
மந்த்ராவைத் தெரியுமா உங்களுக்கு? மாஜிக் மந்த்ராவை தெரியாதவர்களே இருக்க முடியாதே! பரவாயில்லை. நான் மந்த்ராவைப் பற்றிக் கூறுகிறேன்.
கேரள மாநிலத்தவர்களான அவர்கள் குடும்பமே மாந்திரீகத்தில் புகழ்பெற்றது. முப்பாட்டனார் மாதவன்குட்டி, அந்தக் காலத்தில் பிரபலமான மந்திரவாதி. ராஜ சபையில் அரசரால் கவுரவிக்கப்பட்டவர்.
மாதவன்குட்டியின் மகன் கேசவன், மந்த்ராவின் தாத்தா. அவரும் தன் தந்தையின் மந்திர தந்திரங்களைக் கற்றுக் கொண்டு, புகழோடு விளங்கினார். ஆனால், காலப்போக்கில் அந்நிய நாகரிகம் வளர, வளர மந்திரங்களில் மக்களுக்கு ஈடுபாடு குறையவே, அதன் மவுசும் குறையலாயிற்று. கேசவன் குட்டியின் மகன் சங்கர். அதாவது, மந்த்ராவின் அப்பா. இந்த மந்திர மாயங்களின் பக்கமே போகவில்லை. ஏன்? அவருக்கு இது பிடிக்கவே இல்லை.
அவர் ராணுவ அதிகாரி ஆனார். அவருடைய ஒரே பெண்தான் மந்த்ரா. பூர்வ ஜென்ம வாசனை என்பார்களே... அதுபோல, மந்திர தந்திரங்களில் ரொம்ப ஈடுபாடு காட்டலானாள் மந்த்ரா. தன் பேத்தியை உற்சாகப்படுத்தினார் தாத்தா கேசவன்.
அப்பா சங்கர் எவ்வளவோ தடுத்துக் கூறியும், மந்த்ரா கேட்கவில்லை. பனிரெண்டு வயதான மந்த்ரா, 'மாஜிக் மந்த்ரா'வாக மாறிக் கொண்டு வந்தாள். ஆனாலும் முப்பாட்டனாரைப் போலவோ, பாட்டனாரைப் போலவோ, மந்திர தந்திரங்களில் அவள் தேர்ச்சி பெற்று விடவில்லை. சின்னப் பெண்தானே! போகப் போக அவளை, மாஜிக் நிபுணியாக்கி விட நினைத்தார் அவள் தாத்தா. மாஜிக் கலைக்கு மவுசு குறைந்து போனதில் அவருக்கு வருத்தம். மாஜிக்கின் மகத்துவத்தை தன் பேத்தி மந்த்ரா மூலம், நிலை நாட்ட முடிவு செய்திருந்தார் கேசவன்குட்டி.
மந்த்ராவின் அப்பா காப்டன் சங்கர், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அது ஒரு கிராமம். அவர்கள் புராதன வீட்டுக்கு அருகே ஒரு வாய்க்கால். வாய்க்காலின் கரையில் மந்த்ராவின் தாத்தாவும், பாட்டியும் ஒரு பலா மரத்தின் அடியில் அமர்ந்திருந்தனர். மந்த்ரா வாய்க்கால் கரையோரமாக நின்று, அப்பா நீரில் குதித்து நீச்சலடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
'காஷ்மீர் பள்ளத்தாக்குப் போல, இந்தப் பாலக்காடு கிராமத்து வாய்க்கால் நீர் உறைந்து போனால் எப்படி இருக்கும்?' என்று கண்களை மூடிக் கொண்டு கற்பனையில் மூழ்கினாள் மந்த்ரா. அவள் வாய், தாத்தா சொல்லிக் கொடுத்திருந்த மந்திரத்தை முணு முணுத்தது. அடுத்த வினாடி அவள் அப்பா, 'வீல்' என்று கத்தி, நீந்தி கரையேறினார். அவர் வாய்க்காலில் நீரை பார்த்த போது வாய்க்கால் நீர் ஐஸ் கட்டியாகி விட்டது மந்த்ராவின் மந்திரத்தினால்!
அப்பாவின் கத்தலைக் கேட்டுக் கண் விழித்த மந்த்ராவுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி... மறுபக்கம் மகிழ்ச்சி! தன் மந்திரம் பலித்து விட்டதே என்றுதான் அந்த மகிழ்ச்சி. கத்துக்குட்டி மந்திரவாதியான அவள் மந்திரங்கள், பல வேளைகளில் பலிப்பதில்லை. சில வேளைகளில் பலித்துவிடும். பேத்தியின் விளையாட்டைக் கண்டு தாத்தா சிரித்துக் கொண்டிருந்தார். அப்பாவோ வலி தாங்காமல் அலறிக் கொண்டிருந்தார்.
மந்த்ராவுக்குப் பாவமாக இருந்தது. தாத்தாவின் அறைக்கு ஓடினாள் மருந்து தயாரிக்க. அவள் தாத்தா மந்திரவாதி மட்டுமல்ல... சிறந்த மருந்துகள் தயாரிக்கும் வைத்தியரும் கூட. கலுவத்தில் பச்சிலைகளையும், பஸ்மத்தையும், வேறு சில சூர்ணங்களையும் போட்டு அரைத்துக் கொண்டிருந்தவளின் கை, கோந்து டப்பாவை துழாவி எடுத்தது. அதைப் பார்க்காமலேயே கலுவத்தில் கொட்டிக் கலக்கினாள். அடுத்த வினாடி, 'டமால்' என்று பெருத்த ஓசையோடு ஒரு வெடிச் சத்தம்! அறையிலிருந்த பொருள்கள் சிதறிப் பறந்தன. ஒரே புகை! அவள் கலுவத்தில் போட்டு கலந்தது கம் பவுடரை அல்ல... கன் பவுடரை! வெடி மருந்து வெடிக்காமல் என்ன செய்யும்!
வீட்டினுள்ளிருந்து வெடிச்சத்தமும், புகையும் வருவதைக் கண்டு மந்த்ராவின் அம்மா அரக்கப் பறக்க ஓடினாள். அங்கே மந்த்ரா பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றாள். முகமெல்லாம் கரி! உடையெல்லாம் கிழிந்து கந்தலாகித் தொங்கிற்று.
அம்மாவைக் கண்டதும், ''அப்பாவின் காயத்துக்கு மருந்து தயாரித்தேன் அம்மா! என்னவோ தெரியவில்லை அது வெடித்து விட்டது!'' என்று குழறினாள்.
''தாத்தாகிட்டே மாஜிக் கத்துக்கறேன்னு கூத்தடிக்கிறது போதாதா? மருந்து வேற தயாரிக்கணுமா? இந்த வீடு தாங்காது இல்லே, ஊரே பொறுக்காது...'' என்றாள்.
தட்டுத் தடுமாறியபடி அங்கு அப்பா சங்கர் வந்தார்.
''என்ன ஆச்சு?'' என்று கேட்டார் நிலைப் படியில் சாய்ந்து நின்றபடி.
''ஒண்ணுமில்லேப்பா... நீங்க வாய்க்காலிலே விழுந்து தலையைப் புடிச்சுட்டு உட்கார்ந்திருந்தீங்களா... அதுக்காக மருந்து...'' என்று மந்த்ரா விளக்கம் தரும்போது, அம்மா குறுக்கிட்டாள்.
''ஆமா உன்னை யார் வாய்க்கால் தண்ணீரை ஐஸ் கட்டியாக்கச் சொன்னது? இந்த அரைகுறை மந்திரம் மாந்திரீகத்தை விட்டுத் தொலைன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்?''
''மந்த்ராவோட மாஜிக்குக்கு என்னவாம்?'' என்று கேட்டுக் கொண்டே வந்தார் தாத்தா கேசவன் குட்டி, பாட்டி பின் தொடர.
''மந்திரம் போட்டு, வாய்க்கால் நீரை ஐஸ் கட்டியாக்கறது கத்துக் குட்டி மேஜிக் இல்லே, தெரியுமா?''
''போதுமே, உங்க பேத்தியோட பிரதாபம்!'' என்று தலையை தோள்பட்டையில் இடித்துக் கொண்டாள் மந்த்ராவின் அம்மா. இதற்குள், மந்த்ராவின் கையிலிருந்த டப்பாவை வாங்கிப் பார்த்த அப்பா காப்டன் சங்கர், ''ஏம்மா இதைத் தான் கலுவத்தில் போட்டு அரைத்தாயா, களிம்பு மருந்து தயாரிக்க?'' என்று கேட்டார்.
''ஆமாப்பா கம் பவுடர், கோந்துப் பொடி!'' என்றாள் மந்த்ரா
''இது கம் பவுடர் இல்லே... கன் பவுடர்; வெடி மருந்து. தாத்தா கிட்டே மாஜிக் கத்துக்கிறதை விட்டுட்டு ஒழுங்கா படிக்கக் கத்துக்கோ முதல்லே,'' என்றார்.
நிலைமையை சீராக்க முன் வந்தாள் மந்த்ராவின் பாட்டி. ''நீ ஒண்ணும் குறைப்பட்டுக்க வேணாம். இன்னிக்கே மந்த்ராவை மகாராஜா ஹைஸ்கூல்லே கொண்டு போய் சேர்த்துடச் சொல்றேன். நான் அங்கே தான் படிச்சேனாக்கும். ஆ ஸ்கூலோட பிரின்சிபாலை ஞான் அறியும். ஒரு லெட்டர் தரேன். மந்த்ரா குட்டியை உடனே சேத்துக்கும் ஆ மேடம்!'' என்றாள் பாட்டி பத்மினி.
''அதைச் செய்யுங்க முதல்லே!'' என்றாள் மந்த்ராவின் அம்மா.
''இந்தக் கிராமத்திலே இருந்துக்கிட்டு மாஜிக் அது இதுன்னு நாசமாயிட்டிருக்கா... உருப்படியா படிச்சு முன்னேறுவதற்கு வழி செய்யுங்க!''
''என் மந்த்ரா குட்டி சமத்தாக்கும். அவ மாஜிக்கும் கத்துப்பா, லாஜிக்கும் படிப்பா!'' என்றாள் பெருமையோடு பாட்டி.
மந்த்ராவை நகரத்திலுள்ள அந்தப் புகழ் பெற்ற பழைய பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டு, அங்குள்ள ஹாஸ்டலிலே அவள் தங்குவதற்கும் ஏற்பாடு செய்துவிட்டுவரும் பொறுப்பை தாத்தா கேசவன் குட்டி ஏற்றுக் கொண்டார்.
அப்பா சங்கருக்கு அடிக்கடி மாற்றல் ஆகும். ஊர் விட்டு ஊர் சென்று கொண்டே இருப்பது, வளரும் பருவத்தில் மந்த்ராவுக்கு ஏற்றதல்ல... என்பதால் தாத்தா, பாட்டியுடன் கிராமத்திலேயே அவள் இருக்கும்படியாயிற்று.
அப்பா, பாட்டி எல்லாரும் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்தனர். மந்த்ராவைப் பிரிந்து இருக்கப் போகிறோம் என்ற நினைப்பில் அவர்கள் கண்கள் ஈரமாயின.
''எந்தா மந்த்ரா குட்டி! நீ நல்லா படிச்சு டாக்டராகணும். மருந்துகளோட பேருகளெல்லாம் மனசிலாயிக்கணும் புரிஞ்சுதா?'' என்று தன் மகளின் தலையை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தார் சங்கர்.
''என்னு பொன்னுக்குட்டி!'' என்று கட்டி அணைத்துத் தன் அருமைப் பேத்தியின் கன்னத்தில் முத்தமிட்ட பத்மினிப் பாட்டி, ''நீ இதுக்காக மாஜிக்கெல்லாம் மறந்துட வேண்டாம். நம்மோட பரம்பரைச் சொத்தாக்கும் அது. தாத்தா உனக்கு துணை இருப்பார்!'' பாட்டியின் விழிகளில் ஒரு குறும்பு ஒளி வீசியது. மந்த்ரா எல்லாரிடமும் பிரியாவிடை பெற்றுக்கொண்டு கிளம்பினாள்.
பாட்டி பத்மினிக்கு, தான் அந்தக் காலத்தில் படித்த மகாராஜா கான்வென்ட் பள்ளிக்கூடம் இப்போது எப்படி மாறி இருக்கிறது என்ற விஷயம் தெரியாது. காலப்போக்கில் அது சாதாரணப் பள்ளியாக செயல்பட முடியாமல், ஒரு விசேஷப் பள்ளிக்கூடமாக மாறியிருந்தது. என்ன விசேஷம் தெரியுமா?
பொல்லாத குழந்தைகளின் சீர்திருத்தப் பள்ளியாக மாறியிருந்தது அந்தக் கான்வென்ட். சிறுவயதிலே திருட்டுப்புத்தி, அடங்காப்பிடாரித்தனம், மூர்க்க குணம், முரட்டுத்தனம் கொண்ட மந்த்ரா வயதுடைய சிறுமிகளைச் சீர்திருத்தும் பள்ளிக்கூடமாக விளங்கியது அது. வசதிகளைக் கொண்டது. அதே சமயம் கடுமையான கட்டுப்பாடுகளையும் கொண்டது. வித்தியாசமான மாணவிகளை அடக்கி ஆளும், ஆசிரியைகளும் வித்தியாசமானவர்களாகவே இருந்தனர். சிறைச்சாலைக் காவலர்களைப் போல. பாவம் மந்த்ரா இந்தச் சூழ்நிலை தெரியாமல் அங்கு படிக்கப் போகிறாள்! ஆனால், அங்குள்ள முரட்டுத்தனம், மூர்க்க குணம் படைத்த மாணவிகளைச் சமாளிக்க முடியும் மந்த்ராவால். அவளிடம் மாஜிக் இருக்கிறதே!
அந்தப் பள்ளியில் சேர விசேஷ அனுமதி தேவைதான். ஆனால், பத்மினிப்பாட்டியின் மாமனார் மாதவன்குட்டி, ஆஸ்தான மந்திரவாதியும், மருத்துவரும் ஆனதினால், அவர்கள் குடும்பத்திற்கு நல்ல மதிப்பு இருந்தது. மந்த்ரா மற்ற பெண்களிடமிருந்து ஏதோ ஒரு வகையில் மாறுபட்டிருக்கிறாள். அதைத் தெரிவிக்கத் தயங்கியே இந்தப் பள்ளிக்கு அனுப்புகின்றனர் என்று கருதி, மந்த்ராவைச் சேர்த்துக் கொண்டனர்.
- தொடரும்.