PUBLISHED ON : ஆக 27, 2022

ஆகஸ்ட் 31, விநாயகர் சதுர்த்தி!
விநாயகருக்கு, கொழுக்கட்டை என்றால் உயிர். அதை படைத்து, மறைத்து எடுத்து சாப்பிடும் விரத முறை ஒன்றை கிராமங்களில் கடைப்பிடிக்கின்றனர் பெண்கள்.
கொழுக்கட்டை போல, இதுவும் இனிமை மிக்க கதை...
கிராமத்தில் நெசவுத்தொழிலாளி ஒருவர் வசித்தார். அவருக்கு, ஒரு பெண் உட்பட, எட்டு பிள்ளைகள். பெண்ணின் பெயர் கவுரி. தாய் இறந்து விட்டதால் ஏழு அண்ணன்களையும், தந்தையையும் பொறுப்பாக கவனித்துக் கொண்டாள்.
குடும்பத்தில் ஓரளவு தான் வருமானம் வந்தது. அதில் அனைவருக்கும் சோறு கொடுத்து, மிஞ்சியதை குடித்து வாழ்ந்தாள் அந்த பெண். தெய்வபக்தி மிக்கவள்.
அவள் வசித்த கிராமத்தில் ஒரு மரத்தடியில் பிள்ளையார் மட்டுமே இருந்தார். அவர் மீது அதீத பக்தி கொண்டிருந்தாள். அவரை நண்பர் போலவே கருதினாள்.
எந்த பிரச்னை வந்தாலும், பிள்ளையார் முன் அமர்ந்து பேசுவாள்.
'பிரச்னையை சொல்லியாயிற்று... மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்' என, உறுதியாக நம்பி வந்தாள்.
அந்த கிராமத்துக்கு வந்தார் அவ்வையார். அவரது கண்ணில் பட்டாள் கவுரி. அப்போது விநாயகர் முன் அமர்ந்து, ஏதோ ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
'எவ்வளவு நம்பிக்கையுடன் செயல்படுகிறாள் இந்தப் பெண். இவளது அலாதி பக்திக்கு ஏதேனும் நன்மை செய்தே ஆக வேண்டும்' என்று எண்ணியபடி, 'பிள்ளையாரிடம் என்ன பேசிக் கொண்டிருந்தாய்...' எனக் கேட்டார் அவ்வையார்.
குடும்பக் கதையை முழுதும் தெரிவித்த கவுரி, 'திருமணம் என்பது எனக்கு கனவாகவே இருக்கிறது. அந்த கவலையை சொல்லி தீர்வு கேட்டேன். அவரிடம் பேசும் போது, என் தாயிடம் பேசுவது போல் எண்ணுகிறேன்...' என்றாள்.
அவள் நிலைகண்டு வருந்திய அவ்வையார், 'விநாயகனே, உன்னை தாயாகப் பார்க்கும் இந்த குணவதிக்கு நல் வாழ்வைக் கொடு...' என பிரார்த்தித்தார்.
பின், 'நான் சொல்லும் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை கொஞ்சம் அரிசி மாவில், சிறிது உப்பு மட்டும் சேர்த்து கொழுக்கட்டை அவித்துக் கொள். அதை விநாயகருக்கு படைத்த பின் சாப்பிடு. அருள் கிடைக்கும்...' என நம்பிக்கை ஊட்டினார் அவ்வையார்.
'என் வீட்டில், ஒன்பது பேர். அத்தனை பேருக்கும் கொழுக்கட்டை செய்ய மாவு இல்லையே...'
கவலையை வெளிப்படுத்தினாள் கவுரி.
'அப்படியானால் அனைவரும் துாங்கியதும், இரவில் விரதத்தை கடைபிடி. இதோ... கொஞ்சம் நெல் இருக்கிறது. இதை அரிசியாக்கி, மாவு இடித்து ஆண்கள் கண்ணில் படாமல் கொழுக்கட்டை அவித்து படைத்து சாப்பிடு. இது நல்ல வாழ்வைத் தரும்...'
நம்பி விரதத்தை கடைபிடித்தாள் கவுரி.
அன்று, பணக்கார இளைஞன் துணி வாங்க கவுரி வீட்டிற்கு வந்தான். அவள் அன்பும், பண்பும் அவனைக் கவர்ந்தது. அவளை திருமணம் செய்து கொண்டான். ஏழையாய் இருந்தவள் பணம் படைத்தவளாகி விட்டாள். இது தான் அந்த புராணக் கதை.
இந்த விரதத்தை, 'அவ்வையார் விரதம்' என்பர். நல்வாழ்வு அமைய, தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது. விரதமிருக்கும் பெண்களிடம், 'ஒளித்து வைத்து தின்றால் வயிறு வலிக்கும்...' என்று ஆண்கள் கேலி பேசுவதும் வாடிக்கையாக நடக்கிறது.
தி. செல்லப்பா
