட்டைக்குள் தண்ணீர் வசதி கிடையாதா?'' என்று கேட்டான் மகேஷ்.
''கிடையாது. ஒரு கிணறு கூட இல்லை. இதே போன்ற ஒரு செயற்கை நீரூற்று ஒன்றுக்கு எங்கள் ஊர் ராஜாவின் அரண்மனையில் வெகுதூரத்திலுள்ள ஆற்றிலிருந்து பூமிக்குள் மூடப்பட்ட கால்வாய் வழியாகத் தண்ணீர் கொண்டு வரப்பட்டிருப்பதை நான் அறிவேன். அதேமாதிரி இதற்கான நீர் எங்கிருந்து எப்படி வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளத் திட்டமிட்டேன்!''
ஒருநாள் சுல்தானிடம் அந்தச் செயற்கை நீரூற்றை ஓஹோ என்று பாராட்டிப் புகழ்ந்து விட்டு, ''இதை உருவாக்கியது யார்?'' என்று கேட்டேன்.
''ஏன்? இதை உருவாக்கியது நான்தான்,'' என்றார் சுல்தான்.
''நீ இங்கே பார்ப்பது இதன் கடைசிப் பகுதி. இங்கிருந்து ஒரு மைலுக்கு அப்பாலுள்ள ஓடையிருந்து கோட்டைக்குத் தண்ணீர் கொண்டுவர பூமிக்குள்ளேயே ஒரு கால்வாய் அமைத்திருக்கிறேன். ஒரு ஆள் அதில் நடந்து வரலாம். அதற்குத் திட்ட மிட்டுக் கட்டியது நான்தான் என்றார். அந்த சமயத்தில் நான் நினைத்துக் கொண்டேன். நான் மட்டும் ஆண் பிள்ளையாக இருந்தால் நீரூற்றுக்குப் பின்னால் உள்ள ஒரு கல்லை அப்புறப்படுத்தி விட்டு, அதன் வழியே தப்பி விடலாமே என்று. ஓடையிலிருந்து ஆரம்ப மாகும் கால்வாய்ப் பகுதியை உங்களுக்குக் காட்டுகிறேன். நீங்கள் அதன் வழியே கோட்டைக்குப் போய் உங்கள் சகோதரி யையும், அம்பிகாவையும் விடுதலை செய்து விடலாம். ஆனால், நீங்கள் ஒருவராகப் போய்ப் பயனில்லை. குறைந்த பட்சம் மூன்று பேராவது இருந்தால் தான் இரவு முழுவதும் காவல் காக்கும் அடிமைக் காவலர்களைச் சமாளிக்க முடியும்,'' என்றாள்.
இருமுறை பெருமுயற்சி செய்து தோல்வி கண்ட மகேஷ் மூன்றாவது முறையாகத் தன் ஆர்வத்தையெல்லாம் திரட்டிக் கொண்டு, அந்தப் பெண் கூறிய புதிய திட்டத்தில் இறங்க முடிவு செய்தான். தான் கோட்டைக்குள் போக அவள் உதவியதால் அவளைப் பத்திரமாக அவள் பெற்றோரிடம் சேர்ப்பிப்பதாக உறுதியளித்தான்.
மகேஷின் பிரச்னை நம்பிக்கையான இருவருக்கு எங்கே போவது என்பது தான். முகம் தெரியாத இந்தப் பூமியில் யாரை நம்புவது?
சட்டென்று குலாம் முகமது வின் கத்தி நினைவுக்கு வந்தது. அந்தக் குத்துவாளைத் தனக்கு அனுப்பினால், உதவிக்கு எங்கிருந்தாலும் வந்து குதிப்ப தாக வாக்களித்திருந்தானே குலாம்.
உடனே அந்தப் பெண்ணை யும் அழைத்துக் கொண்டு குலாம் முகமதுவைத் தேடிக் கிளம்பினான். தான் வைத்திய னாக மாறுவதற்குத் தங்கிய கிராமத்துக்கு வந்தான். அந்தப் பெண் வினோதினியை ஒரு ஏழை மூதாட்டியின் பொறுப் பில் ஒப்படைத்து, அவள் பராமரிப்புக்கு பணமும் தந்து, நான் திரும்பி வரும்வரை இந்தப் பெண்ணைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். தனக்கு ஒரு நல்ல குதிரையை வாங்கிக் கொண்டு குலாம் முகமதுவைக்காண விரைந்தான். முதலில் தான் சந்தித்த அதே இடத்துக்கு மூன்றேநாளில் அடைந்து விட்டான். கூடாரங்கள் அப்படியே இருந்தன.
குலாம் முகமது மகேஷை பாசமுடன் வரவேற்றான். மகேஷ் தன் முயற்சிகள் வீணானதையும், இப்போது புதிய திட்டத்துடன் வந்திருப்பதையும் தனக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான்.
தன்னிடமிருந்து தப்பி ஓடிய கிழவனின் கீழ்த்தரமான துரோகச் செயலைக் கேள்விப் பட்ட குலாமின் கோபம் கொழுந்துவிட்டது.
''அந்தப் பயல்மட்டும் என் கையில் அகப்படுவானானால், அவனை என் கையாலேயே தூக்கில் தொங்கவிடுவேன்,'' என்று ஆத்திரப்பட்டவன் மகேஷுக்கு உதவுவதாக வாக்களித்தான்.
''இன்றிரவு ஓய்வுகொள். நாளை காலையில் நானே உன்னோடு வருகிறேன்,'' என்றான்.
மகேஷ் காலையில் கண் விழித்ததும் குலாம் முகமது, சிறந்த வீரர்கள் மூவருடன் தயாராக இருந்தார். அவனும் தயாரானான். உயர்ந்த குதிரைகளையும், சிறந்த ஆயுதங்களையும், வீரர்களையும் பொறுக்கி எடுத்திருந்தான் குலாம்.
-தொடரும்.
