PUBLISHED ON : நவ 25, 2011

இதுவரை: கடத்தப்பட்ட சிறுவர்களுடன் தப்பி ஓடிவந்த முகுந்தனின் லாரியை ஆக்ஸிடன்ட் செய்தான் ராஜமாணிக்கம். உயிர் பிழைத்த முகுந்தன், வாக்கு மூலம் கொடுத்தான். இனி-
மருத்துவமனை வளாகத்திற்குள் காவல் துறை அதிகாரிகள், ஜீப்பில் வந்து இறங்கினர். குழந்தைகள் ஏற்றி வந்த லாரி ஒன்று ஓசூருக்கும், கிருஷ்ணகிரிக்கும் மத்தியில் உள்ள பிரதான சாலையில் விபத்துக் குள்ளாகியது என்றும், அதில் வந்த சிறுவர்கள் சிகிச் சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர் என்றும் செய்திகள் வெளியாகத் தொடங்கின.
படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த முகுந்தன் மெல்லச் கண்விழித்தான். தன்னைச் சுற்றிலுள்ள டாக்டர்கள், மற்றும் போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் பார்த்து, தற்போது உள்ள நிலையைப் புரிந்துக் கொண்டான். இது போன்று ஆட்கள் இருக்கும் இடத்தில் மாய மோதிரத்தின் உதவியை கேட்கக் கூடாது, என்று எண்ணினான்.
முகுந்தன் கண்விழித்ததும் காவல்துறை அதிகாரி ராஜசேகர் வந்து பார்த்தார்.
''உன் பேர் என்ன?'' கேட்டார்.
''முகுந்தன்.''
''இத்தனை பேரும் லாரியில் வந்திருக்கீங்களே எங்கிருந்து வர்றீங்க?''
''எங்கிருந்து வர்றேம்னு தெரியாதுங்க, ஆனா ஒரு இடத்துல இருந்து தப்பிச்சு வர்றோம்,'' என்றான்.
முகுந்தனின் வார்த்தை காவல்துறை அதிகாரிக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது.
''தப்பிச்சு வர்றீங்களா? அப்படின்னா நீங்க எல்லாரும் ஆபத்தான இடத்துல மாட்டிட்டு இருந்தீங்களா?''
''ஆமாம் சார்... அது ஒரு பெரிய மாவு மில். காட்டுக்குள்ள இருக்குது. இதோ இங்க இருக்கறவங்க எல்லாரும் வேற வேற ஊர்க்காரங்க. எங்களைக் கடத்திட்டுப் போயி பகல்லயும், ராத்திரியும் வேலை செய்யச் சொல்லி அடிச்சாங்க!''
காவல்துறை அதிகாரி ஆச்சரியப்பட்டார்.
முகுந்தன் மேற்கொண்டு நடந்ததைச் சொல்லிக் கொண்டே இருந்தான். இதை லாரி ராஜமணிக்கம் பார்த்துவிட்டான். அவன்தான் முகுந்தன் என்று தெரிந்தது. என்றாலும் போலீசார் மத்தியின் அவனை எதுவும் செய்ய முடியாமல் தவித்தான். இனிமேல் இங்கு இருப்பதால் பிரயோஜனமும் இல்லை. போலீஸ் தேடி அரஸ்ட் செய்வதற்கு முன்பு தப்பிச் சென்றால் உத்தமம் என்கிற முடிவுக்கு வந்து மொபைல்போன் எடுத்து, குஷ்வந்த்சிங்க்கு போன் செய்தான்.
''காரியம் கெட்டுவிட்டது முதலாளி. ஆஸ்பத்திரியில் முகுந்தன் பிழைத்துக் கொண்டான். அவன் போலீஸ்சாரிடம் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக இன்னும் சிறிது நேரத்தில் போலீஸ் உங்களைத் தேடி வீட்டிற்கு வரும். அதற்குள் தப்பித்து விடுங்கள்,'' எனக் கூறி போனைக் கட் பண்ணினான்.
பலநாள் திருடன் ஒருநாள் சிறையில் என்பது போல் சிறுவர்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த குஷ்வந்த்சிங், முகுந்தனின் முயற்சியால் இன்னும் சிறிது நேரத்தில் மாட்டப் போகிறோம். இந்த வீட்டை விட்டு உடனே எங்காவது ஓடிப் போகலாம் என்று தன் மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு, பெட்டியிலுள்ள பணத்தையெல்லாம் மூட்டைகட்டி ஒரு சூட்கேஸில் வைத்து அங்கிருந்து கிளம்பினான். கேட் அருகே வந்த போது முகுந்தனின் தந்தை வாட்ச்மேன் கந்தசாமி கேட்டை மூடிவிட்டு நின்றான்.
''கேட்டைத் திற கந்தசாமி,'' என்றான் குஷ்வந்த் சிங்.
''கேட்டை பூட்டச் சொல்லி போலீஸ் உத்தரவு போட்டிருக்காங்க. அவங்க இப்ப வந்திடுவாங்க. அவங்க வந்தப்புறம் திறந்துவிடறேன்,'' என்றான் கந்தசாமி.
''நான் உனக்கு சம்பளம் கொடுக்கற எஜமான். நான் கேட்டைத் திறன்னு சொன்னா திறக்கணும். மூடுன்னு சொன்ன மூடணும் அதுதான் உன் டியூட்டி.''
''சரிதாங்க! போலீஸ் சொன்னதை மீறி திறக்கக் கூடாதுங்க. அது சட்ட விரோதம்ங்க!''
''சட்டத்தைப் பத்திக் கேவலம் ஒரு வாட்ச்மேன் சொல்லி நான் தெரிஞ்சுக்கணுமா?''
''கேவலம்னு சொல்லாதீங்க! நான் நேர்மையாக உழைக்கும் கூட்டம். அதுல கெடைக்கற வருமானத்துல சாப்பிட்டு வயித்தைக் கழுவுறேன். மத்தவங்க உழைப்புல பிழைப்பு நடத்தறவங்க இல்லை. அதனால் கொஞ்சம் மரியாதையாய் பேசுங்க.''
''இப்ப கேட்டைத் திறந்து விடப்போறியா இல்லையா?''
''முடியாதுங்க!'' என்று சொல்லும் போது, போலீஸ் ஜீப் அங்கு வந்து நின்றது.
இன்ஸ்பெக்டர் வேலாயுதம் இறங்கினார்.
''இங்க குஷ்வந்த் சிங் யார்?'' இன்ஸ்பெக்டர் கேட் டார்.
''இதோ கார்ல வெளிய கிளம்பிட்டு இருக்காங்க! இவங்கதான்,'' என்றான் கந்தசாமி.
''நீங்கதான் குஷ்வந்த் சிங்கா?''
''அது வந்து...''
''ஏன் சார் பேரைக் கேட்டா இப்படித் தயங்கறீங்க? நான்தான் குஷ்வந்த் சிங்குன்னு, சொல்ல வேண்டியது தானே!''
''இன்ஸ்பெக்டர் சார், இவர்தான் நீங்க தேடி வந்த ஆள்,'' என்றான் கந்தசாமி.
இன்ஸ்பெக்டர் சிங்குடன் பேசினார்.
''மேலிடத்துல இருந்து உங்களைக் கைது பண்ண சொல்லி உத்தரவு வந்திருக்குது.''
''எதுக்கு?''
''சின்னப் பிள்ளைங்களைக் கடத்தினது குற்றம். அவங்களை சிறுவயசுலேயே வேலை வாங்கினது குற்றம். இப்படிப் பல குற்றங்கள் உங்க மேலே இருக்குது.''
''சார்... யாரோ வேணும்னே என் மேல தவறான செய்தியை சொல்லியிருக்காங்க! நான் அப்படிப் பட்டவன் இல்ல சார்.''
''அப்படி நீங்க இல்லாம இருந்தா ரொம்ப சந்தோஷம். அதை ஸ்டேஷன்ல வந்து நிரூபிச்சுக் காட்டீடுங்க. இப்ப உங்களை நான் அரஸ்ட் பண்றேன். காரிலிருந்து சிங்கை இறக்கிவிட்டு போலீஸ் ஜீப்பில் ஏற்றினார் இன்ஸ்பெக்டர்.
''இங்க வாட்ச்மேன் கந்தசாமி யாரு?''
''நான்தாங்க'' இன்ஸ்பெக்டர் முன் வந்து நின்றான் கந்தசாமி.
''உங்க மகன்தானே முகுந்தன்!''
''ஆமாங்க, அவனைக் காணோம்னு உங்ககிட்ட கம்ளைண்டு கொடுத்திருக்கோம்!''
''உங்க பையன் கெடைச்சுட்டான்.''
''கிருஷ்ணகிரி பக்கத்துல இருக்கற ஒரு அரசு மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வர்றான்.''
''கடவுளே, என் பையனுக்கு என்ன ஆச்சு!''
''பயப்படாதீங்க! இதோ இந்த மனுஷன்தான் உங்க பையனைக் கடத்திப் போயிருக்கான். இவன் மாவுக் கம்பெனியில் வேலை செய்ய விட்டிருக்கான். உங்க மகன் கூட அறுபது சிறுவர்கள் இருந்திருக்காங்க! அவங்களை காப்பாற்றிக் கொண்டு வர்றப்ப ஒரு விபத்து நடந்திருக்கு! அதுல சின்ன காயம் பட்டிருக்கு! நீங்க உடனே புறப்பட்டுப் போனா உங்க மகனை அழைச்சிட்டு வந்துடலாம்,'' எனக் கூறி இன்ஸ்பெக்டர் விரைந்தார்.
கந்தசாமிக்கு இப்போதுதான் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. தன் மகன் முகுந்தன் என்ன ஆனானோ என்று இரண்டு நாட்களாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான் கந்தசாமி. தன் மனைவி வள்ளியம்மாளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
முகுந்தனின் திறமையால் அறுபது குழந்தைகள் மீட்கப்பட்டனர் என்கிற செய்தி பத்திரிகைகளிலும் 'டிவி'க்களிலும் வெளியாயின. சாதாரணமாக இருந்த முகுந்தனின் புகழ் நாடு முழுவதும் பரவியது. ஆனால், லாரி ஓட்ட எப்படித் தெரியும்? என்கிற கேள்விக்கு முகுந்தன் சரியான பதில் சொல்லவில்லை.
செய்திகள் வெளிவந்த போது முகுந்தனுக்கு லாரி ஓட்டுனர் உரிமம் பெறாததாலும், சிறுவயதான பையன் லாரி ஓட்டினதாலும் லாரி விபத்துக்கு காரணமாகியது என செய்திகள் வெளியானது. பெட்ரோல் பங்கில் நின்றுகொண்டிருந்த டேங்க் லாரி திடீரென்று ஒரு திருடனால் திருடிச் செல்லப்பட்டது என்றும், இந்த விபத்து வேண்டுமென்றே திட்டமிட்டு நடந்திருக்கலாம், என்றும் காவல்துறை சந்தேகித்து பிறகு அதற்கான ஆட்களைத் தேடியபோது லாரி ராஜமாணிக்கம் தலைமறைவு ஆகிவிட்டான் என்கிற செய்தி வெளியாகின. காணாமல் போன சிறுவர்களின் பெற்றோர் முகுந்தனை ஒரு தெய்வமாக நினைத்து நன்றியை கூறினர். முகுந்தனை கந்தசாமியும், வள்ளியம்மாளும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
முகுந்தனை வரவேற்க அந்த பிளாட் காம்பவுண்டில் உள்ள அத்தனை வீடுகளில் உள்ள ஆட்களும் நின்றிருந்தனர். முகுந்தனுக்கு மலர் செண்டும், பரிசுப் பொருட்களும் கொடுத்துப் பாராட்டினர். வாட்ச்மேன் மகன்தானே என்று சாதாரணமா முகுந்தனைப் பேசியவர்கள் கூட முகுந்தனின் வீரச் செயலைக் கூறிப் பாராட்டினர்.
அன்று இரவு வள்ளியம்மாள் முகுந்தனுக்கு சாப்பாடு பரிமாறினாள்.
''ஊர் கண்ணு பூராவும் உன் மேலதான் இருக்கு! எங்களுக்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கா? இனிமே இந்த மாதிரியெல்லாம் போயி மாட்டிக்காதே கண்ணு,'' என்று வள்ளியம்மாள் கரிசனமாகப் பேசினாள்.
''நானா எங்கயும் போகமாட்டேன் சித்தி. அந்த சிங் பள்ளிக்கூடத்துல கொண்டு போயி விட றேன்னு சொன்னார். அதை நம்பித்தான் அவர் ஜீப்ல ஏறினேன்.''
''இனிமே யார் கூப்பிட்டாலும் நம்பிப் போயிடாதே! ஸ்கூல் உண்டு, வீடு உண்டுன்னு வந்திடு,'' என்றாள்.
''சரிங்க சித்தி''
சாப்பிட்டு, படுக்கைக்குப் போனான். அங்கு அப்பா கந்தசாமி வந்து உட்கார்ந்தார்.
''முகுந்தா?''
''என்னப்பா?''
''எனக்கு ஒரு விஷயம் புரியமாட்டேங்குது, உன்கிட்டக் கேட்டுத் தெரிஞ்சுக்கணும் அதான் கேக்கறேன்.''
''என்னப்பா கேளுங்க.''
''நீ ஒரு சாதாரணப் பையன். சித்தி திட்டினா அழுதுட்டு இருப்பே. சாதாரண சின்னச் சின்ன வேலைகள் கூட செய்ய முடியாமக் கஷ்டப்படுவே! எப்பவும் எதையோ பறிகொடுத்த மாதிரி முகத்தை உம்முன்னு வெச்சிட்டே இருப்பே! அப்படி இருந்த நீ... இப்ப என்னெல்லாமோ செய்துட்டு இருக்கே! நம்ம காம்பவுண்டு நீச்சல் குளத்துல அஞ்சாவது மாடியிலிருந்து குதிச்சு ஒரு கொழந்தையக் காப்பாத்தி இருக்கே! சாதாரணமா தண்ணியில குதிக்கவே பயப்படற உனக்கு எப்படி இவ்ளோ தைரியம் வந்துச்சு? இதுக்கும் முன்னால நீ சைக்கிள் கூட ஓட்டினது இல்லை. அப்படிப்பட்ட நீ... லாரி ஓட்டிட்டு வந்திருக்கே! கொடுமையான நாய்களோட போராடி இருக்கே! அறுபது சிறுவர்களை காப்பாத்தி இருக்கே! உன்னைப் பாத்தவங்க எல்லாம் உன்கிட்ட ஏதோ ஒரு சக்தி இருக்கும்னு சொல்றாங்க! அது உண்மையா? அப்படி ஒரு சக்தி உன்கிட்ட இருக்கா?'' என்று கந்தசாமி நிதானமாகக் கேட்டார்.
''அப்பா... தைரியத்துக்கு இன்னொரு பெயர்தான் சக்தி! நான் ரொம்ப வருத்தத்துல இருந்தப்ப ஒரு சாமியார் எனக்கு ஆசீர்வாதம் பண்ணினார். ஆபத்தான சூழ்நிலையில என்னை நினைச்சா உனக்கு அதிக சக்தி கெடைக்கும்னு சொன்னார். வேற ஒண்ணும் இல்லப்பா,'' என்றான் முகுந்தன்.
அப்படியானால் அந்த பெரியாரின் ஆசிதான் முகுந்தனின் இந்த சக்திக்கும் காரணமாக இருக்கும் என்பதை கந்தசாமி உணர்ந்தார்.
''நீ செய்தது சாதாரணக் காரியம் இல்லை முகுந்தா... இதனால் உனக்கு ஏதாவது ஆபத்து வந்தாலும் வரலாம். நீ ஜாக்கிரதையா இருந்துக்கணும் புரியுதா?''
''சரிப்பா... நேர்மையும், நியாயமும் உண்மையும் நம்மகிட்ட இருக்கறவரைக்கும் நாம யாருக்கும் பயப்பட வேண்டிய இல்லைப்பா...'' என்றான்.
முகுந்தன் படுத்து உறங்கும் அந்தக் காம்பவுண்டுப் பக்கம் ஒரு வெள்ளை நிற மாருதி கார் வந்த நின்றது. அந்தக் காரிலிருந்து லாரி ராஜமணிக்கம் வந்து இறங்கினான். முகுந்தனிடமுள்ள சக்தி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, காவி உடையில் சாமியாரின் தோற்றத்தில் இருந்தான் ராஜமணிக்கம். எப்படியும் அவனிடமிருந்து உண்மையைத் தெரிந்துக் கொண்டு அந்த சக்தியைத் தானும் பெற வேண்டும் என்பதே, ராஜமாணிக்கத்தின் நோக்கமாக இருந்தது.
- தொடரும்
