PUBLISHED ON : நவ 04, 2011

இதுவரை: முகுந்தனும், அவனது நண்பர்களையும் சிறைவைத்தார் குஷ்வந்த்சிங். அங்கே அவர்கள் கொடுமை படுத்தப்பட்டனர். இனி-
நடப்பது மாயமா? மந்திரமா? என்பது போல் இருந்தது சிறுவர்களுக்கு. முகுந்தன் புதிதாக வந்தவன். அவனுக்கு பார்சல்களைத் தூக்கிப் பழக்கம் இருக்காது. மிகவும் சிரமப்படுவான். அடியாளிடம் அடி வாங்கு வான், சூடு வைப்பார்கள் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்த அவர்கள், பெரிய பெரிய பார்சல்களை முகுந்தன் வெகு சீக்கிரத்தில் தூக்கித் தூக்கி எறிந்ததும் அடுக்கியதும், தார் பாய் போட்டுக் கட்டியதையும் பார்க்கையில் முகுந்தன் சாதாரண ஆள் இல்லை என்பதை உணர்ந்தனர்.
''இப்போதாவது என் மீது உங்களுக்கு நம்பிக்கை வந்ததா?'' எனக் கேட்டான் முகுந்தன்.
''முகுந்தா... உன்னை நாங்கள் சாதாரண சிறுவனாக நினைக்கவில்லை, மிகவும் சக்திவாய்ந்த ஒருவனாகவே நினைக்கிறோம். இந்த நிமிஷத்தில் இருந்து எங்களுக்கெல்லாம் நீதான் தலைவன் இனிமேல் நீ சொல்வதை நாங்கள் கேட்கிறோம்,'' என்றான் குமார்.
''குமார்... நான் உங்களுக்குத் தலைவன் ஆக வேண்டும் என நினைக்கவில்லை. உங்கள் அனைவரையும் இங்கிருந்து எப்படியாவது காப்பாற்றிச் செல்ல வேண்டும் என, நினைக்கிறேன்,'' என்றான் முகுந்தன்.
''முகுந்தா... உண்மையாக சொல்கிறாயா? உன்னால் இங்கிருந்து எங்களைக் காப்பாற்ற முடியுமா? மறுபடியும் என் தாய் தந்தையரை நான் பார்க்க முடி யுமா?'' எனக் கேட்டான் குமார்.
''என்மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?''
''கண்டிப்பாக இருக்கிறது!''
''அதுபோதும். ஆனால், ஒன்று இங்கு கூடியிருக்கும் உங்களை மட்டுமல்ல, எல்லா சிறுவர் சிறுமியர்களையும் காப்பாற்ற வேண்டும்.''
''அத்தனை பேர்களையும் ஒரே சமயத்தில் எப்படிக் காப்பாற்ற இயலும்?''
''அது எப்படி என்பதை யோசிக்க வேண்டும். ஆனால், அனைவரையும் காப்பாற்றியே ஆக வேண் டும். என்னுடன் வந்த நண்பர்கள் மணிகண்டன், கணேசன் என்ன ஆனார்கள் என்பதை நான் காண வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்.''
''கண்டிப்பாக உதவுகிறோம். பார்சல் செய்யப்படும் குடோனுக்கு நாங்களே அழைத்துச் செல்கிறோம்,'' என்ற குமார், முகுந்தனை அழைத்துக் கொண்டு சென்றனர்.
பார்சல்கள் தயாரிக்கும் குடோன் மாவு படர்ந்த புகைமூட்டமாகத் தெரிந்தது. மணிகண்டன் மாவுத் தூள்களை சுவாசிக்க முடியாமல் இருமிக்கொண்டும், தும்மிக்கொண்டும் இருந்தான். இதை கவனித்த அடியாள் ஒருவன் மணிகண்டனின் முதுகில் அடித்தான்.
''வேலை செய்யச் சொன்னா? இருமிக்கிட்டும் தும்மிக்கிட்டுமா இருக்க, செய்யுடா...'' என்றான் அடியாள்.
''அடிக்காதீங்க, என்னால வலிதாங்க முடியலை! என்னால சுவாசிக்க முடியாமல் கஷ்டமா இருக்குது.''
''கஷ்டப்படத்தாண்டா உன்னை மாதிரிப் பசங்களைக் கொண்டு வந்திருக்கோம். பத்துரூபாய் செலவு பண்ணாம இவ்வளவு பெரிய மாவுக் கம்பெனி நடந்துட்டு இருக்குதுன்னா அது உங்களாலதாண்டா! திங்கறதுக்கு சோறு வேணும்னா வேலை செய். இல்லைன்னா பட்டினி போட்டு வேலை செய்யச் சொல்லுவாங்க.''
வேறு வழியில்லாமல், மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து அழுதுக்கொண்ட மாவுகளை அள்ளி அள்ளி பிளாஸ்டிக் கவரில் போட்டுக் கொண்டிருந்தான். இதை ஜன்னல் வழியாக முகுந்தனும், அவனுடன் வந்த சிறுவர்களும் பார்த்துக் கொண் டிருந்தனர்.
மணிகண்டனால் இருமமால் இருக்க முடிய வில்லை.
''இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள இந்த மாவுகளைப் பூராவும் பைகள்ல போட்டு நிரப்பி இருக்கணும் ஜாக்கிரதை,'' எனக்கூறி வாட்ச்மேன் அங்கிருந்து நகர்ந்தான்.
முகுந்தன் ஜன்னல் கம்பியை வளைத்து ஒடித்தான். ஜன்னலுக்குள் நுழைந்து மணிகண்டன் இருக்கும் இடத்திற்கு வந்தான்.
''டேய் மணிகண்டா?''
''முகுந்தா... என்னால முடியலைடா!''
''கவலைப்படாதே! கொஞ்சம் தள்ளி நில்லு! எனக்கூறி, மணிகண்டன் பார்சல் செய்ய வேண்டிய மாவுகளை அங்கிருக்கும் பைகளில் வேகமாகப் போட்டு நிரப்பினான். ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த குமார் மற்றும் சிறுவர்கள் முகுந்தனின் செயலைக் கண்டு, மேலும் வியந்து நின்றனர்.
''இங்க பாரு... இங்க எது நடந்தாலும் கண்டுக்காம இரு! ஏன்னா தேவையில்லாம அடிவாங்க வேண்டி வரும், கூடிய சீக்கிரத்தில தப்பிச்சுப் போயிடலாம்.''
''தப்ப முடியாதாமே!''
''அதை நான் பாத்துக்கறேன். நாளைக்கு ராத்திரி நான் பார்சல் ஏத்துற இடத்துக்கு கணேசனையும் அழைச்சிட்டு வந்திடு.''
''கணேசனா... அவன் எங்க இருக்கான்னே தெரியலியே! இந்த ரூமை விட்டு எப்படி வெளியே வர்றதுன்னே எனக்குத் தெரியலையே முகுந்தா எங்கப்பா அம்மா என்னைக் காணலைன்னு அழு வாங்கடா... எப்படியாவது இங்கிருந்து என்னைக் கூட்டிக்கிட்டுப் போயிடு முகுந்தா,'' எனக்கூறி மணி கண்டன் அழுதான்.
''உன்னை மட்டுமில்ல, இங்க உன் கூட இருக்கற பையன்களையும் நாம் வெளியே அழைச்சிட்டுப் போயாகணும்.''
''எப்படி இத்தனை பேரையும் அழைச்சிட்டுப் போக முடியும்?''
''அதுக்கு நான் ஒரு ஐடியா வெச்சிக்கேன். நாளைக்கு ராத்திரி சரியா பனிரெண்டு மணிக்கு நாம இங்கிருந்து தப்பிக்கறது உறுதி. தைரியமா இரு... நான் கணேசன் என்ன பண்றான்னு பார்த்துட்டு வர்றேன்,'' முகுந்தன் அங்கிருந்து ஜன்னல் வழியாய் வெளியே குதித்தான்.
''மணிகண்டனுக்கு தைரியம் சொல்லிட்டேன். இனி என் இன்னொரு நண்பன் கணேசனைப் பாக்கணும், அவன் மாவு அரைக்கப்படற இடத்துல இருக்கான்,'' என்றான் முகுந்தன்.
''அந்த குடோன் எனக்குத் தெரியும். என் கூட வா,'' என்றான் குமார்.
கணேசன் தூங்கி வழிந்து கொண்டிருந்தான். அங்கிருந்த ஒரு காவலாளி கணேசனின் முதுகில் அடித்தான்.
''அய்யோ... என்னைக் கொல்லறாங்க! அடிக்காதீங்க! அடிக்காதீங்க,'' என்று அலறிக் துடித்தான்.
''தூங்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன். இல்லியா... தூங்கினா இப்படித்தான் அடி விழும்,'' என்றான் காவலாளி.
''எனக்குத் தூக்கம் வருது. என்னால கண் முழிக்க முடியலை. தூங்கணும்,'' என, அழுதான் கணேசன்.
''நாங்களா தூங்கச் சொன்னாத்தான் தூங்கணும், உன் இஷ்டத்துக்கெல்லாம் தூங்க முடியாது. இந்த மாவுகளைப் பூராவும் அள்ளி இங்க இருக்கற நூறு டின்களிலும் நிரப்பணும். ஒரு டின் கம்மியாக நிரப்பினாலும் சவுக்கடி விழும் ஜாக்கிரதை! நிரப்புடா,'' எனக்கூறி கணேசனின் தலைமுடியைப் பிடித்து இழுத்து விட்டான். குவியலாய் இருந்த மாவின் மீது விழுந்தான் கணேசன். மாவு அவனது கண்களிலும், மூக்கிலும், வாயிலும் புகுந்து அவஸ்த்தைப் படுத்தியது. சரியாக மூச்சு விடக்கூட முடியாமல் தவித்தான் கணேசன்.
இத்தனை சம்பவங்களையும் பார்த்துக் கொண்டிருந்த முகுந்தன், காவலாளி சென்றதும், ஜன்னலை உடைத்து போட்டு விட்டு, கணேசனின் அருகில் வந்தான்.
''முகுந்தா... பார்த்தியடா நம்ம நிலைமையை. வாத்தியார் சொன்னபடி வீட்டுப்பாடம் எழுதி ஒழுங்கா பள்ளிக்கூடம் போயிருந்தா இப்படி ஒருத்தன்கிட்ட வந்து மாட்டியிருப்பேனா? என்னை அடிச்சுக்கிட்டே இருக்காங்கடா... வலித் தாங்க முடியலை முகுந்தா... தூக்கம் தூக்கமா வருதுடா... தூங்க விடமாட்டேங்குறாங்கடா... எனக் கூறி தேம்பி, தேம்பி அழுதான்.
''கணேசா... உன்னை இங்கிருந்து காப்பாத்தி அழைச்சிட்டுப் போக வேண்டியது என் பொறுப்பு, நீ கவலைப்படாமா தைரியமா இரு,'' என்று நம்பிக்கை கொடுத்தான் முகுந்தன்.
''எப்படிடா தப்பிக்கறது? கேட்டுலயும் ஆள் வெச்சிருக்காங்களே! இங்கு வந்தா, தப்பிக்கவே முடியாதுன்னு இங்க வேலை செய்யற மத்த பசங்கெல்லாம் சொல்றாங்கடா!'' என்றான் கணேசன்.
''அது எனக்கும் தெரியும்! ஆனா நம்பிக்கை இழந்து இங்கு அடிமைகளாக கஷ்டப்படும் இந்தப் பையன்களையும் காப்பாத்த வேண்டியது என் பொறுப்பு! கண்டிப்பா காப்பாத்துவேன். அதுவும் நாளைக்கு ராத்திரி 12 மணிக்கு! சரக்குகளை ஏத்திப் போற லாரி குடோனுக்கு வந்திடுங்க! எல்லாரையும் அழைச்சிட்டு வந்திடு சரியா.''
''சரி... ஆனா மாட்டிக்கிட்டா?''
''மாட்டிக்காம வர்றதுதான் சாமர்த்தியம்.''
''சரி! முயற்சி பண்றேன்.''
''தைரியத்தையும், நம்பிக்கையையும் இழந்துடாதே!
''ஒ.கே முகுந்தா!''
''இந்த நூறு டின்களிலும் மாவை நிரப்பித் தர்றேன். டின்னைப் பிடி.''
கணேசன் ஒவ்வொரு டின்னையும் கொண்டு வந்து காட்டினான்.
முகுந்தன் மாய மோதிரத்தை பிரார்த்தனை செய்து மாவுகளை அள்ளிப் போட்டான். ஒரு சில நிமிடங்க ளில் அந்த டின்களில் மாவுகள் நிறைந்தன.
''உன்னால இவ்வளவு வேகமா எப்படி வேலை செய்ய முடியது முகுந்தா!'' வியப்போடு கேட்டான் கணேசன்.
''அதுதாண்டா என் ஸ்டைல். இதே மாதிரித் தான் இங்கிருந்து தப்பிக்கும் போறோம் புரியுதா?''
''புரியுது முகுந்தா!''
முகுந்தன் அங்கிருந்து ஜன்னல் வழியாக வெளியே குதித்தான். அவனுடன் வந்த இருபது சிறுவர்களுடன் செல்ல எதிரே கிழவி நின்றிருந்தாள்.
''வா தம்பி... புதுசா வந்த தம்பி, உன்கிட்ட இருக்கற வேகமும், விவேகமும் எனக்கு ஏற்கனவே தெரிஞ்சதுதான். என் குருநாதன் குஷ்வந்த் சிங் உன்னைப் பத்தின செய்தியைக் சொல்லியிருக்கிறார். நீ ரொம்ப பலசாலியாமே! பார்சல்களை லாரியில் ஏத்தச் சொல்லி வேலை கொடுத்தால், குடோன் குடோனா என்ன நடக்குதுன்னு வேவு பார்த்துட்டு வர்றியா? உனக்கு இந்தப் பையன்கள் துணையா? மொத்தப் பேருக்கும் பாடம் புகட்டற மாதிரி உன்னைப் பணயமா வெச்சு ஒரு காரியத்தை நான் செய்யப்போறேன். கப்பர் சிங்...'' என்று கிழவி கத்தினாள்.
அக்கணமே கப்பர் சிங் வந்துவிட்டான்.
''எஜமானியம்மா.''
''என்ன காவல் காக்கறே நீ... இந்தப் பையன்களைப் பாத்துக்க வேண்டிய பொறுப்பு உன்னோடது தானே!''
''ஆமாம்.''
''இவனுங்க இருக்கிற இடத்தை விட்டிட்டு மத்த குடோன்களில் என்ன நடக்குதுன்னு பாத்துட்டு வந்துட்டு இருக்கான். இப்படிப்பட்டவனுக்கு, இந்தக் கம்பெனி குடுக்கற தண்டனை என்னன்னு உனக்குத் தெரியும் இல்லையா?''
''தெரியும்.''
''பின் பக்கத் தோட்டத்துல இவனைக் கட்டிப்போடு, நம்ம வெறிநாய்கள் நாலையும் அவிழ்த்து விடு. நாய்கள் இந்தப் பையனைக் கடிக்கிற கடியில, இவன் துடிக்கற துடிப்புல, இவன் சாவு மத்த பிள்ளைங்களுக்கெல்லாம் பாடமா இருக்கணும்! இந்த சம்பவத்துக்குப் பிறகாவது இங்க வேலை செய்யற பசங்க திருத்தணும். புரியுதா?''
''சரிங்க எஜமானியம்மா!''
''கொண்டு போய்க் கட்டிப்போடு.''
முகுந்தனை கப்பர்சிங் இழுத்துக்கொண்டு போய் குடோனின் பின் பக்கமுள்ள ஒரு தோட்டத்தில் ஒரு சிறிய வேப்பமரத்தில் கட்டிப்போட்டான். மற்ற மாணவர்கள் முகுந்தனைப் பரிதாமாகப் பார்த்தனர்.
-10 தொடரும்
