PUBLISHED ON : மே 25, 2018

அக்காலத்தில், ஐரோப்பியர்கள், கிழக்கிந்திய தீவுகளை காணக் கிளம்பினர். அமெரிக்காவையும், மேற்கு இந்திய தீவுகளையும் கண்டனர். ஆனால், நறுமணப் பொருட்கள் விளையும், கிழக்கிந்தியத் தீவுகளுக்கு, மேற்கு முகமாக கடல் வழியைக் கண்டுபிடிக்கபடவில்லை.
ஐரோப்பிய உணவுகள், 'சப்'பென்று இருந்தன. உணவுக்கு சுவை கூட்டும், மிளகு, ஏலம், லவங்கம், கிராம்பு போன்ற மசாலா பொருட்களால் சுவை கூடியது; ஆனால், இவற்றின் விலை படு பயங்கரம்.
நறுமணப் பொருட்கள் விளையும் தீவுகளை அடைவதில் வெற்றி கண்டார், ஒரு போர்த்துகீசிய மாலுமி. அவர் தான், பெர்டினாண்ட் மெகல்லன். அமெரிக்க கண்டத்துக்கு அப்பால், மேற்கே உள்ள கடலுக்கு, 'பசிபிக்' என்று பெயர் சூட்டியவரும் இவர்தான்.
ஐரோப்பிய கண்டம், போர்ச்சுக்கலில், 1480ல் பிறந்தவர்; நெஞ்சுரம் கொண்ட தீரர். இளமைப் பருவத்தை, மேற்கு இந்திய தீவுகளில் கழித்தார். அங்கே ஒரு விபத்தில் படுகாயமடைந்து முடமானார். எஞ்சிய வாழ்நாளை, நொண்டியபடியே கழித்தார்.
மேற்கிந்திய தீவுகளில் கைதியாக இருந்த ஒருவன், இவரது கப்பலுக்கு, தப்பி வந்தான். அத்தீவுகளில் இருந்த புதையல் பற்றிய வரைபடத்தை திருடி வந்து மெகல்லனிடம் கொடுத்தான். அதை அடைய திட்டமிட்டார்.
இவர் மீது, பொய்யான திருட்டு குற்றம் சாட்டியது போர்ச்சுக்கல் அரசு. இதனால், ஆத்திரம் அடைந்த மெகல்லன், பிறந்த மண்ணை உதறி, ஸ்பெயின் நாட்டில் குடியேறினார்.
ஸ்பெயின் மன்னர் சார்லஸிடம், கிழக்கிந்திய தீவுகளுக்கு செல்வது பற்றி விவரித்தார். அட்லாண்டிக் கடலைக் கடந்து, மேற்கு திசையில், பயணித்து, கிழக்கிந்திய தீவுகளக்கு செல்ல முடியும் என்றார். வசதிகள் செய்து தந்தால், காணும் தீவுகளை ஸ்பெயின் நாட்டின் உடைமையாக்குவதாக வாக்களித்தார். மன்னர் சார்லஸ் இணங்கினார்; ஒப்பந்தம் போட்டனர்.
உலகம் இவ்வளவு பெரியது என்று, மெகல்லன் காலத்தில் யாருக்கும் தெரியாது. அமெரிக்க கண்டத்துக்கு மறுபக்கம் ஒரு கடல் இருக்கிறது. அதை, சுலபமாக கடந்து, கிழக்கு இந்திய தீவுகளுக்கு போய் விடலாம் என்றே நம்பினர்.
ஒப்பந்தபடி, சார்லஸ் மன்னர், மெக்கல்லனுக்கு, ஐந்து கப்பல்களை வழங்கினார். அதில், 'டிரினி டாட், சான் அண்டோனியோ' இரண்டும், 130 டன் எடையுடையவை. டிரினிடாட் தான் கொடி கப்பல். அதற்கு மெகல்லன் தலைமை ஏற்றிருந்தார். கன்சப்ஷன், விக்டோரியா கப்பல்கள், 90 டன் எடையுடையவை. ஐந்தாவது கப்பல் சாண்டியாகோ, 60 டன் எடையுள்ளது.
ஐந்து கப்பல்களில், 280 மாலுமிகள். அதில், 178 பேர் ஸ்பானியர், 40 பேர் போர்த்துகீசியர், 30 பேர் இத்தாலியர் மற்றும் பிரெஞ்சு, ஜெர்மன், கிரீக் தேசத்தவர், ஆங்கிலேயர், நீக்ரோக்கள், மலேயாக்காரர்கள் இருந்தனர். நறுமணத்தீவு வாசிகளோடு பேசி, செயல்படவும் பணியாளர்கள் இருந்தனர்.
பல ஆயிரம் கிலோ பிஸ்கட்டுகள், பன்றி இறைச்சி, பாலாடைக் கட்டி, எண்ணெய், கருவாடு, வெடி மருந்து, பீன்ஸ், பட்டாணி, மாவு, தேன், வெங்காயம், உலர்ந்த அத்திப்பழம், உப்பு ஆகியன கடல் பயணத்துக்கு வழங்கப்பட்டன.
ஐரோப்பா கண்டம், ஸ்பெயின் நாட்டு துறைமுகமான, ஸான்துகார் டி பாரமோடாவிலிருந்து, ஆகஸ்ட் ௧0, 1519ல், மெகல்லன் புறப்பட்டார். மெகல்லன், தன்னை ஸ்பெயின் குடிமகனாக மாற்றிக் கொண்டாலும், போர்ச்சுகீசியர் என்பதை, மாலுமிகள் மறக்கவில்லை. நான்கு கப்பல்களின் கேப்டன்களும் ஸ்பானியர்கள்; கொடிக் கப்பலின் தலைவர் மெகல்லன்.
மூன்று கப்பல்களின் கேப்டன்கள், செயின்ட் ஜூலியன்ஸ் துறைமுகத்தில் கலகம் விளைவித்தனர். இரு கப்பல்கள் மட்டுமே மெகல்லனுக்கு விசுவாசமாக இருந்தன; கலகத்தை திறமையாக சமாளித்தார் மெகல்லன்.
மே மாதக் கடைசியில், சாண்டியாகோ கப்பல், தென் திசையில் உள்ள கடல் பகுதியை ஆராய முற்பட, புயலில் நாசமாயிற்று. மீதமுள்ள நான்கு கப்பல்களும் ஆகஸ்ட் இறுதியில் தான் பயணப்பட முடிந்தது.
அப்போதும் பயங்கர புயல் வீசியதால் கப்பல்களை, சாண்டா குரூஸ் நதி முகத்துவாரத்திலேயே நிறுத்தினர். இந்த நிலையில், தென் அமெரிக்காவுக்கு மேற்கே பரந்து கிடக்கும் கடலில், செல்ல முடிவு செய்தார் மெகல்லன்.
கப்பல்கள், 1520 நவம்பரில் குறுகலான ஜலசந்திக்குள் புகுந்தன. இரு பக்கமும், நெடுதுயர்ந்த செங்குத்தான மலைகள்... இரவுவேளையில், அந்த மலைகளில் தீக்கங்குகள் நர்த்தனமாடுவதை கண்டு நடுங்கினர் மாலுமிகள். அது, செவ்விந்தியர்கள் இரவில் கொளுத்தும், 'காம்ப்பயர்' என்று இவர்களுக்கு தெரியாது.
இதைக் கண்டு, பீதி அடைந்த சான் அண்டோனியோ காப்பல் பைலட், கப்பலின் கேப்டனை கைது செய்து, கப்பலை ஸ்பெயினுக்கு திருப்பி செலுத்தி போய் விட்டார்.
என்ன நடந்தது என்பதை மெக்கல்லன் அறியும் முன், அந்த கப்பல் வெகு தொலைவிற்கு போய் விட்டது. அந்த கப்பலில் தான், உணவு பண்டங்கள் மற்றும் மருந்து பொருட்கள் இருந்தன.
மெக்கல்லன், மூன்று கப்பல்களோடு, ஜலசந்தியிலிருந்து எல்லையற்று பரந்து கிடந்த கடலுக்கு வந்தார். 1520 நவம்பர், 28ம் தேதி மெகல்லனும், அவரது ஆட்களும், மூன்று கப்பல்களில் ஜலசந்தியின் மறுபக்கத்தை அடைந்தனர். எல்லையற்று பரந்து கிடந்தது அமைதியான கடல். அக்கடலுக்கு, அமைதி என்று பொருள் தரும், 'பசிபிக்' என்ற பெயரிட்டார் மெகல்லன். பசிபிக் மகா சமுத்திரத்திற்கு அப்பெயர் வந்தது இப்படித் தான்!
இந்நிலையில், கப்பலில் உணவில்லை; பசி, ஏக்கம், துக்கம், வேதனையோடு, 98 நாட்கள் பசிபிக் கடலில் பயணம் செய்தனர். பலர், 'ஸ்கர்வி' நோயினால் மாண்டனர். குடிக்க சுத்தமான நீர் இல்லை. படாத துன்பமெல்லாம் பட்டு, பின், மரியானாஸ் என்ற லாட்ரோனஸ் தீவுக் கூட்டத்தை அடைந்தனர்.
அங்கு, சிறிது உணவும், குடி நீரும் சேமித்து தொடர்ந்து பயணப்பட்டனர். பலநாள் பயணத்துக்கு பின், பிலிப்பைன்ஸ் தீவுகளை அடைந்தனர்.
ஸெபு தீவு வாசிகளின் தலைவன், இவர்களை வரவேற்றான். கவுரவிக்க விருந்தளித்தான்; நல்ல உணவை சாப்பிட்டு, பல மாதங்களான மெக்கல்லனும், மாலுமிகளும், தீவு வாசிகள் அளித்த விருந்தில், புதிய பழங்களையும், சுவை மிக்க இறைச்சி உணவுகளை ரசித்து உண்டு மகிழ்ந்தனர்.
ஸெபு தீவுத் தலைவன், விருந்தின் போது, தங்கள் பக்கத்து தீவான, மாடான் தீவு வாசிகளோடு, போரில் ஈடுபட்டிருப்பதாக கூறினான்.
விருந்தோம்பலில் மகிழ்ந்த மெகல்லன், போரில் உதவுவதாக கூறினார். வாக்களித்தபடியே, ஸெபு வீரர்களோடு, தன் மாலுமிகளை முற்றுகைக்கு உதவுமாறு அனுப்பினார். அந்த தீவு வாசிகளை சாதாரணமாக எண்ணி விட்டார், மெகல்லன்.
புற்றிலிருந்து கிளம்பும் ஈசல்களை போல, ஏராளமான சுதேசிகள் ஆயுதங்களுடன், எதிர்ப்பட்ட போது, மெகல்லன் பிரமித்து போனார்.
அந்த போரில், தீவு வாசிகளால், மெகல்லன் பரிதாபமாக கொல்லப்பட்டார்; விருந்தோம்பலுக்கு நன்றி செலுத்த, உதவ போய், தன்யிரையே இழந்தார்.
வழிநடத்திய கப்பல்களில் ஒன்று, உலகை முதன்முதலில் சுற்றி வந்து, சாதனை புரியப் போகிற உண்மையை அறியாமலேயே, அவரது ஆவி பிலிப்பைன்ஸ் தீவுகளில் பிரிந்தது.
இன்னும் பரிதாபம் என்னவென்றால், யாருக்கு உதவி செய்ய போய், தன் உயிரை பலி கொடுத்தாரோ, அந்த ஸெபு தீவின் தலைவன், தன் தீவுக்கு வந்த ஐரோப்பியர்களால் தான், தனக்கு தோல்வி ஏற்பட்டதாக கருதி, அவர்களை கொன்றான்.
பலர் மாண்டனர். 260 பேருடன், ஸ்பெயினிலிருந்து கிளம்பியதில் எஞ்சியது, 114 பேர் தான்.
எஞ்சி இருந்த, இரண்டு கப்பல்களுடன், ஒவ்வொரு தீவையும் தொட்டு சென்றனர். யாரும் தீவுகளில் கரை இறங்கவில்லை. தீவு வாசிகளிடம் ஏற்பட்ட பயத்தால், கடைசியாக, ஸ்பைஸ் தீவுகளை அடைந்தனர். உலகில், பாதியை சுற்றி வந்தாயிற்று.
டிரினி டாட், விக்டோரியா இரு கப்பல்களிலும், ஏராளமான நறுமணப் பொருட்களை ஏற்றி தாயகம் திரும்பினர்.
சோதனை அவர்களை விட்டு விலக வில்லை; சிறிது தொலைவு போனதுமே, டிரினிடாட் கப்பலில் ஓட்டை ஏற்பட்டு கடல் நீர் புக ஆரம்பித்தது. அந்த கப்பலும் பயணத்துக்கு பயனற்றதாகி விடவே, விக்டோரியாக கப்பலில் தாயகம் திரும்பினர்.
இந்து மகா சமுத்திரம் வழியே, செபாஸ்டியன் எல்கனோ என்பவரின் தலைமையில், ஆப்ரிக்காவின் நன்னம்பிக்கை முனையைக் கடந்து, அட்லாண்டிக் கடலில் புகுந்தது விக்டோரியா கப்பல்.
களைப்பு, பட்டினியால் சிலர் வெர்டி தீவில் கரையிறங்கினர். அவர்களை போர்ச்சுகீசிய அரசு கைது செய்தது. அத்தீவு அவர்களுக்கு சொந்தமானது. ஆனால், கப்பலை விட்டு இறங்காதவர்கள் தொடர்ந்து பயணப்பட்டு, செப்., 8, 1522ல், சான்லுகார் டி பார்மடா என்னும் துறைமுகத்தில், நங்கூரமிட்டு நின்றனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், இதே துறைமுகத்திலிருந்து தான், மெகல்லன், ஐந்து கப்பல்களோடு கீழ்த்திசை நாடுகளுக்கு கிளம்பினார். அவர் திரும்பாவிட்டாலும், அவர் நடத்தி சென்ற கப்பல்களில் ஒன்றான, விக்டோரியா முதன் முதலில், உலகை சுற்றி வந்த பெருமையை பெற்றது.
விக்டோரியா, கப்பலில் கொண்டு வந்த நறுமணப் பொருள் சரக்கு, அந்த பயணத்திற்கான செலவை சரிக் கட்டியது. ஆனால், நறுமணத் தீவுகளுக்கு, மேற்கு திசை மூலம் போவது நீண்ட பயணம் ஆபத்தானது, லாபமில்லாதது என்ற முடிவுக்கு வந்தனர்.
உலகம் உருண்டையானது தான் என்பது உறுதியாயிற்று; புதிய நாடுகளை காண்பது என்ற நோக்கில், மெகல்லனின் பயணம் மகத்தான வெற்றி பெற்றது.
புதிய கடல்களும், நாடுகளும் கண்டு பிடிக்கப்பட்டன. உலகை பற்றிய அறிவை, மனிதன் பெருக்கி கொள்ளவும், இப்பயணங்கள் வழி வகுத்தன.
