தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாஜிக் மந்த்ரா!(26)

மாஜிக் மந்த்ரா!(26)

மாஜிக் மந்த்ரா!(26)


PUBLISHED ON : ஏப் 25, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: மங்காத்தாவை மேஜிக் மூலம் இருந்த இடத்திலேயே ஓட வைத்தது கருப்பு பூனை, இனி -

ஓடிக்கொண்டே ஆனால், ஓர் அங்குலம் கூட நகராமல், நின்ற இடத்தில் இருந்தபடியே கால்களை மாற்றி, மாற்றி ஊன்றி ஓடுவது போல், 'பாவ்லா' காட்டும் மங்காத்தாவின் செயலைக் கண்டு சிரித்துச் சிரித்து எல்லாருக்கும் வயிறு புண்ணாகி விட்டது. பாவம் மங்காத்தாவோ அவஸ்தைப்பட்டாள். அவளால் கால்களை ஊன்றி நிற்கவும் முடியவில்லை; ஓடவும் முடியவில்லை. வியர்வை வழிய, ''ஐயோ, என்னைக் காப்பாத்துங்களேன்... நிக்கவும் முடியல்லே, ஓடவும் முடியல்லே!'' என்று பரிதாபமாகக் கத்தினாள் மங்காத்தா.

மந்த்ரா தன் தாத்தாவை பார்த்தாள்.

'போதும் நிலைமையை சீர் படுத்துங்கள்' என்று கெஞ்சு வது போலிருந்தது அவள் பார்வை.

கருப்புப் பூனையும், தன் ரோஸ் வாயைத் திறந்து 'மியாவ்' என்றது.

ஓடாமல் ஓடிக் கொண்டிருந்த மங்காத்தா டக்கென்று நின்றாள். உடைந்து சிதறிக் கிடந்த பீரோவின் பலகைகள் ஒன்று சேர்ந்து சின்ன பீரோவாகி அதன் இடத்தில் சாதுவாக நின்று கொண்டிருந்தது. மாணவிகளுக்கு நடந்த எதுவுமே நினைவில் இல்லை. அவரவர் அலுவலில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். மங்காத்தா வீட்டுப் பாடங்களைச் செய்வதில் தலை முடியைப் பிய்த்துக் கொண்டிருந்தாள்!

அன்று மாணவி களின் கூட்டத்தில் தலைமையாசிரியை தனபாக்கியம் கூறிய செய்தி, மந்த்ராவை மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைத்தது.

அப்படி என்ன செய்தி?

''மாணவிகளே! அடுத்த மாதம் பள்ளியின் ஆண்டு விழாக் கொண்டாட்டம் வருகிறது. அதில் ஒரு முக்கிய நிகழ்ச்சி நாடகம். இப்போது நீங்கள் உங்கள் ஆங்கிலப் பாடத்தில் ஷேக்ஸ்பியரின் 'மாக்பெத்' நாடகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதையே நீங்கள் நம் பள்ளியின் அரங்கில் நடித்துக் காட்ட வேண்டுமென்று தீர்மானித்திருக்கிறேன்!'' என்றார் ஹெட்மிஸ்.

மந்த்ராவின் மகிழ்ச்சிக்கு இதுதான் காரணம். மாக்பெத் நாடகத்தில் மந்த்ராவுக்கு ரொம்ப ஈடுபாடு. காரணம் அதில் வரும் மூன்று சூனியக்காரிகளின் காட்சி. ஆகவே, ''மிஸ்... அதில் வரும் மூன்று சூனியக்காரி களில் ஒருவளாக நான் நடிக்க ஆசைப் படுகிறேன்!'' என்றாள் மந்த்ரா.

தலைமை ஆசிரியை தனபாக்கியம், தன் மூக்குக் கண்ணாடியின் கீழாக ஓரப் பார்வை பார்த்தபடி கூறினாள்.

''மை டியர் சைல்ட்! நீ அந்தப் பாத்திரத் துக்குப் பொருத்தமாக இருக்க மாட்டே. மங்காத்தாவையும், வடிவுவையும் அந்த பாத்திரத்துக்கு நான் முடிவு செய்து விட்டேன். இன்னும் ஒருவரை செலக்ட் செய்யணும்!'' என்றாள்.

இதனைக் கேட்டதும், மந்த்ராவுக்கு ஒரே வருத்தமாக போயிற்று.

'இங்குள்ள மாணவிகளில் நிஜமான மந்திரக்காரி, மாஜிக் செய்பவள் நான்தான். அது தெரியவில்லை இந்த ஹெட்மிஸ்ஸுக்கு!' என்று மனதுக்குள் எண்ணினாள் சோகமாக.

மங்காத்தாவுக்கும், வடிவுக்கும் தங்களை சூனியக்காரி பாத்திரத்துக்குத் தேர்ந்தெடுத் திருப்பது பிடிக்கவில்லை. ஷேக்ஸ்பியர் நாடகமே அவர்களுக்குப் பிடிக்கவில்லை!

''ஷேக்ஸ்பியர் நாடகம் எதற்கு... வசனங்கள் கூறவே முடியாது... ஒரே போர்! தவிர...'' என்று மங்காத்தா தன் கருத்தை கூற முற்படும் முன், ஹெட்மிஸ் குறுக்கிட்டார்.

''மங்கா, மடத்தனமாப் பேசாதே... ஷேக்ஸ்பியரைப் பத்தி உனக்கென்ன தெரியும்? நாடகத்திலே நடித்துப் பார்... அப்போது புரியும் அதன் பெருமை,'' என்று அதட்டி அடக்கியவர், அன்று மாலையே ஒத்திகை ஆரம்பம் என்று அறிவித்தார்.

மீட்டிங் ஹாலில் மாணவிகள் அன்று மாலை கூடினர். மேடையில் ஒரு பெரிய கொப்பரை வைக்கப்பட்டிருந்தது.

'முதலில் மூன்று சூனியக்காரிகளின் காட்சியை ஒத்திகைக்கு எடுத்துக் கொள்வோம். மங்கா-வடிவு நீங்கள் இருவரும் கொப்பரை அருகில் போய் நில்லுங்கள். மூன்றாவது சூனியக்காரி வேஷத்தை யாருக்கு தரலாம்...' என்று ஹெட்மிஸ் யோசித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பாத்திரத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த மந்த்ராவின் வாய் அவளை யறியாமலேயே சூனியக்காரிகள் கூறும் வசனங்களைக் கூறியது. அடுத்த நிமிடம் அங்கு அற்புதம் நிகழ்ந்தது. கொப்பரையின் கீழிருந்த தீஜ்வாலை கொழுந்து விட்டது. கொப்பரையில் தளபுள என்று ஏதோ கொதிக்கலாயிற்று. இது குட்டிச்சாத்தானின் வேலை. 'நான் நினைத்தபடி நடத்தித் தரணும்' என்று அதற்கு உத்தரவிட்டிருந்தாள் மந்த்ரா.

அந்த உத்தரவை சந்தர்ப்பம் தெரியாமல் நிறைவேற்றி மந்த்ராவை அடிக்கடி சங்கடத்துக்குள்ளாக்குவது அதற்கு ஒரு விளையாட்டு. அதன் விளைவுதான் பொம்மைக் கொப்பரை, ஷேக்ஸ்பியர் நாடகத்து நிஜமான சூனியக்காரிகளின் கொப்பரையாக்கிக் கொதிக்கலாயிற்று.

மேடையிலிருந்து மங்காத்தாவும், வடிவும் அலற, கூடியிருந்த மாணவிகள் திகிலடைந்து வீறிட, தன் நினைப்பை நிஜமாக்கிய குட்டிச் சாத்தானின் குறும்பை சபித்துக் கொண்டே, மந்த்ரா அவசர அவசரமாக மாற்று மந்திரம் போட்டாள். மேடையில் பூப்பூவாக தண்ணீர் சொரிந்தது. மேடையில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை மழை பெய்வதற்கான சாதனத்தி லிருந்து. கொப்பரையின் அடியில் கொழுந்து விட்ட தீஜ்வாலை அணைந்தது. கொப்பரைக் குள் கொதித்த குழம்பும் மறைந்தது.

''நல்லவேளை...'' என்று நிம்மதிப்பட்ட ஹெட்மிஸ்... ''இதெல்லாம் எப்படி ஏற்பட்டதுன்னு புரியல்லே. ஆனா மந்த்ரா, நீ சூனியக்காரி வசனத்தைக் கச்சிதமாக் கூறியதைக் கேட்டேன். சிறப்பாக இருந்தது. அதனாலே மூன்றாவது சூனியக்காரி பாத்திரத்தை நீயே செய்யலாம்!'' என்றார்.

மந்த்ராவுக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி.

''குட்டிச் சாத்தானின் குறும்பு நல்லதா முடிஞ்சது. ஆனா, அது நாடகத்தின் போது இப்படி ஏதாவது செய்து குழப்பாமல் இருக்கணும். தாத்தாவிடம் கூறி அதை எச்சரிக்கச் சொல்லணும்!'' என்று தீர்மானித்துக் கொண்டாள்.

மாக்பெத் நாடகத்தின் ஒத்திகைகள் ஜோராக நடந்தன. பள்ளியின் ஆண்டு விழாவும் நெருங்கிக் கொண்டிருந்தது. ரிகர்சலின் கடைசி நாள்... அன்று டிரஸ் ரிகர்சல். தலைமையாசிரியை மாணவிகளிடம் கூறினார்.

''நாடகம் ரொம்ப நன்றாக வரும்னு தோணுது. ஊரில் உள்ள பெரும் புள்ளிகளை யும், பிரமுகர்களையும் விழாவுக்கு அழைத் திருக்கிறேன். நுழைவுக் கட்டணம் வசூலித்து, அதில் கிடைக்கும் பணத்தில் பள்ளியில் ஒரு புதிய பிளாக் கட்டலாம்னு உத்தேசம். நீங்க ளெல்லாம் நாடகத்தில் நல்லா நடிக்கணும்...'' என்றார்.

ஆனால் மங்காத்தாவும், வடிவும் நாடகத்தையும் தொந்தரவாகக் கருதினர்.

''இதென்னா பொழைப்பத்த வேலை நாடகமாம், நடிப்பாம். உயிரை வாங்க றாங்க!'' என்று அலுத்துக் கொண்டாள் வடிவு.

''நம்மை வாட்டி வதக்கி கேட் கலெக்ஷன் பண்ணி, கட்டடம் கட்டப் போறாங்களாம்... நல்ல கதையா இருக்கே... வசூலாகும் பணத்தை நாம் சுருட்டிக்கிட்டுப் போயிடணும் வடிவு. என்ன சொல்றே?'' என்று தன் கிரிமினல் புத்தியைக் காட்டினாள் மங்காத்தா. வடிவும் உற்சாகமாகக் குதித்தாள். அப்போதே இருவரும் அதற்காக திட்டமிடலாயினர்.

ஆண்டு விழாவன்று, மகாராஜா பெண் குழந்தைகள் சீர்திருத்தப் பள்ளி சுறுசுறுப்பாக இருந்தது. மாலை நாலு மணியிலிருந்தே கூட்டம் சேரலாயிற்று. நாடக மேடையின் திரை இடைவெளி வழியே அரங்கத்தில் கூட்டம் அலைமோதுவதைக் கண்ட கருப்புப் பூனை, ''மந்த்ராக்குட்டி... நாடகத்துக்கு நல்ல வசூல். ஹவுஸ் புல்! நான் கூட்டத்தோடு உட்கார்ந்து உன் நடிப்பைப் பார்க்கிறேன்... குட்லக்!'' என்று வாலை உயர்த்திக் கொண்டு கிளம்பியது.

''தாங்க்யூ கிராண்ட்பா! நான் வேஷம் போட்டுக்கப்போறேன்!'' என்று மந்த்ரா மேக் அப் ரூமுக்குப் போனாள்.

ஹீதல் காட்சி மூன்று சூனியக்காரிகளும் கொப்பரையைச் சூழ்ந்து நின்றபடி வசனம் பேசி மந்திரங்களைக் கூற, புகையும், நெருப்பும் கிளம்ப வேண்டும். மந்த்ராதான் வசனம் பேசினாள். தந்திரக் காட்சி மூலம் வண்ண வண்ணப் புகையும், நெருப்பும் தோன்றின. டேப்பில் பதிவு செய்த , ''கெக் கெக்'' என்று பயங்கரமான சிரிப்பும் கேட்டது. சபையில், அந்தக் காட்சியில் ஒரு நிசப்தம், பிரமிப்பு, காட்சி முடிந்ததும் ஒரே கைத்தட்டல், திரைவிழுந்தது.

''விட்ச்''கள் மூவரும் மேடையிலிருந்து உள்ளே சென்றனர்.

மாஜிக் தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us