தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாஜிக் மந்த்ரா! (9)

மாஜிக் மந்த்ரா! (9)

மாஜிக் மந்த்ரா! (9)


PUBLISHED ON : டிச 27, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 27, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: மந்த்ரா லைப்ரரியில் அமர்ந்திருந்தாள். ஹாஸ்டலை விட்டு திருட்டுத் தனமாக வெளியே சென்று சாப்பிட வந்தனர் வடிவும், மங்காத்தாவும். இனி-



கட்டடங்களின் பின்பக்கமாக, செடிகளின் மறைவில் பதுங்கிப் பதுங்கி வந்து கொண்டிருந்தனர்.

மந்திர, மாயாஜால, மகேந்திர ஜால, மாஜிக் புத்தகங்களையெல்லாம் புரட்டிய மந்த்ராவுக்கு கண்கள் வலித்தன; கொட்டாவி வந்தது.

''இன்றைக்கு இவ்வளவு போதும். இன்னொரு நாள் வந்து மற்றதைப் பார்க்கலாம்,'' என்று உடலை முறுக்கி, கைகளை உயர்த்தி சோம்பல் முறித்துக் கொண்டவள், தான் எடுத்த புத்தகங்கள் மேஜை மீது குவியலாகி இருப்பதைக் கண்டு, ''அடக்கடவுளே, இத்தனை புத்தகங்களை யும் மறுபடி ராக்கில் அதனதன் இடத்தில் வைத்தாக வேண்டுமே!'' என்று சோம்பல்பட்டவளிடம் இருந்து ஒரு அலுப்புக் கொட்டாவி வெளிப்பட்டது.

''மந்திரம் போட்டு இந்தப் புத்தகங்களைத் தானாக அதனதன் இடத்தில் போய் உட்காரும் படி செய்கிறேன்!'' என்று ''ஓம் ஹ்ரீம்... க்ரீம்!'' என்று உச்சரிக்கலானாள்.

அதே வேளையில் மங்காத்தாவும், வடிவும் பதுங்கிப் பதுங்கி லைப்ரரிக் கட்டடத்தில் மந்த்ரா அமர்ந்திருந்த ஜன்னல் அருகே வந்தனர். அலமாரியில் அதனதனிடத்திற்குப் போகும்படி புத்தகங்களுக்கு மந்திரம் போட்டாளில்லையா? அதில் ஏதோ கோளாறு. மேஜையிலிருந்து கிளம்பிய புத்தகங்கள், அலமாரிக்குப் போகாமல் ஜன்னல் வழியே வெளியே பறக்கலாயின.

அதைக் கண்ட மந்த்ரா பதறிப்போய், ''இரு இரு, நான் பாதி மந்திரம்தானே சொல்லி இருக்கிறேன். நீங்கள் வெளியே போகாதீர்கள்... புத்தக அலமாரிக்கல்லவா...'' புத்தகங்களோடு பேசினாள் மந்த்ரா.

ஆனால், அவள் மந்திரம் போட்டதும் கிளம்பிய புத்தகங்கள் நிற்கவில்லை. ஒளிந்து, ஒளிந்து வந்து கொண்டிருந்த மங்காத்தா, வடிவின் தலைகளில் பொத்பொத் தென்று போய் விழுந்தன அந்தப் புத்தகங்கள். இப்படி ஒரு திடீர்த்தாக்குதலை எதிர்பாராத மங்காத்தாவும், வடிவும் 'ஆய் ஊய்' என்று கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள் மந்த்ரா. இது அவள் வேலைத்தனம்தான் என்பதை அறிந்த மங்காத்தாவுக்கு வந்ததே ஆத்திரம். அவள் சட்டையைப்பிடித்து வெளியே இழுத்தாள்.

''என் மீது புத்தகங்களை வீசித் தாக்கும் அளவுக்கு உனக்கு துணிச்சல் வந்து விட்டதா?'' என்று கேட்டு அவள் சட்டையை முறுக்கினாள்.

''வேணுமின்னு செய்யலே... ஒரு தவறு நடந்து போச்சு... புத்தகங்களை தானாக...!'' என்று குழறினாள் மந்த்ரா.

''அவளை இந்த புத்தகங் களாலேயே நாலு மொத்து மொத்துடி மங்காத்தா...'' என்று தலையை தடவிக் கொண்டே ஆத்திரப் பட்டாள் வடிவு. அவளுக்குப் புத்தகத் தாக்குதல் கொஞ்சம் அதிகம்! மங்காத்தாவின் விழிகளில் விஷமம் தெரிந்தது.

'இவளை அடிக்க வேண்டாம். இவளாலே நமக்குக் காரியம் ஆக வேண்டியிருக்கு!' என்று தோழியைப் பார்த்துக் கண் சிமிட்டியவள், மந்த்ராவிடம், ''நீயும் எங்க கூட வரே!'' என்று கூறியபடி மந்த்ராவின் சட்டைப் பிடியைத் தளர்த்தாமல் இழுத்துக் கொண்டு நடந்தாள்.

''எங்கே வரச்சொல்றே..?'' என்று கேட்டாள் மந்த்ரா.

''பேசாம எங்க கூட வா, எங்கேன்னு தெரியும்!'' என்று மந்த்ராவை இழுத்துக் கொண்டு பள்ளியின் மேற்குக் கோடிக்கு போனாள் மங்காத்தா. அங்கு காம்பவுண்டு சுவர் இடிந்து போய், மரப்பலகைகளைத் தடுப்பாக்கி, அடைத்திருந்தனர். அந்தப் பலகை களும் பலமிழந்து உளுத்துப்போன நிலையில் ஒட்டிக் கொண்டிருந்தன. மங்காத்தாவின் முரட்டு இழுப்பில் ஒரு பலகை கையோடு புட்டுக் கொண்டு வந்து விட்டது.

மந்த்ராவை பார்த்து, ''ம்'' என்றாள் மங்காத்தா, பலகை அகற்றப்பட்ட இடைவெளியை காட்டி.

''நானுமா? நான் வரமாட்டேன். இது குற்றம்!'' என்று முரண்டு பிடித்தாள் மந்த்ரா.

''அது எனக்குத் தெரியும். விதிகளை மீறுவதில்தான் விறுவிறுப்பு இருக்கிறது. குற்றம் புரிவதில்தான் குஷி இருக்கிறது!''

''இது <உன் தத்துவம். எனக்கு ஒத்து வராது!'' ஆனால், மந்த்ராவால், மங்காத்தாவோடு அதிக நேரம் வாதாட முடியவில்லை. மங்காத்தாவின் அசுர பலம், மந்த்ராவை ஒரே அமுக்காக அமுக்கி இடைவெளி வழியே பள்ளிக்கு வெளியே கொண்டு வந்து விட்டது.

''நாம் மாட்டிக் கொண்டால் தண்டனையை எங்களோடு சேர்ந்து நீயும் அனுபவிக்கப் போகிறாய்... குற்றம் செய்யத் தூண்டியவளாக...''

மந்த்ராவுக்கு எரிச்சலும், ஆத்திரமும் வந்தது. ஆனால், இந்த ராட்சஸியோடு யார் போராடுவது? அதோடு இந்த குண்டு வடிவுக்கரசி வேறு, பேரைப்பாரு வடிவாம் வடிவு.

என்ன செய்யலாம் இந்த அடாவடிக்காரிகளிடம் இருந்து தப்ப என்ன மாஜிக் செய்யலாம் என்று மவுனமாக அவர்களுடன் நடந்து கொண்டிருந்தாள். கடை வீதியில் ஒரு பட்சணக் கடையின் அருகே வந்ததும், மங்காத்தா கேட்டாள், ''ஏய் ஏதாவது காசு வைத்திருக்கிறாயா? இல்லேன்னு பொய் சொல்லித் தப்பிக்க நினைக்காதே!''

''இருக்கு ஐம்பது ரூபாய். சோப்பு வாங்குவதற்காக வைத்திருக்கிறேன்...'' என்றாள் மந்த்ரா.

''சோப்புக்கு என்ன அவசரம் இப்போ? சோப்பில்லாம குளி... அந்த பட்சணக் கடைக்குப் போய் ஐம்பது ரூபாய்க்கு பக்கோடா, பூந்தி எல்லாம் வாங்கிட்டு வா... உடனே ஓடி வரவேண்டாம் பட்சணக் கடைக் காரரோடு பேச்சுக் கொடு... ஊர்க்கதை பேசு... நாங்க அந்த முனையிலே இருக்கோம். நிதானமா வா... ஆனா, பள்ளிக்கூடத்துக்கு ஓடிப்போயிடலாம்னு திட்டம் போடாதே... போட்டியோ...'' என்று மங்காத்தா ஒருமுறை முறைத்தாள் பத்ரகாளியைப் போல.

மங்காத்தாவும், வடிவும் அந்த மிட்டாய்க் கடையை ஒட்டியிருந்த சந்தில் புகுந்து மறைந்தனர். அவர்கள் போவதையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் மந்த்ரா.

'இவர்கள் என்னை விட்டு விட்டு எங்கே போகின்றனர். ஓசியில் பட்சணம் கிடைக்கும் போது அதைத் தின்னாமல் அப்படியென்ன வேலை? பட்சணக் கடைக்காரரிடம் வெட்டிப் பேச்சுப் பேசி பொழுது போக்க வேண்டுமாம். எதற்காக? இப்படி வினாக்களை எழுப்பிக் கொண்ட மந்த்ரா அதற்கான விடைகளை அறிந்து கொள்ளுவதில் தீவிரமானாள். பட்சணக் கடைக்குப் போகவில்லை. மங்காத்தாவின் கட்டளைப்படி பக்கோடா வாங்கவில்லை. தானும் சந்தில் புகுந்து, அவர்களைப் பின் தொடரலானாள்.

மங்காத்தாவுக்கும், வடிவுக்கும் மந்த்ரா இடமிருந்து ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும் பட்சணம் எப்படிப் போதும். ஒருவாய்க்குக் கூடக் காணாதே... ஆகவே, பட்சணக் கடையின் பின்பக்க வழியாக உள்ளே புகுந்து கடைக்காரர் வியாபாரத்துக்காக செய்து உள்ளே வைத்திருக்கிற பட்சணங்களைத் தாராளமாகத் தின்னலாம் என்று திட்டமிட்டிருந்தாள் மங்காத்தா.

பட்சணக் கடையின் பின் வாசல் கதவு மூடித் தாழிடப்பட்டிருந்தது.

'ஒரு இடி இடித்தால் திறந்து கொண்டு விடும். ஆனால், சத்தம் கேட்டு கடைக்காரர் வந்து விடுவார். என்ன செய்யலாம்...' என்று தலையைச் சொறிந்து கொண்டாள் மங்காத்தா. இருவரும் கடையின் பின் வாசலில் நிற்பதைப் பார்த்த மந்த்ராவுக்கு அவர்கள் திட்டம் புரிந்து விட்டது.

'அடிப்பாவிகளா! கதவை உடைத்துக் கடை யினுள் புகுந்து திருடவும் துணிந்து விட்டார் களே... இவர்களை எப்படியாவது தடுத்து நிறுத்தியாக வேண்டும்... ஏதாவது மாஜிக் செய்தாக வேண்டும்...!' என்று சிந்தனையைக் குழப்பிக் கொண்டாள் மந்த்ரா. அப்போது...

''ஏய்! இந்த ஜன்னலைப் பாரு... தொத்தல்! கம்பிகள் கூட இல்லை. முயற்சி செய்தால் கையோடு வந்துவிடும்!'' என்று பரபரப்போடு மங்காத்தாவிடம் கூறினாள் வடிவு.

மங்காத்தாவின் முகம் மலர்ந்தது.

'ஐடியா என்றபடி ஆடும் ஜன்னல் கதவை அசைத்துப் பார்த்தாள். அதே சமயம் மறைந் திருந்த மந்த்ரா, ஓம் க்ரீம், ஹரீம் சலீம்! என்று மந்திரம் போடலானாள். மங்காத்தாவின் உடலிலும், உடைகளிலும் கட்டம் கட்டமாக கோடுகள். வடிவின் உடலிலும் உடைகளிலும் கூட!

''ஏய் மங்காத்தா, இதென்ன உன் மேலெல்லாம் கம்பி வலை போட்டது போல கோடுகள்!'' என்றாள் வடிவு.

மங்காத்தாவும் அதே சமயம் வடிவைப் பார்த்து, ''உன் மேலே கூடத்தான் கம்பி வலைக்கோடு!'' என்றாள்.

'ஐயோ! நான் அவர்கள் மீது கம்பிக்கோடு போடச் சொல்லல்லே! ஜன்னலுக்குத் தானே கம்பி வலை போடும் படி சொன்னேன். ஏ குட்டிச் சாத்தான்! ஏன் இப்படிக் குழப்பிட்டே?' என்று கடிந்து கொண்டாள் மாஜிக் மந்த்ரா.

- மாஜிக் தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us