PUBLISHED ON : ஜூன் 13, 2020

திண்டுக்கல், காந்திஜி நினைவு நடுநிலைப் பள்ளியில், 1977ல், 4ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்...
வகுப்பில் முதல் மாத தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தேன். வகுப்பாசிரியை புஷ்பம், பெற்றோரை அழைத்து வர கூறினார். அம்மாவை அழைத்து சென்றபோது, 'வீட்டுப் பாடத்தை முறையாக பயற்சி செய்தால், அதிக மதிப்பெண் பெறலாம்...' என, அறிவுரைத்து கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.
குடும்ப சூழ்நிலையை விளக்கிய அம்மா, இடைநிலை கல்வியை முடித்த பின், தையல் பயற்சிக்கு அனுப்ப திட்டமிட்டிருப்பதாக கூறினார்.
குறுக்கிட்ட ஆசிரியை, 'கவனத்தை சிதறவிடாமல் படித்தால் ஆசிரியையாக பணியாற்றும் தகுதியை பெறலாம்...' என நம்பிக்கையூட்டினார். அதை மனதில் கொண்டு ஆசிரியர் பயிற்சியை முடித்தேன். அதே பள்ளியில் பணிக்கான நேர்முகத்தேர்வில் பங்கேற்ற போது, 'எந்த பள்ளியில் படித்தாய்...' என, தாளாளர் கே.எஸ்.சுப்ரமணியபிள்ளை வினவினார். கூறியதும், மறுகேள்வியின்றி பணியில் சேர உத்தரவிட்டார்.
தற்போது, என் வயது, 51; வாழ்வில் உயர துாண்டிய ஆசிரியையை நன்றியுடன் மனதில் கொள்கிறேன்.
- பி.தேன்மொழி, திண்டுக்கல்.
தொடர்புக்கு: 80725 85967
