sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

சிகப்பழகி! (3)

/

சிகப்பழகி! (3)

சிகப்பழகி! (3)

சிகப்பழகி! (3)


PUBLISHED ON : ஜூன் 18, 2022

Google News

PUBLISHED ON : ஜூன் 18, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை: கல்வி சுற்றுலாவுக்கு ஆசிரியருடன் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த மாணவி கீதா, சுகந்த மணத்தில் மயங்கி, சுரங்க பாதைக்குள் இறங்கினாள். அங்கு சந்தித்த சிகப்பழகி, மன்னரின் இருக்கையில் அமரச் சொன்னாள். இனி -

''நீ புத்திசாலி. அதனால் தான் இங்கு வரவழைத்தேன்...'' என்றாள் சிகப்பழகி.

தயங்கியபடி, ''இது மாபெரும் மன்னர்கள் அமர்ந்திருந்த சிம்மாசனம் ஆச்சே; அதில் அமருவது மரியாதையாக இருக்காது...'' என மறுத்தாள் கீதா.

சிகப்பழகி கைகளால் ஜாடை காட்ட, அந்த அதிசயம் நிகழ்ந்தது.

கீதா தினமும் அமர்ந்து படிக்கும் நாற்காலி அங்கு தோன்றியது.

அவளை அறியாமலேயே, ''ஆஹா... என் நாற்காலியே தான்...'' என்று கூறி அமர்ந்தாள்.

சிகப்பழகி மிக நிதானமாக, ''நான் செவ்வாய் கிரகத்தை சேர்ந்தவள்; பூமியின் பல நாடுகளில் இருந்து, எங்கள் கிரகத்திற்கு ராக்கெட்டுகள் வந்தன. அப்போது தான், கிரகத்தலைவரான, செவ்வாய் நாதர், பூமியை சுற்றிப் பார்த்து, அதன் அற்புதங்களை கூற என்னை பணித்தார்... அதற்கான சக்தியையும் அருளினார்; அதன் பயனாக, உன் மன ஓட்டத்தை அறிந்து, சுரங்கப்பாதைக்குள் அழைத்தேன்...

''செவ்வாய் கிரகத்தில் இருந்து இங்கு வர ஏதுவாக, 'மார்ஸ்' என்ற ராக்கெட் கிளம்பியது. அதில் பயணித்து வந்து சேர்ந்தேன். பூமியில், பல நாடுகள் இருந்தாலும், என் ஆன்மாவை கவர்ந்தது இந்த நாடு தான்...

''இந்த ஐந்து நாள் சுற்றுலா முடியும் வரை, உன்னுடன் இருப்பேன். இந்த பூமியை பற்றி அறிந்து கொள்வேன். பின், என் தலைவர் கட்டளைபடி, ஒரு அழகிய வண்ண பறவை வரும். அதில் அமர்ந்து, என் கிரகத்துக்கு சென்று விடுவேன்...'' என்றாள் சிகப்பழகி.

''ஆஹா... என்ன அற்புதம்... நான், உண்மையில் பாக்கியசாலி. சுரங்கப்பாதைக்குள் பிரவேசிப்பதும், மன்னர் சிம்மாசனத்தை காண்பதும், அவ்வளவு எளிதல்லவே. அதை உன் வாயிலாகத்தானே கண்டு கொண்டேன்... நீ, எத்தனை அழகானவள்...'' என்றபடி நிறுத்தினாள். திடீர் என அவள் மனம் படபடத்தது.

''என்னாச்சு...'' என்றாள் சிகப்பழகி.

''பயம் அதிகரித்து விட்டது; என்னை காணாமல் ஆசிரியரும், மற்றவர்களும் பெரும் வருத்தமும், கலக்கமும் அடைந்திருப்பர். என் ஒருத்தியால் இன்ப சுற்றுலா, துன்பமயமாகி விடுமோ...''

சோகம் மேலிட அழ துவங்கினாள் கீதா.

''உன் வருத்தம் புரிகிறது... அதற்கு, நீ எப்படி பொறுப்பாவாய். நான் தானே சுகந்த வாசனையை மூட்டி, உன்னை இங்கு இழுத்து வந்தேன். சரி... கவலைப் படாதே... உன் வருத்தத்தை தீர்க்கவும் ஒரு உபாயம் செய்து விடுகிறேன்... சுதந்திரமாக இரு...'' என்றாள் சிகப்பழகி.

''என்ன செய்யப்போகிறாய்...''

சிகப்பழகி விரலை நீட்டினாள்.

ஒரு ஒளிக்கற்றை பாய்ந்தது. அது, கோவிலுக்கு வெளியே குழுமியிருந்த ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவியர் பக்கம் நின்றது.

அவ்வளவு தான்...

அங்கு நடப்பதை எல்லாம் கண்டாள் கீதா.

அங்கு...

ஆசிரியரிடம் ஓடி வந்தான் குகன். அவன் முகத்தில் அச்சத்தால் ஏற்பட்ட வியர்வை முத்துக்கள் படிந்திருந்தன.

''சார்... சார்...''

குரலில் பதற்றம் தெரிந்தது.

மாணவர்கள் கவனம் இப்போது, அவன் பக்கம் திரும்பியது.

''என்ன குகன்... ஏன் இந்த பதற்றம்...''

வினவினார் ஆசிரியர்.

''ஐயா... கீதாவை காணவில்லை...''

''காணவில்லையா... என்ன உளறுகிறாய்...''

ஆசிரியர் அச்சம் கலந்த குரலில் கேட்கவும், மாணவ, மாணவியர், 'கீதா எங்கே' என தேட ஆரம்பித்தனர்.

''ஐயோ... சிகப்பழகி... எல்லாரும் தேடுகின்றனர். ஆசிரியர் அதிர்ந்து விட்டாரே... அது பெரும் ஆபத்தாச்சே. இப்போது என்ன செய்வேன்...'' என்று அழுதாள் கீதா.

அவள் கண்ணீரை துடைத்து, ''இப்போது பார்...'' என்றாள் சிகப்பழகி.

அங்கு -

''என்னடா சொல்ற நீ...'' என்றார் ஆசிரியர்.

கீதா சுரங்கத்தில் இறங்கிய விபரத்தை சொன்னான் குகன்.

அச்சத்தில், அவன் உடல் நடுங்கியது. அனைவரும் திகிலுடன் நின்றிருந்தனர்.

''கீதா... கீதா...''

உரக்க அழைத்தார் ஆசிரியர் நம்பெருமாள்.

''இதோ வந்துட்டேன்...''

அங்கு கீதா போல் ஒருத்தி வந்தாள்.

கோபத்துடன், ''எங்கம்மா போனாய்... ஏதோ சுரங்கப்பாதைக்குள் சென்று விட்டதாக குகன் கூறினான். நானும், பதறிப் போய் விட்டேன்...'' என்றார் ஆசிரியர்.

''கழிப்பறைக்கு சென்றிருந்தேன் ஐயா...'' என்றாள் கீதா போல் தோன்றிய பெண்.

''சரி... சரி...'' என்றார் ஆசிரியர்.

யாரும் எதிர் கேள்வி கேட்க முடியவில்லை.

கீதாவை போல் இருந்தவளை அமைதியுடன் பார்த்தனர்.

அந்த காட்சியை நம்பவில்லை குகன்.

ஆனால், 'இப்போது, என்ன சொன்னாலும் யாரும் கேட்கப் போவதுமில்லை' என்று புரிந்து கொண்டான். ஆனால், 'இந்த கீதா யார்... இவள் எப்படி இங்கு வந்தாள். இதெல்லாம் தனியாக ஆராய்ந்து, கண்டு பிடிக்க வேண்டும்' என்று முடிவெடுத்தான்.

அவன் எண்ண ஓட்டத்தை அளவெடுத்தது போல், விழி விலகாமல் பார்த்தபடி நின்றாள், கீதா வடிவிலிருந்தவள்.

அது, அவனுக்குள் பயத்தை ஏற்படுத்தியது.

- தொடரும்...

ஜி.சுப்பிரமணியன்







      Dinamalar
      Follow us